Published:Updated:

"பழங்குடி மக்களால் விஞ்ஞானிகளுக்கே உதவமுடியும்!" - ரோமுலஸ் விட்டேகர்

"பழங்குடி மக்களால் விஞ்ஞானிகளுக்கே உதவமுடியும்!" - ரோமுலஸ் விட்டேகர்

"வளர்ந்தவர்களின் அறிவும் மனமும் ஏதோ ஒருவகையில் திட்டமிடப்பட்டதாக இருக்கும். நமக்குக் கிடைத்த அறிவை வைத்துப் பெரும்பாலும் நமது நம்பிக்கையை நமக்குத் தெரிந்தவற்றை நியாயப்படுத்தவே முயற்சி செய்கிறோம். ஆனால் குழந்தைகள் அப்படியில்லை."

"பழங்குடி மக்களால் விஞ்ஞானிகளுக்கே உதவமுடியும்!" - ரோமுலஸ் விட்டேகர்

"வளர்ந்தவர்களின் அறிவும் மனமும் ஏதோ ஒருவகையில் திட்டமிடப்பட்டதாக இருக்கும். நமக்குக் கிடைத்த அறிவை வைத்துப் பெரும்பாலும் நமது நம்பிக்கையை நமக்குத் தெரிந்தவற்றை நியாயப்படுத்தவே முயற்சி செய்கிறோம். ஆனால் குழந்தைகள் அப்படியில்லை."

Published:Updated:
"பழங்குடி மக்களால் விஞ்ஞானிகளுக்கே உதவமுடியும்!" - ரோமுலஸ் விட்டேகர்

சியாவிலேயே முதல்முறையாக முதலைகளின் இனப்பெருக்கச் செயல்முறைகளையும் அவற்றின் மனநிலையையும் புரிந்துகொண்டவர் ரோமுலஸ் விட்டேகர். முதலைகள் மட்டுமன்றி பாம்புகள், பல்லி வகைகள் என்று அனைத்து வகையான ஊர்வன உயிரினங்களையும் மக்கள் ஒருவகை பயத்தோடும் அருவருப்போடுமே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதை மாற்றி இவற்றின் சூழலியல் முக்கியத்துவத்தையும், அவற்றைப் பற்றிய அறிவையும் சாதாரண மக்கள் வரை கொண்டு சேர்த்தவர். 40 ஆண்டுகளுக்கு முன் முதலைகளுக்கென அவர் உருவாக்கிய முதலைகள் பண்ணை இன்றும் சென்னையின் அடையாளங்களில் முக்கியமான ஒன்றாக இருந்துவருகிறது. விகடனுக்கு அவர் பிரத்யேகமாக அளித்த பேட்டி.

``முதலைகள் பண்ணையிலிருந்தே தொடங்குவோமே! முதலைகளுக்கென ஒரு காப்பிடத்தை உருவாக்க வேண்டுமென்று உங்களுக்கு எப்படித் தோன்றியது?"

``முதலில் 1972-ம் ஆண்டு கிண்டி மெட்ராஸ் பாம்புகள் பூங்காதான் தொடங்கினோம். பாம்புகள், பல்லி வகைகள், ஆமைகள் போன்றவற்றை மட்டுமே பராமரித்துக் கொண்டிருந்தோம். இவற்றோடு எங்களிடம் இரண்டே இரண்டு முதலைகள் இருந்தன. சில மாதங்களில் அவை இனப்பெருக்கம் செய்து முட்டைகளிடத் தொடங்கின. முதலைகளைப் பராமரிப்பிலும் இனப்பெருக்கம் செய்ய முடியுமென்பதை நாங்கள் அப்போதுதான் தெரிந்துகொண்டோம். ஆனால், அதைச் செய்ய அந்த இடம் போதுமானதாக இல்லை. 1970 முதல் நான் இந்தியா முழுவதும் முதலைகள் சர்வே எடுத்துக்கொண்டிருந்தேன். அவை எண்ணிக்கையில் மிகவும் குறைந்துகொண்டிருந்தன. உப்புநீர் முதலைகள், கரியால், மக்கர் வகை முதலைகள் போன்றவை கிட்டத்தட்ட அழிவின் விளிம்புக்கே சென்றுகொண்டிருந்தன. இவற்றால் காப்பிடங்களுக்குள் இனப்பெருக்கம் செய்யமுடியுமென்று தெரிந்துகொண்டபோது ஏன் அதைச் செய்து எண்ணிக்கையைப் பெருக்கக் கூடாதென்று தோன்றியது. அந்தச் சிந்தனையின் விளைவாகத்தான் முதலைப் பண்ணை தோன்றியது."

