Published:Updated:

ஆந்தைகளிடமிருந்து தப்பிக்க... கீரிகள் வகுத்த 'சஸ்பென்ஸ்' வியூகம்!

ஆந்தைகளிடமிருந்து தப்பிக்க... கீரிகள் வகுத்த 'சஸ்பென்ஸ்' வியூகம்!
ஆந்தைகளிடமிருந்து தப்பிக்க... கீரிகள் வகுத்த 'சஸ்பென்ஸ்' வியூகம்!

அங்கு அடிக்கடி புள்ளி ஆந்தையைப் பார்ப்பேன். வீட்டுக்குப் பின்புறத்திலுள்ள சிறிய புதர்க்காட்டில் எலிகள் மற்றும் சிறிய பறவைகளின் கூடுகளிலுள்ள முட்டைகளை வேட்டையாட இதே நேரத்துக்கு வரும். ஆனால், அந்தப் புள்ளி ஆந்தை இதுவல்ல. அதன் உருவம் கொஞ்சம் சிறியது. இதை அன்றுதான் பார்த்தேன்.

திருவான்மியூர், அடையாறு பகுதிகளில் வசிப்பவர்கள் அந்தக் காட்சியைப் பார்த்திருப்பார்கள். தினமும் மாலை சரியாக 6 மணி அடித்துவிட்டால் வானத்தை அண்ணாந்து பார்க்கும் பழக்கம் கொண்டிருந்தேன். இரவாடிப் பறவைகளான வௌவால், ஆந்தை போன்றவை அந்த நேரத்தில்தான் உணவுதேடிக் கிளம்பும். வரிசை கட்டிக்கொண்டு கூட்டமாகப் பறந்து செல்லும் பழந்தின்னி வௌவால்களை வானில் பார்க்க முடியும். தியாசபிகல் சொசைட்டியின் மரங்களில் பகல் உறக்கம் முடித்துவிட்டு இருட்டத் தொடங்கியதும் உணவுதேடிக் கிளம்பிவிடும் இந்தப் பழந்தின்னி வௌவால்கள். நான்தான் பெரியவன் என்பதுபோல் பெரியவை முந்தியடித்துக்கொண்டு முன்னால் செல்ல, கூட்டத்தோடு ஒட்டிக்கொண்டு செல்லும் சிறிய வௌவால்களைத் தேடிக் கண்கள் அலைபாயும். சீராகப் பறந்து செல்லும் முதிர்ச்சியடைந்த வௌவால்களுக்கு மத்தியில் திக்கித் திணறி, இடித்துக்கொண்டு பறக்கும் குட்டி வௌவால்களைப் பார்க்கும் வாய்ப்பு மிக அரிதாகச் சில சமயங்களில் கிடைத்துள்ளன. 

தியாசபிகல் சொசைட்டியில் குடியிருக்கும் அவை உணவுதேடி மகாபலிபுரம் சாலையில் கடலோரத்தில் அமைந்துள்ள அலையாத்திக் காடுகளில் வளர்ந்துள்ள பழமரங்களைத் தேடிச் செல்கின்றன. சில கூட்டங்கள் நன்மங்கலம், கிண்டி போன்ற காப்புக் காடுகளைத் தேடிச் செல்கின்றன. வெகு சில வௌவால்கள் ஆங்காங்கே வழியிலுள்ள பழ மரங்களிலேயே உணவுதேடிக் கொண்டு வசதியாக ஓய்வெடுக்கத் தொடங்கிவிடுகின்றன. மாமரம் இருக்கும் வீடுகளில் இரவு 8 மணிக்கு மேல் சென்று பாருங்கள். குறைந்தது ஒரு பழந்தின்னி வௌவாலாவது அதிலுள்ள மாம்பழத்தை ருசித்துவிட்டுத் தலையைக் கீழ்நோக்கித் தொங்கப்போட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும். 

ஆந்தைகளிடமிருந்து தப்பிக்க... கீரிகள் வகுத்த 'சஸ்பென்ஸ்' வியூகம்!

