Published:Updated:

`மலைகளின் அரசன் இவன்!' பனிச்சிறுத்தை என்னும் அதிசயம்

`மலைகளின் அரசன் இவன்!' பனிச்சிறுத்தை என்னும் அதிசயம்

இந்தப் பனிச்சிறுத்தைகளை நேரில் பார்ப்பதே அவ்வளவு அரிதான விஷயம்தான். எந்த அளவுக்கு அரிதென்றால் இவற்றை `Ghosts of the Mountains' என்றுதான் பலரும் குறிப்பிடுகின்றனர். அமானுஷ்ய பேய்கள்கூட(!) கண்ணில் தென்பட்டுவிடும் ஆனால் இவை தென்படாது என்பதாலேயே இந்தப் பெயராம்.

`மலைகளின் அரசன் இவன்!' பனிச்சிறுத்தை என்னும் அதிசயம்

இந்தப் பனிச்சிறுத்தைகளை நேரில் பார்ப்பதே அவ்வளவு அரிதான விஷயம்தான். எந்த அளவுக்கு அரிதென்றால் இவற்றை `Ghosts of the Mountains' என்றுதான் பலரும் குறிப்பிடுகின்றனர். அமானுஷ்ய பேய்கள்கூட(!) கண்ணில் தென்பட்டுவிடும் ஆனால் இவை தென்படாது என்பதாலேயே இந்தப் பெயராம்.

Published:Updated:
`மலைகளின் அரசன் இவன்!' பனிச்சிறுத்தை என்னும் அதிசயம்

காடுகளுக்குச் சிங்கம், கடல்களுக்குச் சுறா, வானத்திற்குக் கழுகு என்பது போல மலைகளுக்கு ஒரு ராஜா எதுவென்று தேர்வு செய்யவேண்டுமென்றால் அதற்கு பனிச்சிறுத்தையைவிட கம்பீரமான விலங்கு எதுவுமில்லை. புலி, சிங்கம் போன்று பெரிய பூனைகளுக்கேயான ஆக்ரோஷத்துடன் நமது மத்திய ஆசியாவின் உயரமான மலைகளை ஆளும் இந்த அதிசய சிறுத்தைகள் பற்றிப் பெரிதாக நாம் கேள்விப்பட்டிருக்கமாட்டோம். அதன் வாழ்வியல் அறிமுகம்தான் இந்தக் கட்டுரை.

இந்தப் பனிச்சிறுத்தைகளை நேரில் பார்ப்பதே அவ்வளவு அரிதான விஷயம்தான். எந்த அளவுக்கு அரிதென்றால் இவற்றை `Ghosts of the Mountains' என்றுதான் பலரும் குறிப்பிடுகின்றனர். அமானுஷ்ய பேய்கள்கூட(!) கண்ணில் தென்பட்டுவிடும். ஆனால் இவை தென்படாது என்பதாலேயே இந்தப் பெயராம். இதற்கு முக்கியக் காரணம் இவற்றின் வாழ்விடம். எந்த ஒரு பூனையும் வாழாத உயரத்தில் (சுமார் 6 கிலோமீட்டர் உயரம் வரை) வாழும் இவற்றுக்கு நமது இமயமலைத்தொடர்தான் வீடு. மேலும் 100 சதுரகிலோமீட்டருக்கு சுமார் 4 பனிச்சிறுத்தைகளே இருக்கின்றன. இதனாலும், இவை மனிதர்களால் எளிதாகச் செல்லமுடியாத கரடுமுரடான மலைப்பகுதிகள் என்பதாலும் இவற்றின் குணநலன்கள் பல வருடங்களாகப் புரியாத புதிராகவே இருந்தன. கடந்த பத்து ஆண்டுகளில் நடந்திருக்கும் ரிமோட் கேமரா மற்றும் பிற தொழில்நுட்ப வளர்ச்சிகள்தான் இவற்றின் வாழ்க்கை எப்படியானது என நமக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரியவைத்திருக்கிறது.

