Published:Updated:

``அவ முகத்தை என் கையில் டாட்டூ போட்டிருக்கேன்!'' - செல்ல நாயின் நேசம் சொல்லும் குடும்பம்

'வீனு' குடும்பம்
'வீனு' குடும்பம்

"வந்த புதுசுல வீனுவுக்கு முதுகுப்பக்கம் எலும்பே இல்ல. கொஞ்சம் கொஞ்சமா சரி பண்ணினோம். போன வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டுட்டா..." கலங்கும் 'வீனு' குடும்பம்

“ஓவர் சேட்டை. அப்பப்போ கோபப்படுத்துவா, திட்டு வாங்குவா. அப்புறம் மறுபடியும் சட்டுன்னு அவளைக் கொஞ்சிருவோம். ஆனா, எங்கமேல மட்டும் அவ கோபப்பட்டதே இல்ல” எனக் கொஞ்சி உச்சிமோந்து மகிழ்கிறார் கண்ணன். “வீட்டுல யாரும் யாரையும் அடிக்கக்கூடாது, குறுக்கே வந்து நின்னுடுவா. அதேபோல நாங்க யாரும் சண்டை போட்டுக்கிட்டா வீனுவுக்குப் பிடிக்காது; குரைச்சே எங்களைச் சேர்த்து வெச்சிடுவா'' என்று சொல்லிச் செல்லம் கொஞ்சுகிறார் சுபா. ஆம்... வீனு இந்தத் தம்பதி வளர்க்கும் நாய்!

Veenu Family
Veenu Family

கண்ணன் - சுபா தம்பதிக்கு இரண்டு பையன்கள். தங்கள் வீடு மகிழ்ச்சியால் நிரம்பியிருப்பதற்கு முக்கியக் காரணம், கடைக்குட்டி வீனு என்கிறார்கள். மதுரை, கோமதிபுரம் கண்ணன் வீட்டுக்குச் சென்று நாம் வண்டியை விட்டிறங்கியதும் வாசலை நோக்கித் திரும்பி செவிப்பறை கிழியக் குரைத்தபடியே ஓடிவந்தது, வீனு. நல்ல கொழுக்மொழுக் உடம்பும் பொசுபொசு ரோமமுமாக, கொஞ்ச வேண்டும் போலிருந்தது. நம்மை வீட்டினுள் அனுமதிக்க குடும்பத்தினர் அதற்கு உத்தரவிட்டாலும், தனது பார்வையால் ஸ்கேன் செய்து, மூக்கால் ரெஜிஸ்டர் பண்ணியதற்கு அப்புறம்தான் ‘வெல்கம்’ சொன்னது வீனு.

“இவ இருக்கிறதால வீட்டைப் பூட்டவே மாட்டோம். வீட்டிலேயும் தோட்டத்திலேயும் எப்போ எப்போ என்னென்ன நடக்கும்னு சரியா இவளுக்குத் தெரியும். எங்கே எது மாறினாலும் முதல்ல ரெஸ்பாண்ட் பண்றது இவதான்” என்கிறார் சுபா. தோட்டத்தில் பாம்பு வந்தால் மண்ணைத் தோண்டிக் காட்டி உணர்த்துவது, நேரத்துக்குக் கண்ணன் வராவிட்டால் வாசலில்போய் தனியாக ‘உம்’மென்று அமர்ந்துகொள்வது என வீட்டின் காவலாளி, காதலி வீனுதான்.

Vikatan

ஜெர்மன் ஷெப்பெர்டு இனத்தைச் சேர்ந்த வீனு, மிகவும் உணர்வுபூர்வமாய் நடந்துகொள்வதையெல்லாம் பார்த்துக்கொண்டேயிருக்கத் தோன்றுகிறது. ஜாலியாய் அங்குமிங்கும் ஓடிய வீனுவைப் பிடித்து நிறுத்திய கண்ணன், ‘இப்போ பாருங்களேன்’ எனச் சொல்லிவிட்டு, ‘அங்கிட்டு சூச்சா போகாதேன்னு சொல்லியிருக்கேன்ல.. ம்ம்?’ எனப் பொய்யாக அதட்டுகிறார். உடனே வீனுவின் உற்சாகம் மாறி அதன் முகம் பாவமாய் சுருங்கிப்போனதைப் பார்க்க வேண்டுமே... யாருக்கும் திட்டுவதற்கு மனமே வராது.

கண்ணன் செல்லமாக ‘அம்முலு’ என்றும் அழைக்கிறார் வீனுவை. கண்ணனின் முணுமுணுப்பைக்கூட கவனமாக உள்வாங்கி அதன்படி வினையாற்றுகிறது வீனு. நெருக்கமும் பிரியமும் அவ்வளவு இருக்கிறது இருவருக்கு இடையிலும். வீனு மீது கண்ணனுக்கு இருக்கின்ற பாசம், இன்னும் ஒருபடி மேலே. வீனுவின் முகத்தை தன் கையில் டாட்டூவாக வரைந்து வைத்திருக்கிறார்.

Veenu Family
Veenu Family

“பரம்பரையா காளைகள் வளர்த்து வந்ததால செல்லப்பிராணிகள் மேல இயல்பாவே ஈர்ப்பு வந்திடுச்சு. சுபாவுக்கும் எனக்கும் காதல் திருமணம். கல்யாணத்துக்கு முன்ன மூணு நாய்கள் வளர்த்தேன். அதுல ரெண்டாவது குட்டி பேரு வீனு. சுபாவுக்கு அவளைப் பிடிச்சிருச்சு. அப்புறம் அந்த வீனுவுக்கு வயசாகிட்டதால விட்டுட்டோம். இவளோட பிறந்தநாள், ஆகஸ்ட் 15. 2011 சுதந்திர தினத்தப்போதான் இவளை வாங்கி வந்தோம். வாங்கினப்போ ஒரு வயசு. அப்போ ரொம்பச் சுட்டித்தனம், இப்போ சமர்த்து” என்கிறார் கண்ணன்.

காலையில் பால், அப்புறம் சாதம், மதியம் சிக்கன், பிஸ்கட் மற்றும் அவ்வப்போது விரும்புகிற அயிட்டங்கள்... இவைதான் வீனுவின் மெனு. “நாங்க சாப்பாட்டுத் தட்டுகளை எடுத்துவெச்சு உக்காந்துட்டோம்னா, வேறெந்த ரூமிலயாச்சும் போய் இருந்துப்பா, சாப்பிட்டு முடிக்கிற வரைக்கும் வெளிய வரமாட்டா. சொல்லாமலேயே பல விஷயங்களைச் சரியா செய்யுறதுல கில்லாடி” என்கிறார் மூத்த மகன் சிபிகிருஷ்ணன்.

Veenu Family
Veenu Family

"மூத்தவன் பி.காம் படிக்கிறான், இளையவன் ப்ளஸ் ஒன். கடைக்குட்டி வீனு. எனக்கு பார்சல் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் பிசினஸ். ரெண்டு தடவை வீனுவை இழக்க இருந்தோம். நிறைய கஷ்டப்பட்டு இவளோட உயிரைக் காப்பாத்தினோம்” என்று சொல்லி சுபா நிறுத்த, பெருமூச்சுடன் தொடர்கிறார் கண்ணன்.

“வந்த புதுசுல வீனுவுக்கு முதுகுப்பக்கம் எலும்பே இல்ல. கொஞ்சம் கொஞ்சமா சரி பண்ணினோம். போன வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டுட்டா. உன்னி தாக்கி, வீடெல்லாம் ரத்தமாப் போயி, கர்ப்பப்பையை நீக்கணும்ங்கிற அளவுக்கு வந்து... அவ்வளவு கொடுமை. இவ ரத்தத்துல, ரெண்டு லட்சம் எண்ணிக்கை இருக்க வேண்டிய ப்ளேட்லட்ஸ் 15,000-தான் இருந்துச்சு. நாம உட்கார்ந்திருக்கிற இதே இடத்துலதான் வீனுவுக்கு ஆபரேஷன் நடந்துச்சு” என வராண்டாவைக் காட்டுகிறார்.

`தன் உரிமையாளர் இறந்த சில நிமிடங்களில் உயிரைவிட்ட நாய்!’ - நெகிழ்ச்சி சம்பவம்

வீட்டுக்கே கால்நடை அரசு மருத்துவர்களை அழைத்துவந்து சிகிச்சையளித்து இருக்கிறார். “இவ உயிரோட இருக்கக் காரணமே கூடல்நகர் மெருன்ராஜ்னு ஒரு டாக்டர்தான்” என உணர்வுபொங்க நன்றி கூறுகிறார்.

தையல் காயம் ஆறும்வரை, தரையில் அடிவயிறு படாதபடி துணிசுற்றச் சொல்லியிருக்கின்றனர் மருத்துவர்கள். ஆனால், உறக்கமில்லாமல் அனத்தியபடியே இருந்திருக்கிறது வீனு. கடைசியில் தனது சட்டையை மாட்டிவிட்டிருக்கிறார் கண்ணன். அவர் வாசம் அதில் நிரம்பியிருந்ததால், நிம்மதியாகத் தூங்கியிருக்கிறது.

Dogs
Dogs

“இவளுக்கு வில்பவர் ஜாஸ்தி. மயக்க மருந்து கொடுத்துட்டு ஆபரேஷன் பண்ணிட்டிருக்காங்க, கண்ணை முழிச்சு எங்களை எட்டிப் பார்க்கிறா. அந்த நாள்கள்ல எல்லாம் ஆயிரம் ஊசிகள் போட்டிருப்போம். அத்தனையையும் தாங்கிட்டு நிக்கிறா” - விழிவிரிய வீனு நெற்றியில் முத்தம் பதிக்கிறார் சுபா.

ஆபரேஷனின்போது, உறவினர்கள் எல்லோரும் வந்துவிட்டனராம். பெங்களூருவிலிருக்கும் தன் அம்மா, இதயக்கோளாறு இருந்தும் அதைப் பொருட்படுத்தாமல் வீனுவைப் பார்க்க வந்ததை சுபா கண்களில் ஆச்சர்யத்தோடு நினைவுகூர்கிறார். “இத்தனைக்கும் இவளைப்பார்த்து அம்மா முதல்ல பயப்படுவாங்க. இப்போவெல்லாம் அவங்களோட முதல் கேள்வி, ‘வீனு எப்படி இருக்கா?’தான்” என கன்னம் சிவக்கச் சிரிக்கிறார் சுபா.

Dogs
Dogs
Vikatan

ஃபேனுக்குக் கீழே உட்கார, ஏ.சி.யில் தூங்க, மழையில் எல்லோரோடும் சேர்ந்து நனைய வீனுவுக்குப் பிடிக்குமாம். மதுவாசம் சுத்தமாகப் பிடிக்காதாம். வீட்டுக்கு வெளியே யாரேனும் மதுபோதையில் இருந்தாலும் விரட்டப் பார்க்குமாம். கண்ணன் தன் பையன்களையோ, வேறு எந்தக் குழந்தையையோ கொஞ்சினால் பொறுக்காத வீனு, தான் போய் தலையைக் கொடுத்துக் கொஞ்சச் சொல்கிறது.

“வீட்டுக்கு வர்றவங்க காலிங் பெல் அடிக்கத் தேவையே இல்லை. வீனுவே எங்களைக் கூப்பிட்டிடும். அதேபோல, சமயங்கள்ல வேறவங்க வண்டி எங்க வீட்டு வண்டி மாதிரி ஹார்ன் சவுண்டு கேட்கும்போது. ‘அப்பா வந்துட்டாரா?’னு நான் என் பசங்ககிட்ட கேட்பேன். ‘வீனு குறைக்கலை, அப்போ அப்பா வண்டி இல்லம்மா’ன்னு சொல்லுவான், இளையவன். அந்தளவுக்கு இவ ஷார்ப்” என்கிறார் சுபா.

Veenu Family
Veenu Family

ஸ்கூட்டியில் நமக்காக ஒரு ரவுண்டு போய்வந்த கண்ணனும் வீனுவும், அவர்களுக்காக சில ரவுண்டுகள் சுற்றத்தொடங்கினர். சுபா சொன்னார், “பெண் இனங்களைப் பெரும்பாலும் வளர்க்க மாட்டாங்க. உயிர்கள்ல என்னங்க பேதம்? என் பசங்க அவளோட ‘மென்சஸ்’ ரத்தத்தையும் சுத்தம் பண்ணுவாங்க. எனக்குத் தெரிஞ்ச ஒரு வீட்டில துக்கம். அதுலயிருந்து அவங்க வீட்டு நாயை உள்ளே விடுறதே இல்ல. அது தினமும் அழும், பாவம். நம்மளோட நம்பிக்கைகளுக்காக உயிர்களை ஒதுக்கக் கூடாது, அதுங்க ஏங்க ஆரம்பிச்சிடும். முன்னெல்லாம் நான் அதிகம் யாரிடமும் பேசமாட்டேன். இப்போ பலரும், 'இது உங்களோடதா?ன்னு சொல்லி எங்கிட்ட பேச்சை ஆரம்பிக்கிறாங்க. இவளால எனக்கு நிறைய நண்பர்கள் சேர்ந்தாங்க. எனக்கு வாழ்க்கையில அதிகம் கத்துக்கொடுத்தது இவதான். எங்களுக்கு நிறைய கொடுத்திருக்கா. எங்ககிட்டயிருந்து அன்பைத் தவிர வேறேதும் எதிர்பார்க்கலை, எங்க வீனு!” - சுபாவின் நிறைவுரையில் அத்தனை அன்பு!

அடுத்த கட்டுரைக்கு