Published:Updated:

கவலையில் காளைகள்... குதூகலத்தில் யானைகள்!

விகடன் விமர்சனக்குழு
கவலையில் காளைகள்...  குதூகலத்தில் யானைகள்!
கவலையில் காளைகள்... குதூகலத்தில் யானைகள்!
கவலையில் காளைகள்...  குதூகலத்தில் யானைகள்!

கோவை: கோவில் யானைகளுக் கான சிறப்பு நலவாழ்வு முகாம் நாளை துவங்குவதையொட்டி, தமிழகம் முழுவதிலிருந்தும் யானைகள் தேக்கம்பட்டிக்கு வரத்துவங்கியுள்ளன.

அ.தி.மு.க. ஆட்சி என்றால் தவறாமல் நடக்க கூடியது யானைகள் சிறப்பு நல்வாழ்வு முகாம். வழக்கமாக டிசம்பர் மாதத்தில் துவங்கும் யானைகள் முகாம்,  இந்த முறை டிசம்பரில் துவங்காத நிலையில் யானைகள் முகாம் நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.

ஆனால் ஜல்லிக்கட்டுக்கு வந்த சோதனைப்போன்று யானை முகாம் நடத்த தடையேதும் இல்லை என்பதால் யானைகள் முகாம்  நாளை துவங்குகிறது. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில்கள் மற்றும் மடங்களில் உள்ள யானைகளுக்கு ஆண்டுதோறும் சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2003 ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் யானைகளுக்கு நல்வாழ்வு சிறப்பு முகாம் நடத்தும் திட்டத்தை  தமிழக அரசு அறிவித்தது. 2003-ல் 55 யானைகளுக்கு, 30 நாட்கள் முதுமலை வனவிலங்கு சரணாலயத்தில் நடந்த இந்த முகாம், 2004ம் ஆண்டில் 65 யானைகளுக்கு 48 நாட்கள் என விரிவுபடுத்தப்பட்டது.

2005- ல் 63 யானைகளுக்கும் முகாம் நடத்தப்பட்டது. ஆட்சி மாற்றம் காரணமாக 2006 முதல் 2010 வரையிலான காலத்தில் யானைகள் முகாம் நடக்கவில்லை.  தொடர்ந்து 2011-ம் ஆண்டில் அ.தி.மு.க மீண்டும் பொறுப்பேற்றபின், யானைகள் முகாம் மீண்டும் தொடர்ந்தது. அப்போது முதுமலை வனவிலங்கு சரணாலயத்தில் 37 யானைகளுக்கு முகாம் நடத்தப்பட்டது. கோவில் யானைகள் முதுமலைக்கு மலைப்பாதை வழியே கொண்டு செல்லப்படுவதால் யானைகள் உடல்நலம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து, 2012, 2013, 2014ம் ஆண்டுகளில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டிக்கு முகாம் மாற்றப்பட்டது.

கவலையில் காளைகள்...  குதூகலத்தில் யானைகள்!

இதன் தொடர்ச்சியாக இந்தாண்டுக்கான யானைகள் முகாம், நாளை துவங்குகிறது. மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டியில் இந்தாண்டும் முகாம் நடக்கிறது. நாளை துவங்கி 48 நாட்கள் இந்த முகாம் நடக்கிறது. இந்த முகாமில் தமிழகத்தில் கோவில்கள் மற்றும் மடங்களைச் சேர்ந்த 43 யானைகளும், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில், தர்பாரண்யேஸ்வரர் கோவில் யானை ஆகிய 45 யானைகள் முகாமில் பங்கேற்க உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கான ஆயத்தப் பணிகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை முதல் யானைகள் வரத்துவங்கின. நாளை காலை யானைகள் முகாம் துவங்குகிறது. வரும் பிப்ரவரி மாதம் 23-ம் தேதி வரை முகாம் நடக்க உள்ளது. 48 நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு நலவாழ்வு முகாமில் யானைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் கொடுக்கப்பட்டு, கால்நடை மருத்துவர்கள் மூலம் யானைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.

கவலையில் காளைகள்...  குதூகலத்தில் யானைகள்!

இதே போல் நாளை முதல் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள 24 வளர்ப்பு யானைகளுக்கும் நல்வாழ்வு முகாம் துவங்குகிறது. முதுமலை தெப்பக்காடு பகுதியில், முகாம் நடக்கவுள்ள இடத்தில் புதர்ச்செடிகள் அகற்றப்பட்டு, இடத்தை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. வழக்கமாக டிசம்பர் மாதத்தில் துவங்கி ஜனவரி வரை நடக்கும் இந்த முகாம், சென்னை பெரு வெள்ளம் காரணமாக ஒரு மாதகாலம் தாமதமாக துவங்குகிறது.

- ச.ஜெ.ரவி