`மலைகளின் அரசன் இவன்!' பனிச்சிறுத்தை என்னும் அதிசயம்

எப்படி இவ்வளவு உயரமான மலைகளில் இந்தச் சிறுத்தைகளால் வாழமுடிகிறது என்பதுதான் பலரின் ஆச்சர்யமாக இருந்தது, இன்றும் இருக்கிறது. கடினம்தான் என்றாலும் இந்தக் கடுமையான சூழலைச் சமாளிக்கும் வண்ணமே இயற்கை இவற்றின் உடல்களை இத்தனை நூறு ஆண்டுகளாக மெருகேற்றிக்கொண்டே வருகிறது. இந்த உயரத்தில் வாழ்வதிலிருக்கும் முதல் சிக்கல், குறைவான ஆக்சிஜன் அளவு. இதைச் சமாளிக்க இந்தச் சிறுத்தைகள் சற்றே அகலமான மூக்குகளையும், சற்றே பெரிய நுரையீரலையும் பெற்றிருக்கின்றன. இதனால் அதிக அளவிலான காற்றை உள்ளிழுக்க முடியும். அதிகமான சிவப்பு ரத்த அணுக்களையும் இதே காரணத்திற்காகக் கொண்டிருக்கின்றன. மேலும் இவற்றின் அடர்த்தியான ரோமங்களால் (ஒரு இன்ச்சில் 26,000 ரோமங்கள் வரை இருக்கும்) இதன் உடல் -40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைவரை தாக்குப்பிடிக்கும். இந்த ரோமங்களின் நிறங்கள் மலையிலும் பனியிலும் இவற்றின் உடலை அப்படியே மறைத்துக்கொள்ளும். சமீபத்தில் அப்படி ஒரு புகைப்படம் எடுக்கப்பட்டு `இதில் ஒன்று இருக்கிறது, உங்களால் அதைப் பார்க்கமுடிகிறதா?'என்று வைரலானது.

`மலைகளின் அரசன் இவன்!' பனிச்சிறுத்தை என்னும் அதிசயம்

இதில் ஒரு பனிச்சிறுத்தை இருக்கிறது! எங்கு என்று பார்த்துவிட்டீர்களா? இல்லையெனில் பதில் கீழே உள்ள லிங்க்கில் 

இவற்றின் முக்கிய தனித்துவமே இவற்றின் வால்தான். உடலின் 90% நீளம்வரை இவை வளரும். இந்த நீளம் இவற்றின் அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று. எப்படி கயிற்றின் மேல் நடப்பவர்களுக்கு சமநிலைக்காக ஒரு கம்பு முக்கியமோ, அதே போன்றுதான் இந்தச் செங்குத்தான மலைகளில் ஏறுவதற்கு இவற்றுக்கு இந்த நீண்டவால் முக்கியம். மேலும் குளிருக்கு இதமாக இருக்க அவ்வப்போது வாலைப் போர்வைபோலப் போர்த்திக்கொள்ளும் பனிச்சிறுத்தைகள். 

இவற்றுடன் நீளம் தாண்டும் போட்டியெல்லாம் வைத்தால் அவ்வளவுதான். தனது உடலைவிட 7 மடங்கு நீளம்வரை தாவும் இந்தச் சிறுத்தைகள். முன்னங்கால்கள், பின்னங்கால்களைவிடச் சற்றே சிறியதாக இருப்பதால் இவற்றால் இப்படித் தாவமுடிகிறது. இந்த அமைப்பு இவற்றின் வேகத்தையும் கூட்டுகின்றது. மேலும் உயரமான இடங்களிலிருந்து தாவும்போது வரும் அழுத்தத்தை, வலிய தசைகள்கொண்ட பெரிய மார்புகள் இருசக்கர வாகனங்களில் இருக்கும் ஷாக் அப்சார்பர்கள் போலத் தாங்குகின்றன. இதன் பரிணாம வளர்ச்சி கொடுத்திருக்கும் இத்தனை அமைப்புகளுமே இந்த மலைகளில் பனிச்சிறுத்தைகள் உயிர்பிழைக்க மிகவும் அவசியம். அத்துடன் அழகிய தோற்றத்தையும் இந்த அமைப்புகள் இவற்றுக்குத் தருகின்றன. 