பெரும்பாலும் பழங்களையே விரும்பி உண்ணும் சைவ உண்ணிகளே இந்தப் பழந்தின்னி வௌவால்கள். ஒருவேளை மரங்களே இல்லாமல் போய்விட்டால், இவற்றின் நிலை என்ன ஆகும். ஒருவேளை அயல் தாவரங்களாக நாம் நட்டு வளர்த்துக்கொண்டிருப்பவை இவற்றுக்கு உணவளிக்கும் பழ மரங்களை முற்றிலுமாக அழித்துவிட்டால் இவற்றின் நிலை என்ன ஆகும் என்பது போன்ற கேள்விகள் வந்ததுண்டு. அந்தச் சமயத்தில்தான் ஒருநாள் அதேபோல் இரவு 8.30 மணிக்கு வீட்டு மாடியில் நின்று மாமரத்தில் தொங்கிக்கொண்டிருந்த வௌவாலுடைய செயலை ரசித்துக்கொண்டிருந்தேன். நீண்ட நேரமாக அது தன் இறக்கைகளால் உடலைச் சுற்றியவாறு தொங்கிக்கொண்டிருந்தது. 

திடீரென்று ஒரு சலசலப்பு. புள்ளி ஆந்தை வேகமாக வந்து மாமரத்துக்கு அருகிலிருந்த ஓர் இரும்புத் தகட்டால் வேயப்பட்ட வேலியில் அமர்ந்தது. அந்த வேலி வௌவால் தொங்கியிருந்த கிளைக்கு அருகிலேயே இருந்ததால் அதிர்வுகள் கிளையைத் தொந்தரவு செய்ய, கிளையின் ஆட்டம் வௌவாலைத் தொந்தரவு செய்ய அது அங்கிருந்து பறந்தது. அப்போதுதான் பார்த்தேன், அங்கிருந்த ஒரு மாம்பழத்தை இறக்கைகளால் போர்த்தியதுபோல் தொங்கிச் சாப்பிட்டுக்கொண்டிருந்தது. நான் அதன் பின்புறமாகப் பார்த்துக் கொண்டிருந்ததால், இது தெரியவில்லை. 

பறந்துவிட்ட பழந்தின்னி வௌவால் எப்படியும் மீண்டும் அங்குதான் வரும் என்று மனம் சொல்லியது. அதைத் தொந்தரவு செய்த புள்ளி ஆந்தையைக் கவனித்தேன். 30 செ.மீ ஸ்கேலைவிடக் கொஞ்சமே உயரம் குறைவு. அங்கு அடிக்கடி புள்ளி ஆந்தையைப் பார்ப்பேன். வீட்டுக்குப் பின்புறத்திலுள்ள சிறிய புதர்க்காட்டில் எலிகள் மற்றும் சிறிய பறவைகளின் கூடுகளிலுள்ள முட்டைகளை வேட்டையாட இதே நேரத்துக்கு வரும். ஆனால், அந்தப் புள்ளி ஆந்தை இதுவல்ல. அதன் உருவம் கொஞ்சம் சிறியது. இதை அன்றுதான் பார்த்தேன். 

ஆந்தைகளிடமிருந்து தப்பிக்க... கீரிகள் வகுத்த 'சஸ்பென்ஸ்' வியூகம்!

நல்ல பருமனான உடல். சிவந்த கண்களோடு அதன் தேடுதலைத் தொடங்கியிருந்தது. இந்த ஆந்தை இங்கு இப்போதுதான் புதிதாக வந்துள்ளதா, ஒருவேளை இதை நான் கவனிக்கவில்லையா. இந்தப் புதர்க்காட்டில் மூன்று கீரிப்பிள்ளைகள் வாழ்கின்றன. ஒருவேளை அவற்றை வேட்டையாடத்தான் இது இவ்வளவு மும்முரமாகத் தேடிக் கொண்டிருக்கிறதா என்று பல்வேறு கேள்விகள் மனதைத் துளைத்துக் கொண்டேயிருந்தன. 

