Published:Updated:

தெறித்த குண்டு... பலியான பேருயிர்... சுட்டுக்கொல்லப்பட வேண்டிய உயிரினமா யானை?

தெறித்த குண்டு... பலியான பேருயிர்... சுட்டுக்கொல்லப்பட வேண்டிய உயிரினமா யானை?

தெறித்த குண்டு... பலியான பேருயிர்... சுட்டுக்கொல்லப்பட வேண்டிய உயிரினமா யானை?

தெறித்த குண்டு... பலியான பேருயிர்... சுட்டுக்கொல்லப்பட வேண்டிய உயிரினமா யானை?

தெறித்த குண்டு... பலியான பேருயிர்... சுட்டுக்கொல்லப்பட வேண்டிய உயிரினமா யானை?

Published:Updated:
தெறித்த குண்டு... பலியான பேருயிர்... சுட்டுக்கொல்லப்பட வேண்டிய உயிரினமா யானை?

னித தவறுகளால் மரணிக்கும் யானைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் கூடிக்கொண்டே போகிறது. கிட்டதட்ட கோவையும், கிருஷ்ணகிரியும் யானை இறப்பின் அடையாளங்களாகவே மாறிப்போய்விட்டன. அதை உறுதிப்படுத்தும் வகையில் இப்போது கிருஷ்ணகிரியில் ஒரு பெண் யானை சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம்,  தளியை அடுத்து இருக்கிறது உளிபண்டா கிராமம். தமிழக  எல்லையில் இருக்கும் இந்த கிராமம் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது.  வனப்பகுதி  என்றாலும் அந்த  கிராம மக்களுக்கு ஆங்காங்கே ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் என்று பட்டா நிலங்கள் இருக்கின்றன. அதில் விவசாயம் செய்யப்படுகிறது. யானை  நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் தற்காப்புக்காக பெரும்பாலான வீடுகளில்  அனுமதி இல்லாத நாட்டுத்துப்பாக்கிகளை வைத்திருக்கின்றனர். அதில் ஒரு நாட்டுத்துப்பாக்கிதான் 25 வயது பெண்யானையின் உயிரை 9-ம் தேதி நள்ளிரவு காவுவாங்கியிருக்கிறது.

உளிபண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு. இவருக்குச் சொந்தமாக ஒன்றரை ஏக்கர் விவசாய நிலத்தை அதே ஊரைச் சேர்ந்த சின்னபையன் என்பவர் குத்தகைக்கு எடுத்து  தக்காளி, அவரை பயிரிட்டுள்ளார். பயிர்களை வனவிலங்களிடமிருந்து பாதுகாப்பதற்காக வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் இரவு காவல் இருப்பது வழக்கம். சின்னபையன் தன் குத்தகை நிலத்திலயே சிறிய குடில் அமைத்து இரவு காவல் இருந்துவந்திருக்கிறார். வழக்கம்போல 9-ம் தேதி இரவு காவலுக்கு சென்றிருக்கிறார். சின்னப்பையனுக்கு பக்கத்து நிலத்துக்காரர்களான பசவராஜ், ராமமூர்த்தி, மாதேஷ், சென்னீரப்பா  ஆகியோரும் அங்கு காவலுக்கு  இருந்திருக்கின்றனர்.

இரவு 12 மணி அளவில்  உளிபண்டா காட்டில் இருந்து 4 யானைகள் சின்னபையனின் விவசாய நிலத்தை நோக்கி வந்திருக்கின்றன. யானைகள் வரும் சமிஞ்கையை அறிந்த சின்னபையன்  குடிசையிலிருந்து எழுந்து வெளியே வந்து பார்த்திருக்கிறார். 4 யானைகளில் ஒரு யானை  சின்னபையனின் குடிசையை நோக்கி வந்துகொண்டிருந்தது. உடனடியாக சத்தம் கொடுத்து பக்கத்து நிலத்துக்காரர்களை அழைத்திருக்கிறார் சின்னப்பையன். அந்த யானை சின்னப்பையனின் குடிசையை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்க, பக்கத்து நிலத்துக்காரர்களான பசவராஜ், ராமமூர்த்தி, மாதேஷ், சென்னீரப்பா ஆகிய நான்குபேரும் ஓடி வந்து பார்த்துள்ளனர். யானையைக் கண்டதும் பசவராஜ் தான் வைத்திருந்த  நாட்டுத்துப்பாக்கியால் யானையின் நெற்றிப் பொட்டில்  2 முறை சுட்டிருக்கிறார். இதில் யானையின் நெற்றியில் 2 குண்டுகள் பாய்ந்து...  மூளை சிதறி துடித்து இறந்திருக்கிறது. துப்பாக்கி குண்டுகள் சத்தம் கேட்டதும் மற்ற யானைகள்  அங்கிருந்து வனப்பகுதிக்குள் தப்பித்து ஓடின.

இதுதொடர்பாக  மாவட்ட வனஅலுவலர் ராஜேந்திரனிடம் பேசினோம், “தேன்கனிகோட்டை, சாணமாவு, ஜவளகிரி என பல வனப்பகுதியிலிருந்து யானைகள் வெளிவருகின்றன. நாங்கள்  தொடர்ந்து கண்காணிப்பில்தான் இருக்கிறோம். அதையும் மீறி இதுபோன்ற அசம்பாவிதங்களை நடத்திவிடுகிறார்கள். அனுமதி இல்லாத நாட்டுத்துப்பாக்கிகளை கைப்பற்ற நாங்களும் நடவடிக்கை எடுத்துக்கொண்டுதான் வருகிறோம். ஆனால், எல்லோரும் வந்து ஒப்படைத்துவிடுவதில்லை. வீட்டில் துப்பாக்கியை வைத்திருந்தால் பிடித்துவிடலாம். எல்லாம் வைக்கோல்போருக்குள்ளும் வனப்பகுதிக்குள்ளும் ஒளித்து வைத்திருக்கிறார்கள். இவ்வளவுக்கும் சேதமடைந்த பயிர்களுக்கு நாங்கள் இழப்பீடு கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். அதையெல்லாம் உணராமல் பெண் யானையை கொடூரமாக சுட்டுக்கொன்றிருக்கிறார்கள். சென்னீரப்பா, மாதேஷ், ராமமூர்த்தி ஆகிய மூவரை கைது செய்துள்ளோம் மற்றவர்களை தேடிவருகிறோம்," என்றார்.

"தினமும் விவசாய நிலங்களுக்கு காவலுக்கு செல்வது வழக்கம். இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் விளைச்சலும் மிக குறைவாக இருக்கிறது. அதையும் வனவிலங்குகள் அழித்துவிடக்கூடாது என்பதற்காக நாங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தோம். இரவு முழுவதும் விவசாய நிலத்தில் தங்கி, விடிந்த பின்னர் வீடு திரும்புவோம். சம்பவத்தன்று இரவு 6 காட்டு யானைகள், அறுவடைக்கு குவித்து வைத்திருந்த ராகி, பயிர்களைத் தின்றன. இதனால் யானையை துப்பாக்கியால் சுட்டோம்" என கைதானவர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

யானைகள் வனத்தை வளப்படுத்துவதுடன், அதைப் பாதுகாக்கும் பேருயிர். வனம் செழித்தால்தான் நாம் சிக்கலின்றி வாழ முடியும். உண்மையில் யானைகள் நம்மை பாதுகாக்கின்றன. யானைகளை அழிப்பது நம்மை நாமே அழித்துக்கொள்வதற்கு ஒப்பானது. இதை எப்போது உணரப்போகிறோம் நாம்?

- எம்.புண்ணியமூர்த்தி