Published:Updated:

உயிருக்குப் போராடிய 1180 உயிர்களைக் காப்பாற்றிய மெக்கானிக்!

"சமீபத்தில் 365 கி.மீ தூரத்தில் ஒரு மானைக் காக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த எங்கள் மைய அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து மற்றொரு அதிகாரி தப்பித்து, வேட்டைக்காரர்களைப் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்."

உயிருக்குப் போராடிய 1180 உயிர்களைக் காப்பாற்றிய மெக்கானிக்!
உயிருக்குப் போராடிய 1180 உயிர்களைக் காப்பாற்றிய மெக்கானிக்!

பீரா ராம் என்ற மெக்கானிக் ராஜஸ்தானில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சர் மற்றும் வாகன பழுது நீக்கும் கடை வைத்திருக்கிறார். இவரின் கதை வழக்கமான மெக்கானிக்குகளின் கதையை விடக் கொஞ்சம் அசாதாரணமானது. கடந்த 10 வருடங்களில் 1180 காயமடைந்த விலங்குகளை இவர் காப்பாற்றியிருக்கிறார் என்றால் நம்பமுடிகிறதா?

"1730-ம் ஆண்டு மார்வார் மன்னராட்சிக் காலகட்டம் அது. ராஜஸ்தானில் இருக்கும் ஜோத்பூர் மாவட்டத்தில் கெஜர்லி (Khejarli Village)  கிராமத்தில் அமிர்தா தேவி என்ற பெண் இருந்தார். அவர் தலைமையில் அவரது மகள்கள் மூன்று பேருடன் சேர்த்து 300 பிஷ்னோய் இன மக்கள் தலை துண்டிக்கப்பட்டு இறந்தனர். அவர்கள் அனைவரும் மரங்களை வெட்டாமல் தடுத்ததற்காக வெட்டிக் கொல்லப்பட்டனர். அவர்களின் வழிவந்த எங்கள் கொள்கை 'எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்ய வேண்டும், பசுமை வாய்ந்த இயற்கையை அழிக்காதீர்கள்' என்பதுதான்" என்கிறார், பீரா ராம்.

மேற்கு ராஜஸ்தானின் எல்லைப் பகுதியில் இருக்கும் சிறு கிராமத்தில் பிறந்தவர், இவர். ஒருபுறம் குஜராத், மறுபுறம் பாகிஸ்தான் எல்லையாக இருக்கிறது. இவர் ஒரு சிறு விவசாயி. சிறு வயதில் குழந்தையாக இருந்தபோது தனது தந்தையுடன் வயல்களில் வேலை செய்திருக்கிறார். அப்போது அவரது வயலுக்குள் மயில்கள், மான்கள் மற்றும் முயல்கள் உள்ளிட்ட விலங்குகள் அடிக்கடி வருகை தரும். அவை வயலில் இருக்கும் பயிர்களை மேயும், சில நேரங்களில் ஓய்வெடுக்கும். 

"இந்த வன உயிரினங்கள் ஏன் பயிர்களை சேதப்படுத்துகின்றன, ஏன் அவற்றை அனுமதிக்கிறீர்கள்?" என அதற்கான காரணங்களை பீரா ராம் தனது பெற்றோரிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவரது அப்பா, "வனவிலங்குகள் மனிதர்களுக்குச் சேதம் விளைவிப்பதில்லை. இந்த உலகம், நீர், நிலம், காற்று, வானம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களால் ஆனது. அதனால் இங்குள்ள ஒவ்வொரு உயிரும் காக்கப்பட வேண்டும். விலங்குகள் அழிந்தால் மனிதர்கள் உயிர் பிழைக்க முடியாது" என்றார். அதன்படியே இன்றும் வாழ்ந்து வருகிறார், பீரா ராம்.
கடந்த பத்து ஆண்டுகளில் கருமந்தி, வெளி மான், கடமான், காட்டு முயல், புனுகு பூனை, நாரை, பாலைவன நரி, மயில் ஆகிய வன உயிரினங்களை ராம் காப்பாற்றியிருக்கிறார். 

தன்னை முதன்முதலாக விலங்குகளைப் பாதுகாக்க தூண்டிய அனுபவங்களை ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பகிர்ந்து கொண்டார், ராம். "எனது கடை நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ளது. அதனால் என்னிடம் வரும் நான்கு சக்கர மற்றும் கன ரக வாகன ஓட்டிகள் விலங்குகள் அதிகமாக அடிபட்டு இறப்பதாகச் சொல்வார்கள். நான் கடை வைத்திருக்கும் இடத்தில் இருந்து 300 கி.மீ சுற்றளவுக்கு அரசாங்க அதிகாரிகளும், வனத்துறை காப்பாளர்களும் இல்லை. கடை, மலைப்பகுதியை ஒட்டித்தான் இருக்கிறது. அதனால் தனி ஒரு மனிதனாக என்ன செய்ய முடியும். அதனால் என்னால் உதவ முடியும் என்ற நம்பிக்கை இருந்தாலும், அதற்கான வழிகள் இல்லை" என்கிறார், ராம்.

உதவ முடியாமல் போனாலும், பிஷ்னோய் இனத்தைச் சேர்ந்த அவரின் ரத்தம் அதற்காக துடித்துக் கொண்டிருந்தது. ஒரு நாள் வழக்கம்போல வீட்டிலிருந்து கடைக்கு பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது சிங்காரா வகை மான் வேகமாக வந்த வாகனத்தால் அடிபட்டு வலியால் துடித்துக் கொண்டிருந்தது. அந்த வலியை இவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. சாலையின் நடுவில் கிடந்த மானை எடுத்து, வண்டியைப் பிடித்து கால்நடை மருத்துவரிடம் கொண்டு சேர்த்தார். தனது சொந்த பணத்தில் செலவு செய்து அந்த மானை மீட்டிருக்கிறார். மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மானுக்கு ஓய்விடம் தேவை என்றனர் மருத்துவர்கள். அதனால் அந்த மானைத் தனது வீட்டிற்குக் கொண்டு சென்றார், பீரே ராம். இதுதான் அவர் காப்பாற்றிய முதல் விலங்கு. இதன் பின்னர்தான் தன்னால் காப்பாற்ற முடியும் என முழுமையாக நம்ப ஆரம்பித்தார்.

Photo Credits - thebetterindia

அடுத்த 5 ஆண்டுகளாகத் தொடர்ந்து வேலை பார்க்கிறார். அப்போது தொடர்ந்து வாகனங்களால் இடர்பாடுகளுக்கு உள்ளாகும் விலங்குகள் மற்றும் பறவைகள் ஆகியவற்றை வீட்டுக்கு எடுத்துச் சென்று கவனமாக பார்த்துக் கொள்கிறார். அவரது குடும்பம் முழுவதும் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு காதலர்களாகத் திகழ்கிறது. அப்போது அவரால் சொந்தமாக அமைப்பைப் பதிவு செய்ய முடியாமல் போனாலும், 2012-ம் வருடம் ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 4 வெவ்வேறு ஆர்வலர்களுடன் இணைந்து 'ஶ்ரீ ஜம்பேஸ்வர் பரயவரன் எவாம் ஜீவ் ரக்‌ஷா பர்தேஷ் சாந்தா' என்ற அமைப்பை ஆரம்பித்தார்.

பீரா ராம் செய்த வேலை அருகில் இருந்த கிராம மக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டது. ஆனால் பணத்துக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் விலங்குகளை வேட்டையாடும் வேட்டைக்காரர்கள் இவர் மீது புகார் கொடுத்தனர். அந்தப் புகாரில், 'பீரா ராம் விலங்குகளைச் சரிவர கவனித்துக் கொல்லவில்லை. அவர் சட்ட விதிகள்படி முறையாக விலங்குகளைக் கையாள்வது இல்லை' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்தப் புகாரின் அடிப்படையில் வன அதிகாரிகளும், காவல்துறையும் இவர் வீட்டிற்குக் கிளம்பி போயிருக்கிறார்கள். அவர்கள் வீட்டுக்குள் வந்த பின்னர் இவர் குடும்பத்துடன் விலங்குகள் கொஞ்சிக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிகாரிகள் வியந்து பாராட்டி சென்றிருக்கிறார்கள். அவர்களிடம் தன் அமைப்பைக் காட்டியிருக்கிறார். அவர்கள் போதிய இடம் இன்மையை உணர்ந்து ராம்க்கு உதவி செய்ய முன்வந்து, அரசாங்க நிலத்தையும் அமைப்பிற்குக் கொடுத்துள்ளனர். அதில் விலங்குகளைப் பராமரிக்கும் மையத்தை அமைத்திருக்கிறார், ராம். ஆனால், எதிரிகள் அதை நாசப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

Photo Credits - thebetterindia

"நான் வேட்டைக்காரர்களுக்கு என்றுமே பயப்படமாட்டேன். மரங்களையும், விலங்குகளையும் நாம் பாதுகாப்பாக வைக்க வேண்டியது நமது கடமை. சமீபத்தில் 365 கி.மீ தூரத்தில் ஒரு மானைக் காக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த எங்கள் மைய அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து மற்றொரு அதிகாரி தப்பித்து, வேட்டைக்காரர்களைப் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். 50*50 அடி தங்கும் இடத்தில் ஆரம்பித்து, இன்று 2.5 ஹெக்டேர் பரப்பளவில் விரிந்து காணப்படுகிறது. இப்போது குழுவில் 2,000 பேர் உறுப்பினராக இருக்கிறார்கள். இப்போது மொத்தமாக 450 விலங்குகளைப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் 1,180 விலங்குகளையும், பறவைகளையும் காப்பாற்றியிருக்கிறேன். ஒரு சாதாரண விவசாயியின் மகன் 1000 உயிர்களைக் காக்க முடிகிறது என்றால், நாம் அனைவரும் கைகோத்தால் எவ்வளவு உயிர்களைக் காக்க முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள்" என்கிறார், பீரா ராம்.

இவருக்கு ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து அறக்கட்டளை (Royal Bank of Scotland Foundation), 'பூமியின் நாயகன்' விருதை வழங்கிக் கவுரவித்திருக்கிறது.