Published:Updated:

`பாம்புகளை வச்சு இப்படியெல்லாம் சீரியல், படம் எடுக்காதீங்க; ஏன்னா...' - ஸ்நேக் அமீன்

"பாம்புகளைத் தவறாக முன்னிறுத்திப் பல படங்கள், சீரியல்களை எடுக்கிறார்கள். அவையெல்லாம் கண்டிக்கத்தக்கது. அப்படியெல்லாம் எடுக்காதீங்க! ஏன்னா..."

`பாம்புகளை வச்சு இப்படியெல்லாம் சீரியல், படம் எடுக்காதீங்க; ஏன்னா...' - ஸ்நேக் அமீன்
`பாம்புகளை வச்சு இப்படியெல்லாம் சீரியல், படம் எடுக்காதீங்க; ஏன்னா...' - ஸ்நேக் அமீன்

‘பாம்புகளுக்கு காது இருக்கா இல்லையா’, மனிதர்களைக் கடித்தால் எப்படிக் காப்பற்ற வேண்டும், வீட்டினுள் பாம்பு வந்தால் எப்படிப் பிடிப்பது, பாம்புகள் தெய்வ வழிபாடு சரியா போன்ற பல கேள்விகள் நம் அனைவரிடத்திலும் இருக்கும். இவற்றுக்கு விடைதெரிந்துகொள்ளவும், நகர்ப்புறங்களில் பாம்புகள் குறித்து நிலவும் மூடநம்பிக்கைகளை அறிந்துகொள்ளவும் கோவையைச் சேர்ந்த ஸ்நேக் அமீனிடம் பேசினோம்.

"பாம்பு பால் குடிக்கும், தேடிவந்து பழிவாங்கும் என்றெல்லாம் சொல்லுவாங்க. அவையெல்லாம் உண்மையில்லைங்க. எப்போதும் பாம்புகள் மனிதர்களைத் தாக்கியதில்லை, மனிதர்கள்தான் அவற்றுக்குப் பிரச்னை செய்கிறோம்" என்கிறார் அமீன். என்னிடம் பேசியபடியே மொபைலில் ஒரு அழைப்பு... பச்சைப்பாம்பு ஒன்று வீட்டுக்குள் வந்துவிட்டது என்று அதைப்பிடிக்க வருமாறு அழைக்கிறார் எதிர்முனையில் இருப்பவர். அந்தச் செய்தியைத் தன் நண்பனிடம் சொல்லிவிட்டு என்னிடம் தொடர்ந்து பேச ஆரம்பித்தார். மனிதர்களைக் கண்டு விலகிச் செல்வதுதான் அதனுடைய குணம். நாம் மிதிச்சா, தொந்தரவு செய்தால் மட்டுமே அவை கொத்தும். இதுவரை 5,000-க்கும் மேற்பட்ட பாம்புகளை மீட்டு வ.உ.சி வன உயிரியல் பூங்காவிலும் அடர்ந்த காடுகளிலும் விட்டிருக்கேன். கோவை உக்கடம் பகுதியிலதான் குடியிருக்கேன். சின்ன வயதிலிருந்தே பறவைகள், விலங்குகள் என்றாலே ரொம்பப் பிடிக்கும். இதற்கு முன்னர் தங்கப்பட்டறையில் வேலை பார்த்துட்டு இருந்தேன். ஒருநாள் எங்க வீட்டில பச்சைப் பாம்பு வந்துருச்சு. அதைப் பிடிச்சு வ.உ.சி பூங்காவில் கொடுத்தேன். அப்புறம் அங்க இருக்கிற சிங்கராஜ் என்பவர்கிட்ட பாம்புகளைக் கையாளுதல், முதலுதவி போன்ற பயிற்சிகளைக் கற்றுக்கொண்டேன்.

அடுத்து சாரைப்பாம்பு ஒன்று குடியிருப்புப் பகுதியில் வந்திருக்குனு சொன்னாங்க. அதையும் பத்திரமாகப் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டேன். இதற்காக யாரிடமும் காசு கேட்டதில்லை. அவர்களாக விருப்பப்பட்டு வண்டி செலவுக்குக் கொடுத்தால் வாங்கிப்பேன். எனக்கு மூணு பசங்க. இந்தத் தொழில் செய்றதை முதலில் வீட்டில எதிர்த்தாங்க. அதுக்கப்புறம் போகப்போகப் புரிஞ்சுகிட்டாங்க. எந்த நேரத்திலும் போன் வரும். அதுக்குத் தகுந்தமாறி எங்கள் குழுவுடன் தயாராக இருப்போம். இது நிரந்தமான வேலை கிடையாது. ஆனால், மனதுக்குப் பிடித்திருக்கிறது. 1998-லிருந்து பாம்புகளை மீட்பது, அடிபட்ட பாம்புகளுக்குக் முதலுதவி செய்வதுதான் என் தொழிலாக இருக்கிறது. ரெண்டு முறை பாம்புகிட்ட கடி வாங்கியிருக்கேன். 2007-ல் நாகப்பாம்பு கடிச்சுருக்கு. அதிலிருந்து உயிர்பிழைத்து இன்று வரை பாம்புகளைப் பிடித்து வருகிறேன்.

நான் இதுவரை கோவை மாவட்டத்தில் 20 வகையான பாம்புகளை மீட்டு எடுத்துள்ளேன். சில நேரங்களில் போலியான கால்களும் வருவது உண்டு. அதைமீறி இந்தத் தொழிலைச் செய்துவருகிறோம். சில பாம்புகள் விஷமற்றவை. ஒரு சில பாம்புகள் மட்டுமே விஷத்தன்மை வாய்ந்தவை. அதைத் தெரிந்து கையாளுவேன். பாம்புகள் கடித்தால் பயப்பட வேண்டாம். நம்முடைய பயம் மற்றும் பதற்றம் இரண்டுமே விஷத்தின் தன்மையை அதிகரிக்கச் செய்யும். அதனால் பதற்றம் அடையாமல் அரசாங்க மருத்துவமனை சென்றால், உடனடி சிகிச்சை கிடைத்துவிடும். அங்குள்ள பாம்பு மற்றும் விஷக்கடிக்கு உரிய மருந்துகள் தயார்நிலையில் இருப்பதால் எளிதில் காப்பாற்றிவிடலாம். தனியார் மருத்துவமனையில் பாம்புக்கடிக்கு மருந்துகள் கிடைப்பது தாமதமாகலாம்.

பாம்புகள் பற்றிய விழிப்புணர்வை பள்ளி, கல்லூரிகளில் ஏற்படுத்தி வருகிறோம். அவற்றை எப்படிக் கையாளுவது, அடையாளம் எப்படிக் கண்டுபிடிப்பது என்பதைச் சொல்லி வருகிறோம். அதன் உணவான எலிகள், சுத்தம் இல்லாத பகுதியில் வாழ்வதால் அவற்றைத்தேடி வருகிறது. சுத்தம் இல்லாத இடத்தில்தான் அவை அதிகம் வாழ்கிறது. முடிந்தளவு சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். பாம்புகளைக் கண்டால் வனத்துறைக்கோ, தீயணைப்புத்துறைக்கோ தகவல் கொடுங்கள். அவர்கள் அவற்றை மீட்டுக் காடுகளில் விட்டுவிடுவார்கள்.

பாம்புகளைத் தவறாக முன்னிறுத்திப் பல படங்கள், சீரியல்களை எடுக்கிறார்கள். அவையெல்லாம் கண்டிக்கத்தக்கது. அப்படியெல்லாம் எடுக்காதீங்க. அது மாதிரி சிலர் செய்வதால் குழந்தைகளிடத்தில் பாம்புகள் பற்றிய பயத்தை ஏற்படுத்திவிடுகிறார்கள். அவர்களும் பாம்புகளைக் கண்டால் பயப்படுகிறார்கள். கூடவே நிறைய மூடநம்பிக்கைகளையும் விதைக்கிறார்கள். அதனால்தான் மனிதர்கள் அவற்றைத் தாக்குகிறார்கள். மனிதர்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். பாம்புகளின் பாதுகாப்புக்கு எதுவும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. உங்கள் கண்ணில்படும் பாம்புகளையாவது அடிக்காமல், கொல்லாமல் விட்டுவிடுங்கள்" என்கிறார் அமீன்.