Published:Updated:

நிர்வாணமாக நிற்கும் நீரோலி மரம்; தேவதைகளின் சாபம்தான் காரணமாம்! - சின்னார் சுவாரஸ்யங்கள்

நிர்வாணமாக நிற்கும் நீரோலி மரம்; தேவதைகளின் சாபம்தான் காரணமாம்! - சின்னார் சுவாரஸ்யங்கள்
News
நிர்வாணமாக நிற்கும் நீரோலி மரம்; தேவதைகளின் சாபம்தான் காரணமாம்! - சின்னார் சுவாரஸ்யங்கள்

காட்டு யானையை அதன் இயல்பிலேயே பார்க்கவேண்டுமென்ற ஆவல் இங்கேயே காத்திருக்குமாறு தூண்டியது. இருப்பினும் நாங்கள் யானைக்காகக் காத்திருக்க முடியாது. நாங்கள் நின்றிருந்த பாறை ஒருவழிப் பாதையுடையது. கோபால் காட்டுக்குள் சிறிது தூரம் சென்று நோட்டமிட்டு வந்தார். யானை பெரும்பாலும் மனித வாசத்தைப் புரிந்துகொண்டு நம்மிடமிருந்து விலகிச் செல்லவே முயலும். நாமாக வலிய இங்கிருந்து அதைச் சீண்டுவதைவிட வேகமாகக் கீழே இறங்குவது உசிதம்.

சோலை பாடியின் சேட்டையைப் பற்றித் தெரிந்துகொண்ட பிறகு புதிதாகக் கேட்ட குரலொளிகள் அதனுடையதாக இருக்குமோ என்ற குழப்பம் தோன்றத் தொடங்கியது. மீண்டும் முட்டாள்தனமாகச் செய்துவைக்க வேண்டாம். அவர்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்வோம் என்று முடிவுசெய்தேன், மாணவனாக மாறினேன். ஒவ்வொன்றையும் கேட்டுத் தெரிந்துகொள்ள முயன்றேன். காட்டுக் கீச்சான், ஊர் தேன்சிட்டு, வேலிக் கதிர் குருவி என்று பல்வேறு பறவை வகைகளின் ஒலிகளைக் கேட்கமுடிந்தது. வழியிலேயே செம்மீசைச் சின்னான் (Red whiskered bulbul), சின்னான் (Red vented bulbul) போன்ற பறவைகளைக் காணமுடிந்தது. சின்னார் காடு மற்றும் அதற்கு அடுத்ததாக அமைந்திருக்கும் மறையூர், காந்தளூர் கிராமங்களில் சிட்டுக்குருவிகளைவிட இவைதாம் அதிகமாகக் காணப்படுகின்றன. இங்கும் இவற்றைப் போகும் வழியெங்கும் காணமுடிந்தது. 

காடேறிச் சென்று ஜல்லிப்பாறையை அடைந்தபோது, அங்கிருந்து காட்டுப் பாம்புண்ணிக் கழுகின் வேட்டைத் தேடுதலை, அது வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்த அழகை வசதியாகப் பார்த்து ரசிக்கமுடிந்தது. மிகத் திறமையான விமானப்படை வீரனைப் போல் நேர்த்தியாகக் காற்றைக் கிழித்து திசையுணர்ந்து அதன் இறக்கைகளைத் திருப்பிச் செங்குத்தாகக் கீழ்நோக்கி இறங்கியது. குறிப்பிட்ட தூரம் சென்றதும் மீண்டும் திசைமாற்றி வட்டமிட்டுத் தேடத்தொடங்கியது. அநேகமாக தான் கண்டுபிடித்த இரை தப்பித்திருக்க வேண்டும். வேட்டையாடக் கீழே இறங்கினாலும் பிடிபடாது என்று யூகித்ததால் அது தன் அடுத்த குறியை நோக்கித் திரும்பியிருக்கவேண்டும். பாம்புண்ணிக் கழுகைப் பார்த்துவிட்டேன், மரங்களுக்கு இடையே வந்துகொண்டிருந்தபோது இருந்த குறை இப்போது தீர்ந்துவிட்டது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நிர்வாணமாக நிற்கும் நீரோலி மரம்; தேவதைகளின் சாபம்தான் காரணமாம்! - சின்னார் சுவாரஸ்யங்கள்

படம்: ஏ. சண்முகானந்தம்

ஜல்லிப்பாறைதான் நாங்கள் சென்ற மலையேற்றத்தின் முடிவு. அங்கிருந்து மீண்டும் இறங்கவேண்டும். அதை நெருங்கிக் கொண்டிருக்கையில் பழுப்பு தலை குக்குறுவானுடைய (Brown headed barbet) குரலொலியைக் கேட்கமுடிந்தது. ஜல்லிப் பாறையைச் சென்றடைந்தோம். அங்கிருந்த ஒரு பாறை இடுக்கில் மரவள்ளிக் கிழங்கு குடும்பத்தைச் சேர்ந்த கிழங்கு வகையொன்று வளர்ந்திருந்தது. அதைப் பார்க்க அருகில் சென்றபோதுதான் காட்டுப்பன்றி அதைத் தோண்டிச் சாப்பிட்டிருப்பது தெரிந்தது. ஏதேனும் கிழங்கு கிடைக்கிறதா என்று பார்த்தால், பையன் ஒன்றுவிடாமல் சாப்பிட்டுச் சென்றிருக்கிறான். சின்னார் அதன் மரப்போர்வையை அதில் கோடுகளாய் ஓடிக்கொண்டிருந்த ஓடைகளை ஜல்லிப்பாறையில் நின்றிருந்த எங்கள் கண்களுக்கு விருந்தாக்கியது. 

நிர்வாணமாக நிற்கும் நீரோலி மரம்; தேவதைகளின் சாபம்தான் காரணமாம்! - சின்னார் சுவாரஸ்யங்கள்

படம்: ஏ. சண்முகானந்தம்

அப்போதுதான் வழிகாட்டி கோபால் ஜல்லிப்பாறையின் முனைகளுக்குச் சென்று காற்றை நுகர்ந்து சோதித்துக் கொண்டிருந்தார். ஒரு தெளிவுக்கு வந்தவர், யானை வாசம் வீசுவதாகவும் விரைவாகக் கீழே இறங்க வேண்டுமென்றும் கூறினார். காட்டு யானையை அதன் இயல்பிலேயே பார்க்கவேண்டுமென்ற ஆவல் இங்கேயே காத்திருக்குமாறு தூண்டியது. இருப்பினும் நாங்கள் யானைக்காகக் காத்திருக்க முடியாது. நாங்கள் நின்றிருந்த பாறை ஒருவழிப் பாதையுடையது. கோபால் காட்டுக்குள் சிறிது தூரம் சென்று நோட்டமிட்டு வந்தார். யானை பெரும்பாலும் மனித வாசத்தைப் புரிந்துகொண்டு நம்மிடமிருந்து விலகிச் செல்லவே முயலும். நாமாக வலிய இங்கிருந்து அதைச் சீண்டுவதைவிட வேகமாகக் கீழே இறங்குவது உசிதம். வாசம் பிடிப்பது காடுகளுக்குள் மிகவும் முக்கியம். காற்றின் திசையைப் பொறுத்து யானை வரும் முன்னரே அதன் வாசம் காற்றில் வீசும். அதைக் கண்டறிவது அவ்வளவு எளிதல்ல. கோபால், ராஜதுறை போன்ற அனுபவசாலிகளே சில சமயங்களில் ஏமாந்துவிடுவார்கள். நல்லவேளையாக அவர்கள் இன்று ஏமாறவில்லை. காற்று நாம் நிற்கும் திசையில் வீசினால் மனித வாசம் உணர்ந்து தன் வழியை மாற்றிக் கொள்ளும். ஒருவேளை காற்று வேறு திசையில் வீசினால், விவரம் தெரியாமல் வந்துவிடும். அப்படி வருவதால் அதற்கு எந்தவிதப் பிரச்னையும் இல்லை. அங்கு நின்றிருக்கும் மனிதர்களுக்குத்தான் ஆபத்து. அதையுணர்ந்து அவர்களின் சொல்லுக்குக் கட்டுப்பட்டுக் கீழே இறங்கத் தொடங்கினோம்.