`மலைகளின் அரசன் இவன்!' பனிச்சிறுத்தை என்னும் அதிசயம்

இத்தனையும் இருந்தும் இன்று இவற்றின் வாழ்க்கை அவ்வளவு எளிதாக இல்லை. `முரட்டு சிங்கிள்' அடைமொழிக்கு ஏற்ற ஒரு விலங்கு இருக்குமேயானால் அது நிச்சயம் பனிச்சிறுத்தையாகத்தான் இருக்கும். தனியாக வாழ்வதையே விரும்புகின்றன இவை. முன்பே குறிப்பிட்டதுபோல் 100 சதுரகிலோமீட்டருக்கு வெறும் நான்கு பனிச்சிறுத்தைகள் மட்டுமே இருப்பதால் மனிதர்கள் மட்டுமல்ல ஒரு பனிச்சிறுத்தையே இன்னொரு பனிச்சிறுத்தையைப் பார்ப்பது அரிது. ஆனால் அடுத்த தலைமுறையை உலகில் விட்டுச் செல்லவேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால், எப்படியும் ஓர் ஆணும் பெண்ணும் சந்தித்தாகவேண்டும். அதற்கு சில யுக்திகளைக் கையாளுகின்றன இந்தச் சிறுத்தைகள். மலைகளில் இருக்கும் பாறைகளில் தங்கள் கன்னங்களை உரசி, பின் அதன் மீது தங்களின் சிறுநீரை வெளியிடுகின்றன. இது ஒரு தனித்துவமாக அடையாளத்தைக் கொண்டிருக்கும். இதனால் இந்த வழியில் வரும் இன்னொரு பனிச்சிறுத்தைக்கு எந்தப் பனிச்சிறுத்தை வந்துசென்றது என்று தெரியும். எவ்வழி அது சென்று இருக்கிறது என்றும் தெரியும். கூடும் நேரம் வரும்போது பெண் பனிச்சிறுத்தைகள் அதற்கான அடையாளங்களைப் பாறைகளில் விட்டுச்செல்லும், மலையின் உச்சியிலிருந்து சத்தமிடும் (இந்தச் சிறுத்தைகள் உறுமாது). இதை உணர்ந்துவரும் ஆண் அந்த இடத்திற்கு வரும். ஆனால் பெரும்பாலான நேரங்களில் ஆக்ரோஷமாகவே இருக்கும், இந்தக் கூடல்கள். எப்போதாவதுதான் ஒன்றும் ஒன்றும் சந்தித்துக்கொள்கின்றன என்பதால் ஒருவித பதற்றம் இவற்றைத் தொற்றிக்கொள்ளும். வன்முறை வெடிக்கும். சத்தம் கேட்டு இரண்டு ஆண்கள் வந்துவிட்டால் அவ்வளவுதான். பெண்ணிற்காக ஒன்றும் ஒன்றும் மோதிக்கொள்ளும். இதனால் வன்முறையும், காயங்களும் இல்லாமல் கூடல் என்பதே நடக்காது. இதில் அவ்வப்போது வேறுவிதமான சிக்கல்களைச் சந்திக்கும் பெண் பனிச்சிறுத்தைகள். 

