Published:Updated:

21 கி.மீ. நெடுஞ்சாலை; கூடவே ஒரு கோயில்... வதைபடும் சரிஸ்கா வனப்பகுதி விலங்குகள்!

ஒவ்வொரு முறையும் கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து சென்றவுடன், அங்குக் குவிந்துகிடக்கும் பிளாஸ்டிக் உட்பட அனைத்துக் கழிவுகளையும் அப்புறப்படுத்தத் தனிப்படையே அமைக்கவேண்டும். இது மக்கள் மத்தியிலிருக்கும் ஆன்மிக நம்பிக்கை சார்ந்த விஷயம் என்பதால் ஆய்வாளர்கள், வனத்துறை அதிகாரிகள் என்று யாராலுமே இதை எதிர்க்க முடிவதில்லை.

21 கி.மீ. நெடுஞ்சாலை; கூடவே ஒரு கோயில்... வதைபடும் சரிஸ்கா வனப்பகுதி விலங்குகள்!
21 கி.மீ. நெடுஞ்சாலை; கூடவே ஒரு கோயில்... வதைபடும் சரிஸ்கா வனப்பகுதி விலங்குகள்!

செம்மீசைச் சின்னான் வரவேற்க உள்ளே நுழைந்தோம். வாசலிலேயே சாம்பல் மந்திக் குரங்குகள் அடிப்படைச் சிந்தனையின்றி நாம் பழக்கிவிட்ட காரணத்தால் ஏதாவது கொடுப்பார்களென்று எதிர்பார்த்துக் காத்திருந்தன. அந்த வேதனைக்குரிய நிகழ்வைக் கடந்து சென்ற வாகனத்தோடு மனம் கடந்து செல்லவில்லை. நாம் என்ன செய்து வைத்திருக்கிறோம் என்பதன் அடையாளமாக அமர்ந்திருந்தன சாம்பல் மந்திகள். புலிகளைத் தேடிச் சென்ற எங்களைக் குரங்குகளின் செயற்பாடுகள் வேதனையடையச் செய்தது. அதைக் கடந்து உள்ளே நுழைந்தால் சரிஸ்காவின் புலிகள் சந்திக்கும் பிரச்னைகள் அதைவிட ஆபத்தானதாக இருந்தன. வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்த பூஞ்சைப் பருந்தும் நிச்சயம் எங்களைப் பார்த்திருக்கும். அதன் கூர்மையான கண்களில் படாத உயிரினங்கள் இருக்க முடியுமா!

கண்ணில் பட்டால் மட்டும் அதனால் என்ன செய்துவிட முடியும்? தினமும்  நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான மனிதர்களைப் பார்த்துப் பழகிவிட்ட அதனால் நோட்டமிடுவதைத் தாண்டி என்ன செய்துவிட முடியும்? காட்டின் கம்பீரம் கௌரவம் என்றெல்லாம் நாம் பெருமையடித்துக் கொள்ளும் புலியே அங்கு பதுங்கிப் பம்பித்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறது. பாவம் பூஞ்சைப் பருந்தால் மட்டும் எதைச் சாதித்துவிட முடியும்? அதனால், அந்தத் தேசியப் பூங்காவுக்குள் அமைந்திருக்கும் கோயிலைத்தான் என்ன செய்துவிட முடியும்? ஆன்மிகம் என்ற பெயரில் தன் வாழிடத்தை ஊடுருவும் ஆயிரக்கணக்கான மனிதர்களைத்தான் தடுத்துவிட முடியுமா!

கடவுள் என்று வந்துவிட்டால் வேறு எதுவாக இருந்தாலும் மனிதன் மறந்துவிடுவான் அல்லது மறுத்துவிடுவான். அப்படியிருக்கக் காட்டையும் காட்டில் வாழும் உயிரினங்களையும் பற்றிய கவலை மட்டும் அவ்வளவு முக்கியமானதாகவா தோன்றும். அதை உணர்ந்துதான் பறந்து கொண்டிருந்தது அந்தப் பருந்து. அதன் கண்களில் கூரிய பார்வையோடு வீரியமிக்கக் கோபமும் கலந்தே இருந்தது. ஆனால், அந்த அப்பாவிப் பருந்தால் வலிமைமிக்க மனிதர்களை என்னதான் செய்துவிட முடியும்? பூஞ்சைப் பருந்து மட்டுமல்ல, 14 புலிகளின் வாழிடமான அந்த சரிஸ்கா தேசியப் பூங்காவில் வாழும் ஒவ்வோர் உயிரினத்திடமும் இந்தக் கோபம் நிச்சயம் கொழுந்துவிட்டுக் கொண்டிருக்கும். நிம்மதியாக வாழ விடாமல் அனுதினமும் அவற்றின் அமைதியைக் குலைத்துக் கொண்டிருக்கும் மனிதர்கள் மீது. அங்குச் செல்லும்போது அதுவொரு தேசியப் பூங்கா என்றோ பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்றோ சிறிதேனும் சிந்தித்திருந்தால் அந்த விலங்குகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும். அது நிகழவில்லை. அந்தக் கோயிலுக்குச் செல்லும் யாருமே அப்படி நினைக்கவில்லை. ஒரு நாளோ வருடத்தின் சில நாள்களிலோ நடப்பதல்ல இந்த அவலம். இது வாரந்தோறும் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் நடக்கும் பேரவலம்.

Photo Courtesy: Shashank Birla

சரிஸ்கா தேசியப் பூங்கா. தன் வரலாற்றில் மிகப்பெரும் அவமானங்களைச் சந்தித்துத் தற்போதுதான் மீண்டெழுந்து வந்து கொண்டிருக்கிறது. அதன் வரலாற்றைப் பற்றிப் பேச வேண்டுமென்றால் சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்திலிருந்து தொடங்க வேண்டும். ராஜஸ்தானின் ஆள்வார் மாவட்டத்தில் ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்திருக்கும் அந்த வனப்பகுதி அரசர்களாலும் நில உடைமையாளர்களாலும் வேட்டைத் தளமாகப் பயன்படுத்தப்பட்டது. சுதந்திரத்துக்குப் பின் அவர்கள் கட்டுப்பாட்டிலிருந்த வனப்பகுதி அரசாங்கக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 1958-ம் ஆண்டு முதல் அது தேசியப் பூங்காவாக அங்கீகரிக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் சட்டவிரோத வேட்டைகள் அதிகரிக்கத் தொடங்கின. அந்தப் பிரச்னை எந்த அளவுக்குக் கொண்டு சென்றதென்றால், 1973-ம் ஆண்டு நாட்டில் ஒன்பது பகுதிகள் புலிகள் சரணாலயங்களாகத் தேர்வு செய்யப்பட்டபோது அதில் சரிஸ்காவை ஒதுக்கிவிட்டனர். ஒரு காலத்தில் அதிகமான புலிகளின் வாழிடமாக இருந்த சரிஸ்காவுக்கு இது மிகப்பெரிய அவமானமாகவே கருதப்பட்டது. இந்த நிலை மேலும் தொடரவே, அங்குத் தொடர்ந்த அதீத வேட்டை அந்த வனப்பகுதியின் காட்டுயிர்கள் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்தது. புலியின் முக்கிய உணவான கடமான்களின் எண்ணிக்கை அதிர்ச்சிக்குரிய வகையில் மிகவும் குறைந்தது. இதன் விளைவாக 1979-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பிராஜெக்ட் டைகர் திட்டத்தில் இதுவும் இணைக்கப்பட்டது. அதன்பிறகுதான், சரிஸ்காவின் புதியதொரு சகாப்தம் தொடங்கியது.

மிகப்பெரிய போராட்டத்துக்குப் பின், பல அறிவியல்பூர்வ ஆய்வுகளுக்குப் பின் தற்போது அங்குப் புலிகளின் எண்ணிக்கையும் அதற்கான இரை விலங்குகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. தற்போது அங்கு 14 புலிகள் வாழ்கின்றன. அவற்றுக்கான இரை விலங்குகளின் எண்ணிக்கையும் ஓரளவுக்கு அதிகமாகிவிட்டது. ஆனால், இன்னமும் அங்கு வாழும் காட்டுயிர்களின் வாழிடச் சிக்கல்கள் தீர்ந்தபாடில்லை. சரிஸ்காவில் வாழும் காட்டுயிர்களுக்குப் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. விலங்குக் கடத்தல் மற்றும் வேட்டை, காடழிப்பு, வாழிடக் குறைபாடு, மனித-காட்டுயிர் எதிர்கொள்ளல் (Human-wildlife conflict), பண்டுபோல் ஆஞ்சநேயர் கோயில் போன்ற பிரச்னைகளை எவ்வளவு முயன்றாலும் சரிசெய்ய முடியாமல் அங்கிருக்கும் வனத்துறையும் ஆய்வாளர்களும் திணறுகின்றனர்.

Photos Courtesy: Subagunam Kannan

சரிஸ்கா தேசியப் பூங்காவின் வாசலிலேயே சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்த்திருக்கும் சாம்பல் மந்திக் குரங்குகள்.