நிர்வாணமாக நிற்கும் நீரோலி மரம்; தேவதைகளின் சாபம்தான் காரணமாம்! - சின்னார் சுவாரஸ்யங்கள்

இறங்கிவரும் வழியில்தான் அந்த மரத்தைப் பார்த்தோம். அது ஆங்கிலத்தில் நேகட் ட்ரீ (Naked Tree) என்றழைக்கப்படுகிறது. அதற்கு அந்த ஊர் மக்களிடம் அழகான ஒரு கதை உண்டு. யானை வருவதற்குள் அந்த இடத்தைக் கடந்துவிட வேண்டுமென்ற அவசரத்தில் இறங்கிக் கொண்டிருந்ததால், போகிற போக்கில் அந்தக் கதையின் சுருக்கத்தை மட்டும் ராஜதுறை விளக்கினார். ஒருகாலத்தில் இந்தக் காட்டில் உலவிக் கொண்டிருந்த தேவதைகளைப் பார்த்து இந்த மரம் கேலி செய்ததாம். அவர்களின் அழகைக் குறைகூறியதாம். உடனே அந்தத் தேவதைகள் இதனிடம் வந்து, "எங்களையா கேலி செய்கிறாய், இனிமேல் நீ எப்போதும் உடலில் ஆடையே இல்லாமல் இருக்கவேண்டும்" என்று சாபம் விட்டார்களாம். அதனால்தான் அது இன்றுவரை மரங்களின் ஆடையான பட்டையே இல்லாமல் நிற்கின்றதாம். கேட்பதற்கே சுவாரஸ்யமாக இருந்தது. சுவாரஸ்யம் கதையில் மட்டுமல்ல, தமிழில் நீரோலி என்றழைக்கப்படும் அந்த மரத்திலும்தான். அதிகமான நீர்ச்சத்துடைய மரம் அது. அதனால் அதன் பட்டைகள் பசுமையாகவும் மிக மென்மையாகவும் இருக்கும். தொட்டுப் பார்க்கவே அவ்வளவு குளிர்ச்சி. மற்ற மரங்களுக்கு இருப்பதுபோல் வலுவான பட்டைகளின்றி அது நிர்வாணமாக நிற்பதாகக் கூறப்படுகிறது.

தொண்ணூறு சதவிகிதம் இறங்கிவிட்டோம். குழம்பு மயில் வண்ணத்துப்பூச்சி (Common banded peacock butterfly) என்ற ஒருவகை வண்ணத்துப்பூச்சி இனப்பெருக்கம் செய்யும் புருஷ மரம் (Chloroxylon swietenia) நின்றிருந்தது. ராஜதுறை அதைக் காட்டினார். ஒவ்வொரு வண்ணத்துப்பூச்சிக்கும் தத்தம் இனப்பெருக்கத்திற்குத் தனி மரம் உண்டு. அந்த வகையில் மிகவும் அரிதான குழம்பு மயில் வண்ணத்துப்பூச்சிக்கு இந்தப் புருஷ மரம்தான். அதற்கு அருகிலிருந்த வேறோர் மரத்தின் பட்டைகளில் யானை தன் உடலைத் தேய்த்துத் தேய்த்துப் படிந்திருந்த சேறு மற்றும் யானையின் அச்சுகள் தெரிந்தன. தன் உடம்பில் பூசிக்கொள்ளும் சேற்றால் யானைக்கு அரிப்பு ஏற்படும்போது இப்படித்தான் மரங்களில் வந்து உரசிச் சுத்தம் செய்துகொள்ளும். அதைக் கடந்து இறங்கத் தொடங்கினோம். சின்னார் வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட காட்டுப்பகுதியும் அதையடுத்து அமைந்திருக்கும் ஆனைமலை காட்டின் ஒரு பகுதியும் நட்சத்திர ஆமைகளுக்குப் பெயர் போனவை. இங்குதான் நட்சத்திர ஆமைகள் விரும்பிச் சாப்பிடும் சப்பாத்திக் கல்லி, உள்ளூர்ப் பெயரில் கெயினா என்றழைக்கப்படும் ஒருவகைத் தாவரம், குப்பைமேனிக் கீரை என்ற பொதுவான கீரை வகை, எலும்பொட்டி (blepharis maderaspatensis), எகிடிக் காய் (Caralluma umbellata), சிறுங்கள்ளி (Caralluma umbellata) போன்றவை அதிகம் விளைகின்றன.