`மலைகளின் அரசன் இவன்!' பனிச்சிறுத்தை என்னும் அதிசயம்

பனிச்சிறுத்தைகள் சண்டையிட்டுக்கொள்ளும் காட்சி Photo: Planet Earth II/BBC 

சராசரியாகக் குட்டிகள் 2 வருடங்கள்வரை தாயின் அரவணைப்பில்தான் வளரும். ஆனால் சில குட்டிகள் நீண்டகாலம் எடுக்கும். இதனால் இப்படி தாய், ஆண் பனிச்சிறுத்தைகளுடன் கூடும்போது அவற்றுக்கும் ஆபத்துதான். இந்த ஆண் பனிச்சிறுத்தைகள், குட்டிகள் தன்னுடையவை இல்லையெனில் அவற்றைக் கொல்லவும் தயங்காது. இதையும் சமாளித்தாகவேண்டும் தாய். ஆனால், இனப்பெருக்கம் என்பதும் அதன் முக்கிய கடமைதான். அந்த உந்துதலை அதனால் கட்டுப்படுத்தமுடியாது. கூடலின் காயங்களுடன் சில காலம் வேட்டையாடமுடியாமலும் போகும். ஆனால் எப்படியாவது தனது குட்டிகளைக் கரைசேர்த்துவிடும் தாய். அதுவும் வலிமையாக இருந்தால் மட்டுமே இந்த மலைகளில் உயிர்பிழைக்கமுடியும். பனிச்சிறுத்தைகளின் `முரட்டு சிங்கிள்' வாழ்க்கைமுறையில் இருக்கும் மிகப்பெரிய சிக்கல் இதுதான். 

அடுத்தது உணவு. இந்த மலைகளில் வேட்டையாடுவதும் அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இங்கு வாழும் ஒரு சில விலங்குகளும் இவற்றைப் போலவே மலையில் வாழ கற்றுக்கொண்டவையே. இதனால் பதுங்கியிருந்து துரத்தினால்தான் உணவு. வேட்டைகளில் வெற்றி, தோல்வி என்பது அனைத்து விலங்கிற்கும் இருப்பதுதான். இதனால் செங்குத்தான மலைகளில் அவ்வளவு வேகமாக ஓடினால்கூட தோல்விகளும், பட்டினியும் அவ்வப்போது இன்றியமையாததுதான். ஆனால் இங்குதான் மனிதன் என்ற பெரும் இடையூறு கதைக்குள் நுழைகிறான்.

கடந்த சில வருடங்களில் நம்மால் ஏற்பட்டிருக்கும் காலநிலை மாற்றத்தில் பெரும் மாற்றத்தைச் சந்தித்துவருவது துருவங்களும் நமது இமயமலைகளும்தான். பனி இருக்கும் பிரேதேசங்கள் மலைகளின் உச்சியை நோக்கிக் குறைந்துகொண்டே வருகின்றன. இதனால் தாவரவாழ்க்கை பாதிக்கப்பட்டு இவற்றின் இரைகளும் குறைந்துகொண்டே வருகின்றன. இதனால் வேறுவழியில்லாமல் அருகில் இருக்கும் சிறிய கிராமங்களுள் நுழைந்து கால்நடைகளை வேட்டையாடுகின்றன. இதன் எதிர்வினையாகப் பல பனிச்சிறுத்தைகள் கொல்லப்படுகின்றன. இதன் அடர்ந்த தோலுக்காகவும் சில பகுதிகளில் இவை வேட்டையாடப்படுகின்றன. 

மாற்றங்களுக்கு ஏற்ற பரிணாம வளர்ச்சியை விலங்குகள் அடைவது உண்மைதான். ஆனால் அந்த மாற்றங்கள் பல ஆயிரம் ஆண்டுகள் ஆகும். அதற்கேற்ப விலங்குகளும் பழகும். ஆனால் இன்று இந்த மாற்றம் நம்மால் 10, 20 வருடங்களில் நடந்துவிடுகிறது. கடுமையான சூழல், தனிமையான வாழ்க்கை என இவ்வளவு வாழ்ந்த இந்தச் சிறுத்தைகள் இந்த மாற்றத்திற்குத் தயாராகியிருக்கும் என்று நம்புவது அபத்தம். ஏற்கெனவே குறைவான அளவில் (சுமார் 4000-8000) இருக்கும் பனிச்சிறுத்தைகள் எண்ணிக்கையில் குறைந்துகொண்டே வருகின்றன. இவற்றைப் பாதுகாக்க முயற்சிகள் தொடங்கியுள்ளன. இந்த அதிசய பனிச்சிறுத்தைகள் இல்லாமல் இந்த மலைகளின் சமநிலை முழுமை பெறாது என்பது மட்டும் உறுதி!