வனப்பகுதிக்கு உள்ளேயே 28 கிராமங்கள் உள்ளன. அதிலும் 11 கிராமங்கள் தேசியப் பூங்காவுக்கு உள்ளேயே அமைந்துள்ளன. வனப்பகுதியைச் சுற்றிச் சுமார் 300 கிராமங்கள் அமைந்துள்ளன. இதிலிருக்கும் பெரும்பாலானவர்கள் பழங்குடியின மக்கள். சரிஸ்கா வனப்பகுதியையும் அதில் கிடைக்கும் வனப் பொருள்களையும் சார்ந்தே இவர்களின் வாழ்வாதாரம் அமைந்துள்ளது. அதிலும் குஜார் இனத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள்தான் அதிகம் வசிக்கிறார்கள். அவர்கள் கால்நடைகளைச் சார்ந்து வாழக் கூடியவர்கள். கால்நடைகள் அதிகமாக இருப்பதால், புலிகள், கடமான், நீல்காய் (Nilgai) போன்ற விலங்குகளை வேட்டையாடுவது போலவே கால்நடைகளையும் அடித்துச் சாப்பிடத் தொடங்கிவிட்டன. நடைமுறையை உணர்ந்திருந்த அவர்கள் இதைப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. புலிகளுக்கும் உணவு தேவைப்படுமல்லவா என்பது போன்ற மனநிலையிலேயே இதை அணுகுகின்றனர். இருப்பினும் வனத்துக்குள் வாழும் கிராம மக்களின் கால்நடைகள் வேட்டையாடப்பட்டால் அதற்கான இழப்பீட்டை வழங்குவதற்கான முயற்சிகளையும் வனத்துறை மேற்கொள்கிறது.

அங்கிருக்கும் மனித-காட்டுயிர் சிக்கல்களைக் களைய புலிகளின் வாழிடத்தை மீட்டெடுக்க அங்கேயே வாழும் பழங்குடி மக்களை வெளியேற்ற முயல்கிறது வனத்துறை. ஆனால், அவர்களைவிட அதிகமாக வனத்துறைக்கே அந்த நிலப்பகுதியைப் பற்றித் தெரியாது. பழங்குடிகளின் பங்கையும் வனப் பாதுகாப்பில் இணைத்துக் கொண்டால் சரிஸ்காவின் எதிர்காலம் நிச்சயம் ஆரோக்கியமானதாகவே அமையும். அதற்குச் செய்ய வேண்டியதெல்லாம் வனத்துறை பழங்குடிகளின் முக்கியத்துவத்தை உணரவேண்டியது மட்டுமே. தேசியப் பூங்காக்கள், சரணாலயங்கள் எல்லாம் கடந்த சில பத்தாண்டுகளில் வந்ததுதான். ஆனால், அவர்கள் அங்கேயே பல நூற்றாண்டுகளாக வாழ்கிறவர்கள். அவர்களைவிடத் தெளிவாக யாராலுமே அந்தக் காட்டைப் புரிந்திருக்க முடியாது. எனவே அதை உணர்ந்து வனத்துறை முறையான திட்டமிடலோடு செயல்பட வேண்டும்.

வனத்துறையைப் போல் அல்லாமல் பழங்குடிகளின் தேவையை உணர்ந்த கடத்தல் கும்பல்கள் அப்பாவிப் பழங்குடிகளை லாகவமாகப் பயன்படுத்தி லாபம் பார்த்தார்கள். ஆனால், வனத்துறை அவர்களின் பங்கை உணரவில்லை. 2004-ம் ஆண்டு வரையிலுமே வேட்டை ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்துவந்தது. விலங்குக் கடத்தல் கும்பல்கள், பழங்குடியின மக்களில் வேட்டைச் சமூகங்களான பவேரியா, மேவ், பஞ்சாரா போன்ற சமூகங்களைத் தம் சுயலாபத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். இரவு பகலாக ரோந்துப் பணிகளில் ஈடுபடுவது, ரேடியோ காலரிங் (Radio Collaring) முறையில் புலிகளைக் கண்காணிப்பது என்று பல்வேறு பாதுகாப்பு மற்றும் அறிவியல்பூர்வ நடவடிக்கைகளால் தற்போது வேட்டைகள் பெருமளவில் குறைந்துவிட்டன. இன்னமும் வேட்டை அபாயங்கள் இருந்தாலும், அதற்கான வாய்ப்புகளை வனத்துறையின் தீவிர கண்காணிப்பு குறைத்துவிட்டது. விலங்குகள் மீதான வேட்டைக் குறைந்துவிட்டது. அதற்கு மாறாக அவற்றின் வாழிடங்கள் மீதான வேட்டைத் தொடங்கிவிட்டது. 