அதையே கவனித்துக்கொண்டிருந்தேன். அதற்கு அப்பால், சிறிது தூரத்தில் மற்றொரு பறவை பறந்துகொண்டிருந்தது மங்கலாகத் தெரிந்தது. கவனம் அந்தப் பக்கமாகச் சென்றது. அவனேதான். நான் தினசரி பார்க்கின்ற புள்ளி ஆந்தை. புதர்க்காட்டில் கிழக்குப் பக்க ஓரத்தில் ஒரே இடத்தைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தது. அவன் அந்தக் கீரிகளில் எதையேனும் கண்டுபிடித்துவிட்டானோ என்ற அச்சம் மனதில் எழுந்தது. உடனே உணவுச் சங்கிலியில் இதுதானே தர்மம், என்று மனம் சாந்தியடையவும் தொடங்கியது. ஆனாலும், இதய ஓரத்தில் அந்தக் கீரிகள்மீது ஒட்டிக்கொண்டிருந்த பாசம் மனதை ஓரிடத்தில் லயித்திருக்க விடவில்லை. கண்களும் மனதைப் பின்பற்றி அலைபாயத் தொடங்கியது. 

புதர்க்காட்டின் மேற்கு மூளையில் இருந்த ஒரு வேப்பமரத்து அடியில் நான்கைந்து ஹாலோ பிளாக் கற்கள் கிடந்தன. அது நான் வழக்கமாகப் பார்ப்பதுதான். ஆனால், அன்று அங்கு ஏதோ வித்தியாசமாகத் தெரிந்தது. கற்களுக்கு நடுவே அங்கும் இங்கும் ஏதோ அசைவது போலத் தெரிந்து. உற்று நோக்கினேன். ஆச்சர்யமாகத்தானிருந்தது. கீரிப்பிள்ளைகள்தான் அங்கு நின்று ஆந்தைகளின் செயலை நோட்டமிட்டுக் கொண்டிருந்தன. முதலில் கண்டுபிடிப்பது சிரமமாகத்தான் இருந்தது. ஆனால், அந்த மூன்று பேரில் ஒருவனின் பின்புற முதுகில் 'V' வடிவில் வெள்ளையும் பழுப்பும் கலந்த நிறத்தில் கோடு இருக்கும். இருட்டில் அந்தக் கோடு லேசாகத் தெரிந்தது. பையன்கள் அங்குதான் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள் என்று கண்டுகொண்டேன். அவர்களை, அவர்கள் செய்யும் சேஷ்டைகளை அடிக்கடி கவனித்திருக்கிறேன். பெரும்பாலும் அந்தப் புதர்காட்டுக்குள் எங்கெல்லாம் பொந்துகள் தோண்டி வைத்துள்ளார்கள் என்பது நன்றாகவே தெரியும். 

சொல்லப்போனால், வழக்கமாக இங்கு வரக்கூடிய ஆந்தை கிழக்கே வட்டமிட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்து மனம் அச்சப்பட்டதே அங்கு இந்தக் கீரிகளின் பொந்து ஒன்று இருப்பதால்தான். ஆனால், இங்கு எப்போது இப்படியொரு குழியைத் தோண்டினார்கள் என்ற சிந்தித்தேன். இந்த இடத்திலுள்ள குழியில் இவர்களைப் பார்த்த மாதிரி நினைவில்லை. ஒருவேளை, சமீபத்தில் தோண்டியிருக்கலாம். எது எப்படியிருந்தாலும் இன்று அந்தக் குழிதான் அவர்களைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது. இரண்டு ஆந்தைகளும் தேடுதலைத் தொடங்கின. கீரிகளைப் பார்த்த இடத்தைக் கவனித்தேன். அவை ஆந்தைகளின் கண்களில் பட்டுவிடக்கூடாதே என்று இதயம் படபடத்துக்கொண்டிருந்தது. இன்னொரு பக்கம், ஆந்தைகளுக்கும் உணவு வேண்டும், அதற்கு அவை வேட்டையாடித்தானே ஆக வேண்டும் என்று அவற்றின் பக்கமும் சாயத் தொடங்கியது. மனம் எந்தப் பக்கம் சாய்ந்தால் என்ன நான் போய் கீரியைக் காட்டிக் கொடுக்கவும் முடியாது, ஆந்தைக்கு வேறு உணவுக்கு ஏற்பாடு செய்துகொடுக்கவும் முடியாது. முடியாது என்பதைவிடக் கூடாது. 