நிர்வாணமாக நிற்கும் நீரோலி மரம்; தேவதைகளின் சாபம்தான் காரணமாம்! - சின்னார் சுவாரஸ்யங்கள்

இவையெல்லாம் நட்சத்திர ஆமைகள் அதிகம் விரும்பிச் சாப்பிடுகின்ற உணவுகள். வறண்டக் காடுகளில் அதிகம் வாழ்வதால் தேவையான நீர்சத்துகளை நட்சத்திர ஆமைகளுக்கு இந்தத் தாவரங்கள் தருகின்றன. இதில் எகிடிக் காய், குப்பைமேனிக் கீரை போன்றவற்றை மனிதர்களும் சாப்பிடலாம். இவற்றின் வளர்ச்சி இங்கு அவற்றின் வாழ்வியலைச் சிறப்பாக்கியுள்ளது. இந்தத் தாவரங்களில் எகிடிக் காய், சிறுங்கள்ளி தவிர மற்றவை நாங்கள் நடந்து வந்த பாதையிலேயே வளர்ந்திருந்தன. அவற்றைக் குறிப்பெடுத்துக்கொண்டே கீழிறங்கினோம்.

நிர்வாணமாக நிற்கும் நீரோலி மரம்; தேவதைகளின் சாபம்தான் காரணமாம்! - சின்னார் சுவாரஸ்யங்கள்

படம்: ஏ. சண்முகானந்தம்

வழியிலிருந்த ஒரு மொட்டைப் பாறையில் நின்று அங்கிருந்த தாவரங்களைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார் கோபால். அப்போதுதான் அதைப் பார்த்தோம். ஆம், அது பாறைப்பல்லி (Rock Agama) தான். ஆனால், ஆரம்பத்தில் அடையாளம் காணமுடியவில்லை. இளம் பிராயத்துப் பல்லி. பொதுவாக அதன் முதுகில் ஒரு மஞ்சள் நிறக்கோடு செல்லும் அல்லது பழுப்பு கலந்த கறுப்புநிறக் கோட்டில் ஆங்காங்கே சிவப்புப் புள்ளிகளோடு இருக்கும். அதுவே நாங்கள் பார்த்த பல்லியின் முதுகில் வெள்ளை நிறத்தில் சென்றதால் கொஞ்சம் குழம்பினேன். இது இளம் பிராயத்தது என்பதை விளக்கினார் பேராசிரியர் பாபு. அதைத் தொடர்ந்து அதே பாறையில் பழுப்பு நிறப் பல்லி.