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``முதல் பாம்பைப் பிடித்தபோது உங்களுக்கு என்ன வயதிருக்கும்? அம்மா உங்களைக் கண்டிக்காமல் ஆதரித்து ஊக்குவித்ததாகக் கேள்விப்பட்டேன். அதையே ஊர்வன உயிரினங்கள் மீதான உங்கள் ஆர்வத்துக்குத் தொடக்கமாக நாங்கள் எடுத்துக்கொள்ளலாமா?"

``நிச்சயமாக. குழந்தைகளுக்குச் சாதாரணமாகவே சிறிய உயிரினங்கள் மீது ஆர்வம் அதிகம். அவற்றைத் தொட்டுப்பார்க்கவும், அவை செய்வதைக் கவனிக்கவும் அதிக நேரங்களைச் செலவிட நினைப்பார்கள். ஆனால், பெற்றோர்கள் அப்படியில்லை. குழந்தைகள் அதுபோன்று செய்தாலே 'அதைத் தொடாதே. இந்தப் பக்கம் வா. அது கடித்துவிடும், காயப்படுத்திவிடும்' என்றெல்லாம் பயமுறுத்தி ஒதுக்கிவிடுவார்கள். என் அம்மா அப்படி இருக்கவில்லை. `ஆஹா எவ்வளவு அழகாக உள்ளது. நீ ரொம்பவும் தைரியசாலிதான்' என்று என்னை ஊக்குவித்தார். அத்தகைய அம்மா எனக்குக் கிடைத்ததற்கு நான் மிகவும் அதிர்ஷ்டம் செய்திருக்கவேண்டும்."

``நீங்கள் பிடித்த முதல் விஷமுள்ள பாம்பு எது?"

``அப்போது எனக்கு 12 வயதிருக்கும். கொடைக்கானலில்தான் என்னுடைய பள்ளிப் பருவத்தைக் கழித்தேன். வழக்கமாகப் பள்ளிக்குச் செல்லும் காட்டுப்பாதையில் ஒருநாள் நடந்துசென்றுகொண்டிருந்தேன். பேரிஜன் ஏரி வழியாகத்தான் செல்லவேண்டும். அந்த ஏரியில் ஒரு பாம்பு நீந்திக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். அதுவரைப் பார்க்காததாக இருந்தது. அந்த ஊரைச் சேர்ந்த எனது நண்பன் நீண்ட குச்சியில் வலைகளைப் பின்னி பட்டாம்பூச்சிகளைப் பிடித்துக்கொண்டிருந்தான். அவற்றைப் படமெடுப்பதும் அவற்றை ஆராய்ச்சி செய்வதுமாகவே சுற்றிக் கொண்டிருப்பான். அதை வாங்கி அந்தப் பாம்பைப் பிடித்தேன். என் ஜியாமெட்ரிக் பாக்ஸில் அதைப் போட்டுப் பள்ளிக்குக் கொண்டு சென்றேன். எனது உயிரியல் ஆசிரியர் அதை ஒரு கண்ணாடித் தொட்டியில் போட்டுவைத்து அதைப் பற்றி எங்களுக்குப் பாடமெடுத்தார். அப்போதுதான் அது கண்ணாடி விரியன் என்று தெரிய வந்தது. நல்லவேளையாக அதை நான் நேரடியாகக் கையில் பிடிக்கவில்லை."