இயற்கையின் போக்கில் அவற்றின் இயல்பில் விட்டுவிடுவோம் என்று பொறுத்திருந்தேன். கீழே வேகமாக இறங்கிய பெரிய புள்ளி ஆந்தையின் வேட்டைத் தொடங்கியது. இறங்கிய வேகத்தில் வாயில் ஓர் ஓணானோடு மேலேறியது. அது உட்கார்ந்திருந்த அதே வேலிக்கு வந்தமர்ந்து அதைச் சாப்பிடத் தொடங்கியது. இன்னொன்றுக்கு இன்னமும் எதுவும் கிடைக்கவில்லை. கீரியைக் கண்டுபிடித்துவிடுமோ என்று முட்டாள் மனம் மீண்டும் விசும்பத் தொடங்கியது. கீரிகளின் பக்கம் திரும்பிப் பார்த்தேன். அவை அங்கில்லை. குழிக்குள்ளே பதுங்கியிருக்க வேண்டும். என்னதான் பரிணாமக் கோட்பாடு, இயற்கை அறிவியல் என்று வாசித்திருந்தாலும் அன்றாடம் பார்த்துப் பழகிவிட்ட ஒன்றின் மரணத்தைக் கண்முன் பார்க்க மனம் தயாராகவில்லை. இனி, அவற்றுக்கு ஆபத்தில்லை என்று தெரிந்துகொண்டதும் ஒருவிதமான அற்ப சந்தோஷம். 

ஆந்தைகளிடமிருந்து தப்பிக்க... கீரிகள் வகுத்த 'சஸ்பென்ஸ்' வியூகம்!

வழக்கமாகப் பார்க்கும் புள்ளி ஆந்தையும் எதையோ வேட்டையாடிவிட்டது. அது என்னவென்று இருட்டில் தெரியவில்லை. உற்றுநோக்கிப் பார்த்தேன். நீண்டிருந்த வால் மட்டும் தெரிந்தது. பார்ப்பதற்குக் கீரிப்பிள்ளை போலவே இருந்தது. மூளை வேகமாகப் பின்னோக்கிச் சென்று சிந்திக்கத் தொடங்கியது. அந்தக் குழிக்குள் மூன்று கீரிகளைப் பார்த்தேனா இரண்டு மட்டும்தான் பார்த்தேனா! எவ்வளவு முயன்றும் நினைவுகளில் தெளிவாக மீட்டெடுக்க முடியவில்லை. மனம் பதறியது. அதன் வேட்டைக்குச் சிக்கியது கீரிதான் என்று உறுதியாகத் தெரியவில்லை. இருட்டில் தெரிந்த உருவ நிழலை வைத்துச் செய்த கணிப்பு மட்டும்தான். 

துரதிர்ஷ்டவசமாக, அந்த ஆந்தை நான் இருந்த பக்கமாக இரையைத் தூக்கிக்கொண்டு வராமல் எனக்கு எதிர்த்திசையில் பறந்துசென்றது. அந்த நேரம், ஓசையே இல்லாமல் முன்னர் பறந்து சென்ற பழந்தின்னி வௌவால் மீண்டும் வந்து, பாதியில் விட்டுச்சென்ற மாம்பழத்தை ருசிக்கத் தொடங்கியது. அடுத்தநாள் சென்று மூன்று கீரிகளையும் பார்க்கமுடிகிறதா என்று தேடிப்பார்த்தேன். பார்க்க முடியவில்லை. மூன்றாவது கீரியை இன்றுவரை தேடிக் கொண்டிருக்கிறேன்.

அடுத்த கட்டுரைக்கு