Published:Updated:

ரத்தக் கடலான பாரோ தீவு - திமிங்கல வேட்டையின் கொடூர முகம்!

ச.கிருத்திகா

பாரோ தீவுகளில் 23 திமிங்கிலங்கள் வேட்டையாடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது.

வேட்டையாடப்பட்ட திமிங்கிலங்கள்
வேட்டையாடப்பட்ட திமிங்கிலங்கள் ( Photo courtesy: Sea Shepherd UK / Triangle News )

அயர்லாந்துக்கும் நார்வேக்கும் இடையே அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ளது பாரோ தீவு (Faroe islands). ஒருபுறம் இயற்கைக் காதலர்களுக்கு விருந்தாக மலைகளும், கடலோரப் பாறைகளும், ஏராளமான வனவிலங்குகளும் கொண்ட இத்தீவு, மறுபுறம் கொடும் வேட்டையின் முகமாக இருக்கிறது.

செந்நிறமான கடல்
செந்நிறமான கடல்
Photo courtesy: Sea Shepherd UK / Triangle News

நூற்றாண்டுகளாக பாரோ தீவுகளில் வசிக்கும் உள்ளூர் சமூகத்தினர் ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கான திமிங்கில வேட்டையில் ஈடுபட்டுவருக்கின்றனர். `Grind’ என பொதுவாக அழைக்கப்படும் இவ்வேட்டையில் திமிங்கலங்களும் டால்ஃபின்களும் கொடூரமாக கொல்லப்படுகின்றன. உணவு, எண்ணெய் மற்றும் எலும்புகளுக்காக திமிங்கிலங்கள் வேட்டையாடப்படுவதால் 1986-ல் இருந்து சர்வதேச திமிங்கல ஆணையம் (IWC) இந்த வேட்டைக்கு உலகளாவிய தடைவிதித்தது. எனினும் ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளில் இன்றும் வேட்டைகளும் விற்பனைகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

பாரோ தீவுகளில் வேட்டை சட்டபூர்வமானது. ஏனெனில் இறந்த திமிங்கிலங்களிலிருந்து இறைச்சி விற்கப்படுவதில்லை. எனவே, வேட்டைக்காரர்களும் பிரச்னையின்றி தொடர்கின்றனர். இப்படி அண்மையில் ஒரு கொடூரமான வேட்டையை நடத்தி முடித்திருக்கின்றனர் வேட்டைக்காரர்கள். இது இந்த வருடத்தின் பத்தாவது வேட்டை. இதில் மட்டும் 23 திமிங்கிலங்கள் கொல்லப்பட்டுள்ளன. இதனால் அந்தப் பகுதியின் நீரே மொத்தமாக செந்நிறமாக மாற அந்தப் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதேபோல இந்த ஆண்டு மட்டும் 536 திமிங்கிலங்கள் கொடூரமாக வேட்டையாடப்பட்டுள்ளன.

வேட்டையாடப்பட்ட திமிங்கிலங்கள்
வேட்டையாடப்பட்ட திமிங்கிலங்கள்
Photo courtesy: Sea Shepherd UK / Triangle News

பார்வையாளர்கள் இதைப் புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதும் அங்குள்ள உள்ளூர் குழந்தைகள் வேட்டையாடப்பட்ட திமிங்கலங்களின் மீது விளையாடுவதும் சாதாரணமாக அங்கு பார்க்கப்பட்டாலும் ஆன்லைன் மனுக்கள் மூலமாகவும் பிரசாரங்கள் மூலமாகவும் மக்கள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்திக்கொண்டு வருகின்றனர். எனினும் பாரோ அரசாங்கம் இதுவரையிலும் எவ்வித தடை உத்தரவையும் பிறப்பிப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. உலக மக்களின் இவ்வளவு எதிர்ப்புக்குப் பிறகாவது அரசு தன் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்.