``முதல்முறை அத்தகைய ஆபத்தான பாம்பைப் பிடித்துள்ளீர்கள். அதைக் கண்ணாடித் தொட்டியில் வைத்திருந்தபோது நீங்கள் அதன் நடத்தைகளை உற்றுநோக்கினீர்களா?"

``ஆம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது எதுவுமே செய்யவில்லை. ஒளிந்துகொள்வதில்தான் அதிகம் முனைப்பு காட்டியது. அது ஒன்றும் அவ்வளவு ஆபத்தானதாகத் தெரியவில்லை. பாவம் மிகவும் பயந்துபோயிருந்தது. இவ்வளவு பயந்துபோகும் ஒரு பிராணியை மக்கள் அவ்வளவு ஆபத்தானதாகக் கருதுகிறார்களே என்றுதான் எனக்குத் தோன்றியது."

``நீங்கள் கேரளாவின் சைலன்ட் பள்ளத்தாக்கு (Silent Valley) குறித்து ஆவணப்படம் எடுத்துள்ளீர்கள். அந்தச் சமயத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள், அடர்த்தியான சேற்று நிலமே அதிகமிருந்த அந்த வனப்பகுதியில் உங்களுடைய அனுபவங்கள் போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா?"

Photo Courtesy: Sarvana Kumar

``அதைப்போன்ற அடர்ந்த மழைக்காட்டில் மக்கள் பயப்படும் முதல் விஷயம் அட்டைகள். அந்த அட்டைகள் நம் உடலில் ஒட்டிக்கொண்டு ரத்தத்தை உறிஞ்சிக்கொண்டே இருக்கும். ஆரம்பத்தில் அது எங்களுக்கு மிகவும் தொந்தரவாகத்தான் தெரிந்தது. போகப்போக நாங்கள் அதற்குப் பழகிக்கொண்டோம். `உனக்கென்ன ரத்தம்தானே வேண்டும். இந்தா குடித்துக்கொள்' என்று விட்டு விடுமளவிற்கு வெறுத்துவிட்டோம். அதைப்போன்ற அனுபவங்கள் அதற்கு முன் எங்களுக்குக் கிடைத்ததில்லை. அதனால் என்ன மாதிரியான பாதுகாப்புகளைச் செய்துகொண்டு சென்றிருக்க வேண்டுமென்பதைச் சிந்திக்காமல் அப்படியே கிளம்பிவிட்டோம். வெறும் தார்பாயில்தான் தூங்குவோம், அந்தப் பகுதி முழுவதும் ஈரமாகவே இருக்கும். அங்கு நம்மை உலர வைத்துக்கொள்ளவே முடியாது. எப்போதும் ஈரப்பதத்தோடு இருந்ததால் கைகால்கள் ஈரத்தில் ஊறிப்போய் நடக்கவே சிரமமாக இருக்கும். இரண்டு வாரங்கள் அங்கிருந்தோம். அதற்கான பலன்களைப் பார்க்கும்போது அந்த சிரமங்கள் ஒன்றுமேயில்லையென்று தோன்றியது. அதோடு அடுத்து வந்த இதுமாதிரியான பயணங்களுக்கு நாங்கள் பாதுகாப்பு உபகரணங்களோடு செல்லப் பழகிக் கொண்டோம்."

``சூழலியல் பத்திரிகையாளர்களுக்குச் சுற்றுச்சூழல் சார்ந்த ஆர்வத்தைத் தூண்டிவிடுவது சைலன்ட் பள்ளத்தாக்குப் போராட்டங்களே. இன்னமும்கூட அந்த நிகழ்வு பெரும்பாலானவர்களுக்கு ஓர் உந்துதலாக இருந்துவருகிறது. அத்தகைய வரலாற்று நிகழ்வில் நீங்களும் முக்கியப் பங்கு வகித்துள்ளீர்கள். அதைப்பற்றிச் சில வார்த்தைகள்..."