274 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடையது சரிஸ்கா தேசியப் பூங்கா. வடக்கு, தெற்கு இருபுறமும் 80 கிலோமீட்டர் நீளமுடையது. இத்தகைய வனப்பகுதியின் பல்லுயிர்ச்சூழலைப் பொருட்படுத்தாமல் அதற்குள்ளேயே இரண்டு மாநில நெடுஞ்சாலைகள் ஊடுருவிச் செல்கின்றன. ஆயிரக்கணக்கான வாகனங்கள், நூற்றுக்கணக்கான சரக்கு லாரிகள் அனுதினமும் அவ்வழியே சென்றுவருகின்றன. அதுபோக 2015-ம் ஆண்டு, புதியதாகத் தேசிய நான்கு வழிச்சாலையும் அதனுள்ளே ஊடுருவிச் செல்லும் வகையில் பரிந்துரைக்கப்பட்டது. இருக்கும் சாலைகளிலேயே பல விலங்குகள் விபத்துக்குள்ளாகி இறந்துகொண்டிருக்கும் நிலையில் இந்தத் திட்டப் பரிந்துரைக்குப் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. அந்த நெடுஞ்சாலை சரிஸ்காவுக்குள் ஊடுருவிச் செல்வது மட்டுமில்லாமல் புலிகளின் 2 வாழிடங்களையும் வெட்டிச் செல்கின்றது. இந்தச் சாலை அங்கு வந்தால் அந்த வனத்தின் உயிர்ச்சூழல் சொல்லவொண்ணாச் சிக்கல்களைத் தற்போதைவிட மேலும் அதிகமாக அனுபவிக்கும்.

வனப்பகுதியின் மத்தியப் பகுதியிலேயே அமைந்துள்ளது பண்டுபோல் ஆஞ்சநேயர் கோயில். விவரமாகச் சொல்ல வேண்டுமென்றால் சரிஸ்காவின் இதயத்திலேயே! அந்தக் கோயில் அங்கு வாழும் விலங்குகளின் இருப்பையே கேள்விக்கு உள்ளாக்கும் ஆபத்தாக உருவெடுத்து நிற்கின்றது. வனத்துக்குள் இருக்கும் அந்தக் கோயிலுக்கும் தேசியப் பூங்காவின் தொடக்கத்திலேயே இருக்கும் தலைமையிடத்துக்கும் இடையே சுமார் 21 கி.மீ நீளமான சாலை உள்ளது. அந்தச் சாலை முழுக்க ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரிசைகட்டி நிற்கும் அந்தக் காட்சியைப் பார்த்தால் மனிதர்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்திவிடும். இந்நிலையில் காட்டுயிர்களின் மனநிலை எப்படியானது என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அங்கு வரும் மக்கள் கூட்டத்துக்கு அங்கு வாழும் வன விலங்குகளைப் பற்றிய கவலையில்லை. ஏன், அது வனமென்பதைப் பற்றியே அவர்கள் கவலை கொள்வதில்லை. ஒவ்வொரு முறையும் கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து சென்றவுடன், அங்குக் குவிந்துகிடக்கும் பிளாஸ்டிக் உட்பட அனைத்துக் கழிவுகளையும் அப்புறப்படுத்தத் தனிப்படையே அமைக்கவேண்டும். இது மக்கள் மத்தியிலிருக்கும் ஆன்மிக நம்பிக்கை சார்ந்த விஷயம் என்பதால் ஆய்வாளர்கள், வனத்துறை அதிகாரிகள் என்று யாராலுமே இதை எதிர்க்க முடிவதில்லை. இந்தியாவைப் போன்ற நாட்டில் ஒரு வழிபாட்டுத் தலத்தைவிட அங்கு வாழும் காட்டுயிர்களின் பாதுகாப்புதான் முக்கியமென்று மக்களாக முன்வந்து முடிவெடுத்தாலொழிய இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்காது. அத்தகைய முடிவை எடுக்கவேண்டிய தேவையும் தற்போது ஏற்பட்டுள்ளது.

சரிஸ்காவை ஊடுருவும் நெடுஞ்சாலைகள், அதற்குள்ளேயே அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயில் இரண்டும் அங்கு வாழும் காட்டுயிர்களுக்குப் பேராபத்தை விளைவிக்கின்றன. இது அதிவேகமாக வளர்ந்துவரும் ஒரு முக்கியப் பிரச்னை. நாளுக்கு நாள் சரிஸ்காவின் இதயத்தில் அமைந்துள்ள அந்தக் கோயிலுக்கு வரும் மக்கள் கூட்டம் அதிகரித்தபடியே உள்ளது. இதை மக்களாகக் குரல்கொடுத்துச் சரிசெய்ய வேண்டும். இல்லையேல் இங்கு வாழும் 14 புலிகள் உட்பட அனைத்து காட்டுயிர்களும் வாழிடமின்றியும், உணவுப் பற்றாக்குறையாலும், வாகன விபத்துகளாலும் அழிவைச் சந்திக்க வேண்டியதுதான். இயற்கையைப் போற்றிப் பாதுகாப்பதே இந்தியக் கலாசாரத்தில் கூறப்பட்ட ஆன்மிகம். அத்தகைய ஆன்மிகம் இன்று அந்த இயற்கைக்கே ஆபத்தாகிவிடக் கூடாது.