Published:Updated:

``புள்ளான் என் மூணாவது புள்ளைங்க!" - `கீரி’ கன்னியம்மாள்

``புள்ளான் என் மூணாவது புள்ளைங்க!" - `கீரி’ கன்னியம்மாள்
``புள்ளான் என் மூணாவது புள்ளைங்க!" - `கீரி’ கன்னியம்மாள்

"இத வளர்க்கக் கூடாது, தரித்திரம்... வீட்டுக்குப் பாம்பு வந்துரும்... எப்போவாச்சும் இது அதன் புத்திய காட்டிடும் (தாக்கும்) அப்படினு எல்லாம் சொன்னாங்க ... ஆனா இது எங்க புள்ள போலங்க... அதுனாலதானே பெரியவங்க இதுக்குக் கீரிப்புள்ள-னு பேரு வெச்சிருக்காங்க சொல்லுங்க..."

ன்று மாமண்டூர் ஏரியைச் சுற்றிப் பார்த்துவிட்டு நண்பர்களோடு திரும்பிக்கொண்டிருந்தேன். ஏரி மதகின் மீது ஒரு பெண்மணிக்கு எதிரே கீரிப்பிள்ளை நின்று கொண்டிருந்தது. `அந்தப் பெண்மணியைக் கீரிப்பிள்ளை தாக்க வருகிறதோ' என்ற பதைபதைப்பில் அருகே ஓடிச் சென்றோம். பார்த்தால் அந்தப் பெண்மணி கீரியைப் `புள்ளான்' என்று பெயர் வைத்து அழைத்தவாறு ஏதோ பேசிக்கொண்டிருந்தார். அந்தக் கீரியும் அவர் பேசுவது புரிந்த பாவனையில் கேட்டவாறு நின்றிருந்தது. ஒருகணம் எங்கள் கண்களை நாங்களே நம்பாமல் அருகே சென்றோம். எங்களைப் பார்த்ததும் அருகே ஓடிவந்து கால்களைச் சுற்றி வட்டமிட்டது அந்தக் கீரிப்பிள்ளை. அழகான அந்தக் குட்டியைப் படமெடுக்க கேமராவை எடுத்ததும் விதவிதமாக போஸ் கொடுக்கவும் தொடங்கிவிட்டது. சிரித்தபடியே அந்தக் கிராமத்துப் பெண்மணி எங்களிடம் பேசத்தொடங்கினார்.

``இது பேரு புள்ளா(ன்)ங்க... ஏழு மாசமா எங்ககிட்டதான் இருக்கு. ஒருவாட்டி ஆடு மேய்க்க காலங்காத்தால காட்டுக்குப் போனோம். அப்போ இதோட ஆத்தா கரன்ட்டுல அடிச்சு வயல்ல செத்துப்போயிக் கிடந்தது. உள்ளங்கை அளவுக்கு இந்தக் குட்டி அங்கேயே சுத்திச் சுத்தி வந்துகிட்டு இருந்துச்சு. பார்த்ததும் எனக்குத் திக்குனு ஆகிருச்சு. ஐயோ பாவமேன்னு நெனச்சு இத தூக்கிக்கிட்டு வந்துட்டேன். அப்போ ஒட்டிக்கிட்டதுதாங்க இந்தப் புள்ளான். இப்போ எங்களோட புள்ளையாவே மாறிட்டான். அதிக வயசுலாம் இல்ல. ஏழு மாசம்தான் ஆவுது. ஆனா ரொம்ப அறிவு இவனுக்கு. எங்களை விட்டுட்டு இருக்கவே மாட்டான். எனக்கு ஒரு பொண்ணு. அதக் கட்டிக்குடுத்துட்டோம். ரெண்டு ஆம்பளப் பசங்க. ஸ்கூல் போவுதுங்க. எங்க வீட்டுக்காரர் கூலி வேலை செய்றார். நான் ஆடு மேய்க்கிறேன். எனக்கு காவலா இந்தப் புள்ளான்கூட வரும். காலை-ல 4 மணிக்கு எழுந்து என்கூட உலாத்தும். ராத்திரி 10 மணி வரை என் பின்னாடியே சுத்திக்கிட்டு வரும்.

மூணு வேளையும் இதுக்கு பால் மட்டும்தான் வைக்கிறேன். அதுவா இப்போதான் சுண்டெலி, பூச்சிங்க-னு வேட்டையாடிச் சாப்பிட ஆரம்பிச்சிருக்கு. எங்க எல்லாருக்குமே இது செல்லம். ஆரம்பத்துல அக்கம்பக்கம் இருக்குறவங்க இதக் கண்டு பயந்தாங்க. இப்போ அவங்களுக்கும் இதுனா இஷ்டம். என்கூட மேய்ச்சலுக்கு வரதுன்னா புள்ளானுக்கு ரொம்ப குஷி. காட்டுலதானே அவருக்கு விதவிதமா பூச்சி, பொட்டுங்க கிடைக்கும். அதான்! ரொம்ப தூரம் புதருக்குள்ள ஓடிட்டாலும் சரி, `புள்ளான்' னு ஒரு சத்தம் குடுத்தா போதும் ஓடியாந்துரும். ரெண்டு மூணு வாட்டி காட்டுலயே விட்டுட்டு வந்துருக்கேன். எப்படியோ மோப்பம் புடுச்சி வீட்டுக்கு வந்துருச்சி. ரெண்டு பிள்ளையோடு சேத்து மூணாவது இந்தப் பிள்ளை. எங்க வீட்டுக்காருக்கும் இதுனா ரொம்பப் பிரியம். எங்கனா ஊருக்குப் போனா, இத வீட்டுல விட்டுட்டுப் போவோம். நல்ல மாதிரியா வீட்டுலேயே இருக்கும். திரும்பி வந்துட்டா கால சுத்தி குதியாட்டம் போடும். ரொம்பப் பாசமா இருக்குங்க. அதுனாலயே பயமா இருக்கு. எங்கனா ஓடிப் போயிடுச்சுனா எங்களால தாங்க முடியாதுல்ல... என் பசங்ககூட இதுகூடயே விளையாடிகிட்டு இருப்பானுங்க. சின்னச் சின்ன வண்டெல்லாம் பிடிச்சு இதுக்குப் போடுவானுங்க. புள்ளானுக்கு ஒருவாட்டி என் புள்ளைங்க பட்ட சாக்லேட் வாங்கிட்டு வந்து போட்டானுங்க. அத தின்னுட்டு ஒரே சந்தோஷமாயிடுச்சி. அப்பப்போ காசு கிடைச்சா வாங்கினு வந்து போடுவானுங்க. அதெல்லாம் போடாதன்னு நான்தான் திட்டுவேன். அது பூச்சி, எலிங்கதான் தின்னணும்னு. சரி தானுங்களே...?

இத வளர்க்கக் கூடாது, தரித்திரம்... வீட்டுக்குப் பாம்பு வந்துரும்... எப்போவாச்சும் இது அதன் புத்திய காட்டிடும் (தாக்கும்) அப்படினு எல்லாம் சொன்னாங்க ... ஆனா இது எங்க புள்ள மாறிங்க... இது இஷ்டப்படுற வரை எங்க கூட இருக்கட்டுங்க... அப்புறம் வேணா புள்ளான் அது இஷ்டப்படி எங்கனா காட்டுக்குள்ள ஓடிப்போய் பொழச்சுக்கிட்டும். கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா, நம்மள மாதிரி அதுக்கும் கூட்டம் வேணும்ல" என்று சொல்லிச் சிரிக்கிறார் கன்னியம்மாள். அதுவரை தன் காலையே சுத்திக் கொண்டிருந்த `புள்ளான்' என்று அவர் பெயர் சூட்டிய அந்தக் கீரிப்பிள்ளையைக் கையில் தூக்கிக் கொஞ்சுகிறார். அவரது உடல் சூட்டை உணர்ந்தவாறு புள்ளானும் அவருக்குள்ளேயே மேலும் புதைந்து கொண்டான். அந்தப் பிணைப்பு மனிதனுக்கும் மற்ற உயிர்களுக்குமான நீண்டகால இணைப்பை எங்களுக்கு மீண்டுமொரு முறை உறுதிப்படுத்தியது.

பஞ்ச தந்திரக் கதையில் ஒரு பெண்மணி கீரி வளர்த்த கதையைப் படித்திருப்போம். இங்கு நிஜமாகவே ஒரு பெண்மணி கீரிப்பிள்ளையை வளர்த்து வருகிறார். பாசத்துக்கு எந்தவித பேதமும் இல்லை என்பதை அவ்வப்போது எளிய மக்கள்தான் நமக்கு உணர்த்தி வருகிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டு திரும்பினோம். 

அடுத்த கட்டுரைக்கு