``ஆம், அந்த மொத்தப் பிரச்னையுமே கிட்டத்தட்ட நாடு முழுவதும் ஒரு சூழலியல் பேரார்வத்தை மக்கள் மத்தியில் தூண்டிவிட்டது. அரசு பார்க்கும் இடங்களிலெல்லாம் அணைகளைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். அது சுற்றுச்சூழலுக்கோ மக்களுக்கோ என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்துமென்தைப் பற்றி அவர்கள் சிந்திக்கவேயில்லை. அந்தச் சர்ச்சைக்கும் முன்பே தனிப்பட்ட முறையில் நான் அங்கு சென்றிருந்தேன். என் ஆராய்ச்சிக்காக அங்கிருக்கும் பாம்பு வகைகளைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக. அப்போது குந்திப்புழா (Kunthipuzha) நதிக்கு அருகில் ஜென்ரேட்டர் ஜீப் நிறுத்தப்பட்டிருப்பதைப் பார்த்தேன். ``இந்தக் காட்டுக்குள் ஜெனரேட்டருக்கு என்ன வேலை?" என்ற கேள்வியை அங்கிருந்த மின்வாரியப் பணியாளர்களிடம் கேட்டேன். அணை கட்ட வேண்டுமென்று அங்கிருக்கும் பாறைகளை வெடிக்கச் செய்வதாகச் சொன்னார்கள். ஆனால் காட்டுக்குள் இதைச் செய்வது நல்லதில்லையென்று தோன்றியது. உலக வனவிலங்கு நிதியத்துக்கு (World Wildlife Fund) 1973-ம் ஆண்டு இதைப்பற்றிச் செய்திமடல் எழுதினேன். அதன்பிறகு அது பெருவாரியான சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. பிரச்னையின் வீரியத்தை வெளிப்படுத்தியதில் நானும் ஒரு பங்கு வகித்தேன் என்று நினைக்கும்போது பெருமிதமாக உள்ளது."

``பழங்குடி மக்களுக்குக் காடுகள், காட்டுயிர்கள் மற்றும் அவற்றின் பாதுகாப்பு குறித்து அறிவியல் ரீதியிலான தெளிவும் திறனும் மரபுரீதியாகக் கடத்தப்படுவதாகச் சொல்லப்படுகிறது. அது உண்மையா? காடுகளைப் பராமரிப்பதில் அவர்களின் பங்கு முக்கியமானதா?"

``மரபுசார் அறிவு இருக்கிறதா என்று எனக்குத் தெரியாது. ஆனால், முன்னோர்களால் கற்பிக்கப்பட்டுப் பல விஷயங்கள் அவர்களிடம் சேகரிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குக் காடு குறித்தும், காட்டுயிர் குறித்தும் அனுபவ அறிவு அதிகமாக உள்ளது. அவற்றைப் பாதுகாக்க அவர்களின் அந்த அறிவு மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை. விலங்குகளின் பழக்க வழக்கங்கள், நடத்தைகள் தொடர்பான அறிவியல் பெட்டகமாக அவர்கள் இருக்கிறார்கள். அவர்களால் விஞ்ஞானிகளுக்கே உதவமுடியும்."

``ஜப்பானில் ஸாமா (Zama camp) என்ற அமெரிக்காவின் ராணுவ முகாமில் பி.எஃப்.சி ஆய்வுக்கூடத்தில் பணிபுரிந்துள்ளீர்கள். போரை வெறுக்கும் நீங்கள் ராணுவத்தோடு அதுவும் வியட்நாம் போரின்போது அங்கிருந்துள்ளீர்கள். அந்த அனுபவம் எப்படியிருந்தது? "

``ரத்த வங்கிக்கு நான் அதிகாரியாக இருந்தேன். போரில் பாதிக்கப்படுவோருக்குத் தேவையான ரத்தம் வழங்கவேண்டியது என் வேலையாக இருந்தது. சண்டையில் காயம்படுவோருக்கு நேரடியாகப் போர்க்களத்திற்கே உடனடியாக ரத்தச் சேவை செய்வது அமெரிக்கப் போர் வரலாற்றில் அதுவே முதல்முறை. முன்பெல்லாம் அதைச் செய்வதற்கான தொழில்நுட்பங்கள் இல்லாமலிருந்தது. ஜப்பானில் ஒவ்வொரு வாரமும் 500 மில்லி லிட்டர் பேக்குகளாக 5,000 பேக்குகளை நான் சேமித்துக்கொண்டிருந்தேன். சில அவசரக் காலங்களில் ஒரே நாளில் 5,000 பேரிடம் ரத்தம் எடுக்கவேண்டிய சூழல்கூட ஏற்பட்டுள்ளது. அதை ஐஸ் பெட்டியில் வைத்து ரத்தத்தின் வகைப்பிரிவு விவரங்கள், எண்ணிக்கை உட்பட அனைத்தையும் பதிவுசெய்து அனுப்பிவைப்பது என் வேலையாக இருந்தது. இயந்திரங்களைப்போல் வேலை செய்ய வேண்டியிருந்தது. போர்மீது எனக்கு உடன்பாடில்லை. இருந்தும் சூழ்நிலை காரணமாக அங்கு மாட்டிக்கொண்டேன். பிற்காலத்தில் அந்த மாதிரியான பணிகளில் நான் ஈடுபடவேயில்லை."

Photo Courtesy: Cedric Bregnard

``நீங்கள் குழந்தைகளுக்கு அதிகமான முக்கியத்துவம் தருகிறீர்கள். ஏன்?"

``அங்குதான் எல்லாம் தொடங்குகிறது. வளர்ந்தவர்களின் அறிவும் மனமும் ஏதோ ஒருவகையில் திட்டமிடப்பட்டதாக இருக்கும். நமக்குக் கிடைத்த அறிவை வைத்துப் பெரும்பாலும் நமது நம்பிக்கையை நமக்குத் தெரிந்தவற்றை நியாயப்படுத்தவே முயல்கிறோம். ஆனால் குழந்தைகள் அப்படியில்லை. அவர்களின் கேள்வியில் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தைத்தவிர வேறெதுவும் இருக்காது. அவர்களிடம் முன்முடிவுகள் இருக்காது. அதோடு நான் முன்பே சொன்னதுபோல் குழந்தைகளுக்குச் சிற்றுயிர்கள் மீதான ஆச்சர்யங்கள் அதிகமாக இருக்கும். சிற்றுயிர்களின் பாதுகாப்பைப் பற்றி அவர்களுக்கு எளிமையாகப் புரியவைக்கலாம். நம் சூழலியல் அக்கறையை அவர்களுக்கு கற்றுக்கொடுப்பதில் இருந்துதான் தொடங்கவேண்டும். ஏன் நானும்கூடச் சிறுவயதில் வண்டுகள், எறும்புகளின் செயல்களை நாள் முழுக்கக் கவனித்துக்கொண்டிருந்துள்ளேன். அதை நாம் வளர்த்தெடுத்தால் அடுத்த தலைமுறையையாவது இயற்கைப் பற்றோடு வாழவைக்கலாம்."

``இருளர் பழங்குடியின மக்களுக்காக நீங்கள் செய்தது வரலாற்றில் பதிக்கப்பட வேண்டிய முக்கியமான செயல். அவர்களுடனான உங்கள் முதல் சந்திப்பு எப்படி நிகழ்ந்தது? அவர்களின் பாம்புகள் குறித்த அறிவு பற்றி..."

