இங்கிலாந்து நாட்டின் நாட்டிங்ஹாம்ஷையரில் உள்ள 'ஹோஸ் லாட்ஜ்' என்ற பண்ணையில் 2020-ம் ஆண்டு 27,000 கோழிகள் இறந்த சம்பவத்தில், தற்போது அந்நிறுவனத்துக்கு 44,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
50,000 கோழிகளைக் கொண்ட அந்தப் பண்ணையில், காற்றோட்டத்தை ஒழுங்குபடுத்தும் அமைப்பு பாதிக்கப்பட்டதால் சுமார் 27,000 கோழிகள் வெப்பத்தின் காரணமாக இறந்துள்ளன. 27C (81F) ஆக இருக்க வேண்டிய பண்ணையின் வெப்பநிலை 37C (99F) ஆக உயர்ந்தபோது அலாரம் ஒலித்தது. அங்கு பணிபுரியும் ஊழியர்கள் பண்ணைக்குள் நுழைந்து பார்ப்பதற்குள் இறைச்சிக்காக வளர்க்கப்பட்ட 27,249 கோழிகள் இறந்துவிட்டன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பண்ணையின் பக்கவாட்டில் உள்ள நுழைவு வாயில்கள் மூடப்பட்டிருந்தன. குறிப்பிட்ட நேரத்தில் மற்றொரு காற்றோட்ட அமைப்பை பணியாளர்கள் திறக்கத் தவறியதால் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கோழிகளைப் பராமரிக்கப் போதுமான பணியாளர்களை நியமிக்காமல், அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கும் போதுமான பயிற்சி அளிக்காமல், கோழிகளை பராமரிக்கும் அளவுக்கு காற்றோட்ட வசதியை ஏற்படுத்தாமல் அந்நிறுவனம் தவறியதாக, லெய்செஸ்டர் மாவட்ட கவுன்சில் சார்பாக புகார் அளிக்கப்பட்டு, விலங்குகள் நல சட்டத்தின் கீழ் அதன் மீது நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அந்த நிறுவனத்தின் மீதுள்ள புகார்கள் ஆய்வு செய்யப்பட்டு, சுமார் 44,000 பவுண்டுகள் அபராதம் விதித்துள்ளது லெய்செஸ்டர் நீதிமன்றம். மேலும், `இது ஒரு மோசமான சம்பவம், இதுபோன்ற துயரமான சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க, இந்தத் துறையில் செயல்படும் வணிக நிறுவனங்கள், தங்களிடம் போதுமான பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்' என கவுன்சிலின் ஒழுங்குமுறை சேவைகளின் தலைவர் கேரி கானர்ஸ் தெரிவித்துள்ளார்.