பல்லிகள் எப்போதுமே தனி சுவாரஸ்யத்தைக் கொடுக்கின்றன. ஒவ்வொரு பல்லியும் ஒவ்வொரு வடிவமைப்பைத் தன் உடலில் சுமந்து செல்கின்றன. அந்த வடிவமைப்பில் ஒளிந்திருக்கும் அதன் தகவமைப்பு ரகசியங்கள்தான் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன. அப்படியொரு பல்லிதான் நாங்கள் நின்றிருந்த மொட்டைப் பாறைக்கு அருகிலிருந்த மரத்தில் இருந்தது. அது பறக்கும் பல்லி. ஆங்கிலத்தில் கிளைடிங் லிசார்டு (Gliding Lizard) என்று அழைக்கப்படுகின்றன. அவை பறக்காது. ஆனால், தன் உடலில் இரண்டு புறமும் முன் மற்றும் பின்னங்கால்களுக்கு இடையே நீண்டிருக்கும் ஜவ்வு போன்ற அமைப்பின் உதவியோடு ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்குக் காற்றில் சறுக்கிச் செல்லும். பறக்கும் பல்லி, பறக்கும் அணில் என்று இப்படியாகச் சறுக்கிச் செல்லும் பல உயிரினங்கள் இருக்கின்றன. சூழலியல் எழுத்தாளர் நக்கீரனின் மொழியில் சொல்ல வேண்டுமென்றால் அவை சறுக்கிகள். இனப்பெருக்கத்திற்காக இணையை ஈர்க்க முயற்சி செய்துகொண்டிருந்தன. சற்றே கவனித்துப் பார்த்தால் ஆங்காங்கே மரங்களில் பல பறக்கும் பல்லிகளைப் பார்க்க முடிந்தது.

நிர்வாணமாக நிற்கும் நீரோலி மரம்; தேவதைகளின் சாபம்தான் காரணமாம்! - சின்னார் சுவாரஸ்யங்கள்

பல்லிகளின் அழகை ரசித்துக் கொண்டே இறுதி இறக்கத்தை இறங்கும் சமயத்தில் சுமார் ஐம்பது மீட்டர் தூரத்திலிருந்த ஒரு மரத்தின் மீது மாங்குயில் வந்தமர்ந்தது. அதைத் தொடர்ந்து சில மரங்கள் இடைவெளி விட்டு மாம்பழச் சிட்டு. மேலும் புதிதாக மற்றுமோர் பறவையின் குரலைக் கேட்க முடிந்தது. அடையாளம் காணமுடியவில்லை. அது புள்ளிச் சிலம்பன் என்றார் கோபால். புள்ளிச் சிலம்பனா! அதை நான் இதுவரை பார்த்ததே இல்லையே. இருவரும் குரலொலி கேட்ட திசையில் சென்றோம். ஒரு மரத்தின் கிளைகளுக்குள் ஒளிந்துகொண்டிருந்தான். தொண்டையில் வெள்ளை நிற பஞ்சுபோன்ற முடிகள், இளம் பழுப்புநிறக் கொண்டை, வெண்மை கலந்த பழுப்பு நிற வயிறு. மாங்குயில், மாம்பழச் சிட்டு மற்றும் முதன்முறையாகப் பார்த்த புள்ளிச்சிலம்பன் அனைத்தும் தம் இன்னிசையோடு விடைகொடுத்தன. இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தோம். நாங்கள் செல்வதைக் குறிக்கும் வகையில் குரல்கொடுத்தான் வெண்கன்னக் குக்குறுவான். உடுமலைப்பேட்டையிலிருந்து மூணார் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது மறையூர் என்ற கிராமம். சுற்றுலாத் தளமான மறையூருக்கு அருகிலேயே அமைந்திருக்கும் சின்னார் வனவிலங்கு சரணாலயத்திற்கு நாளை நீங்கள் சென்றால், அவன் உங்கள் வருகையையும் குரல்கொடுத்துத் தெரிவிப்பான். அங்கிருக்கும் பறவைகள் உங்களுக்கும் தரிசனம் தரும். சின்னார் காடு உங்களுக்கும் பலவற்றைக் கற்றுத்தரும்.

ஆம், காடு எப்போதுமே ஓர் ஆசான்தான். நாம் அதன் மாணவர்கள்தான். இந்த முறையும் அதை அழுத்தமாகப் புரிய வைத்துப் பலவற்றைக் கற்றுக்கொடுத்து வழியனுப்பிவிட்டு அமைதியாக நிற்கிறது சின்னார் காடு.

குறிப்பு: பறவைகளின் தமிழ் பெயர்களைக் கண்டுபிடிப்பதில் உதவியவர் காட்டுயிர் ஆய்வாளர் ப.ஜெகநாதன்.