``1960-களில் கல்லூரிப் படிப்புக்காக நான் அமெரிக்காவுக்குத் திரும்பினேன். ஆனால் அதில் எனக்கு உடன்பாடில்லாமல் போனதால், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் பயணித்துக்கொண்டேயிருந்தேன். இங்கிருக்கும் பாம்புகளைப் பிடித்து அதன் விஷத்தை மட்டும் சேகரித்துக்கொண்டு விட்டுவிடுவேன். விஷமுறிவு மருந்து தயாரிப்பதற்கு விஷமே மூலப்பொருளாக இருக்கிறது. அதைச் சேகரித்து அமெரிக்காவிலுள்ள விஷமுறிவு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்றுக்கொண்டிருந்தேன். அப்போது இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் பணிபுரிந்த ஹாரி மில்லர் (Harry Miller) என்ற பத்திரிகையாளர் இருளர்களைப் பற்றி எழுதியிருந்ததைப் படிக்க நேர்ந்தது. பிறகு அவர் மூலமாக இருளர்களைச் சந்தித்தேன். இருளர்கள் மிக அமைதியானவர்கள். என்னைப் போன்ற ஒத்த சிந்தனையுடைய என் நண்பர்கள்.

Photo Courtesy: Subagunam Kannan

அவர்கள் பாம்புத் தோலுக்காக அவற்றைப் பிடித்துத் தொழிற்சாலைகளுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். பல்லாண்டு காலமாகப் பாம்புகளோடே வாழ்ந்துகொண்டிருந்தவர்கள். தோலுக்காகப் பாம்புகளைப் பிடிக்கக்கூடாதென்று சட்டம் வந்தபிறகு அவர்களுக்கு வேறு வழியில்லாமல் போனது. பல 100 வருடங்களாக அவர்கள் அதைத்தான் செய்துவந்தார்கள். அந்தச் சமயத்தில் விலங்குக் கடத்தல் மற்றும் வேட்டையில் சட்டவிரோதமாக இயங்கும் குழுக்கள் அவர்களைப் பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள். நான் 1968-ல் அவர்களைச் சந்தித்தேன். நான் செய்யும் விஷம் சேகரிக்கும் முயற்சியை ஒரு தொழிலாக மாற்றினால் இவர்கள் இந்த மாதிரியான விஷயங்களில் மாட்டிக்கொள்ள மாட்டார்கள் என்று புரிந்துகொண்டு அவர்களையும் என் முயற்சியில் ஈடுபடுத்தினேன். அன்றிலிருந்து இன்று வரை அவர்கள் பாம்பு விஷம் சேகரிப்பதிலும், எங்கேனும் பாம்புகளால் பிரச்னைகள் ஏற்பட்டால் அவற்றைப் பிடித்துவந்து பராமரிப்பதும், சரியான வாழிடத்தில் வெளியிடுவதுமாகப் பலவற்றைச் செய்துவருகிறார்கள். தற்போது இந்தியாவின் பெரும்பான்மைப் பகுதிகளில் விஷமுறிவு மருந்து தயாரிக்கத் தேவையான விஷத்தை இவர்கள்தான் விநியோகிக்கிறார்கள்."

``அமெரிக்காவில் ஆசிய மலைப்பாம்புகள் ஆதிக்க உயிரினமாக மாறி அங்கிருந்த மற்ற உயிரினங்களுக்கு வாழிடப் போராட்டத்தை ஏற்படுத்தியது. அந்தச் சமயத்தில் உங்களோடு சேர்ந்து இயங்கிவந்த இருளர்களில் இரண்டு பேர் அங்கு சென்று பல ஆயிரம் மலைப் பாம்புகளைப் பிடித்ததாகக் கேள்விப்பட்டேன். அந்த நிகழ்வைப் பற்றி?"

...

-தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism