Published:Updated:

``நன்றாகப் புரிந்து வைத்திருந்தாள் அம்பிகா!'' - கருணைக் கொலையான யானையின் கதை

ஆசிய யானை
ஆசிய யானை ( Representational Image )

கடந்த 1948-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் கூர்க் வனப்பகுதியில் பிறந்த அம்பிகாவை 8 வயதில் வனத்துறையினர் பிடித்துப் பழக்கப்படுத்தினர்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள ஸ்மித்சோனியன் வன உயிரினப் பூங்காவில் இருந்த அம்பிகா எனும் இந்திய யானை, வன உயிரினக் காப்பகத்தில் கடந்த திங்களன்று கருணைக் கொலை செய்யப்பட்டதை நாம் அனைவருமே அறிவோம். 72 வயதான அம்பிகா யானை, அமெரிக்காவுக்கு இந்தியக் குழந்தைகள் சார்பில் 1961-ம் ஆண்டு பரிசாக வழங்கப்பட்டது.

இது முற்றிலும் சரியானதுபோல் நான் உணர்கிறேன். தனிப்பட்ட முறையில் என்னைப் பொறுத்தவரை என் அம்மா 88 வயதில் இறந்ததைப் போன்றது. அம்பிகாவும் அதே வழியில் சென்றுள்ளது.
காலோவே, யானை மேலாளர்

1948-ம் ஆண்டில் கர்நாடக மாநிலம் கூர்க் வனப்பகுதியில் பிறந்த அம்பிகா யானை, அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டது. அரை நூற்றாண்டுக்கும் மேலாக அமெரிக்காவின் வாஷிங்டன் நகரிலுள்ள ஸ்மித்சோனியன் வன உயிரினப் பூங்காவில் வளர்க்கப்பட்டது. வட அமெரிக்காவில் அதிக வயதான 3-வது ஆசிய யானையாக அறியப்படும் அம்பிகா, உடல்நலக் குறைவால் பல நாள்களாக நிற்கக்கூட முடியாமல் சிரமப்பட்டுவந்தது. முதுமை காரணமாக அம்பிகாவின் வலது கால் எலும்புகள் வலுவிழந்திருந்தன. மேலும் காலில் புண் உருவாகி, தொடர்ந்து நடமாடுவதிலும் நிற்பதிலும் அதற்குச் சிரமம் ஏற்பட்டது. வேறு வழியின்றி, அம்பிகாவுக்கு அமைதியான வேதனையில்லாத விடையைக் கொடுக்கும் வகையில் கால்நடை மருத்துவர்கள் கருணைக் கொலை செய்தனர்.

இதுகுறித்து ஸ்மித்சோனியன் தேசியப் பூங்கா வெளியிட்ட அறிக்கையில், ``கடந்த 1948-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் கூர்க் வனப்பகுதியில் பிறந்த அம்பிகாவை 8 வயதில் வனத்துறையினர் பிடித்துப் பழக்கப்படுத்தினர். 1961-ம் ஆண்டு அந்த யானை இந்தியக் குழந்தைகள் சார்பில் பரிசாக அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டது. இப்போது ஏற்பட்டுள்ள முதுமை அதன் உடலை வெகுவாகப் பாதித்ததால் வேறு வழியின்றி இந்த முடிவுக்கு வரவேண்டியதாகிவிட்டது" என்று கூறியுள்ளது.

அம்பிகா
அம்பிகா
PTI
யானை மார்க்கெட்டில் குவிந்த நூற்றுக்கணக்கான வியாபாரிகள்... பதறிய ஆண்டிபட்டி மக்கள்!

கடந்த 50 ஆண்டுகளாக அம்பிகா தனது இனத்துக்கான தூதராகவும் முன்னோடியாகவும் பணிபுரிந்துள்ளது. ஆசிய யானை நடத்தை, உயிரியல், இனப்பெருக்கம் மற்றும் சூழலியல் பற்றி விஞ்ஞானிகள் மேற்கொண்ட பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வுகளில் அம்பிகா முழு ஒத்துழைப்பை வழங்கி உதவியுள்ளது. ