Published:Updated:

15 நாள்கள்.. 500 கி.மீ தூரம் நடை.. சபரியாத்திரைக் குழுவுக்கு சகபயணியான நாய்!

சபரியாத்திரை
சபரியாத்திரை ( நன்றி: ஏ.என்.ஐ )

சபரிமலைப் பயணத்தில் நாய் ஒன்றும் இவர்களோடு இணைந்து நடந்துவரத் தொடங்கியிருக்கிறது. ஏறக்குறைய 500 கி.மீ பயண தூரம் முழுவதுமே இந்த நாய் இவர்களோடு வந்திருக்கிறது

கர்நாடக மாநிலத்தின் தட்சிணா மாவட்டம் முட்பித்ரியை அடுத்த தோடர் என்ற பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர் ராஜேஷ் குருசாமி.

இவரது தலைமையில் கடந்த அக்டோபர் 31-ம் தேதி திருமலையிலிருந்து 12 சாமிகள் குழுவாகச் சபரிமலைக்கு நடைப்பயணம் மேற்கொள்ளத் தொடங்கினர். 15 நாள்கள் நடந்த அவர்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை சிக்மங்களூரு மாவட்டம் கொட்டிக்கராவை அடைந்தனர்.

நாய்
நாய்
நன்றி: ஏ.என்.ஐ.

இதனிடையே, இந்தப் பயணத்தில் நாய் ஒன்றும் இந்தக் குழுவோடு இணைந்து நடந்துவரத் தொடங்கியிருக்கிறது. ஏறக்குறைய 500 கி.மீ-க்கு அமைந்திருந்த இந்தப் பயண தூரம் முழுவதுமே இந்த நாய் இவர்களோடு வந்திருக்கிறது.

இதுபற்றி பாதயாத்திரை பக்தர்கள், 'முதலில் நாங்கள் கவனிக்கவில்லை. பிறகுதான் கவனித்தோம் அது எங்களுடனேயே வந்துகொண்டிருக்கிறது என்பதை. எங்களுக்குக் கிடைத்த உணவை அதற்கும் வழங்கினோம்' என்கின்றனர்.

அதுமட்டுமன்றி, நீண்ட தூரம் நாள் கணக்கில் உடன் வந்ததால் இந்த நாய்க்குக் காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது. வழியில் இருந்த கால்நடை மருத்துவர் அதைப் பரிசோதித்து சிகிச்சையளித்திருக்கிறார். பின்னர் மீண்டும் தொடர்ந்து அவர்களோடு பயணமாகியிருக்கிறது இந்த நாய்.

ஒருமுறையல்ல. இரண்டாவது முறையும் காலில் காயம். அப்போதும் மருத்துவம் பார்க்க ஒரு டாக்டர் கிடைக்க, காயம் சரியாக, பக்தர்களோடு பயணத்தைத் தொடர்ந்திருக்கிறது நாய். ஒருகட்டத்தில் ஐயப்ப சாமிகள், ஒவ்வோர் இடத்திலும் தங்கிக் கிளம்பும்போதும், நாய் இருக்கிறதா என்று சரிபார்த்த பின்னரே கிளம்பியிருக்கின்றனர்.

சபரியாத்திரை
சபரியாத்திரை
நன்றி: ஏ.என்.ஐ.

'ரொம்ப வருஷமா மாலை போட்டு மலைக்குப் போயிட்டிருக்கோம். வழியில, இப்படி ஒரு சக பயணி எங்ககூட சேர்ந்ததில்ல. எங்களுக்கு இது புது அனுபவமா இருக்கு' என்கின்றனர் மகிழ்ச்சியுடன் அந்தப் பாதயாத்திரை பக்தர்கள்!

நன்றியோடு பக்தியும் இணைந்துவிட்டது போலும், அந்த ஜீவனிடம்!

அடுத்த கட்டுரைக்கு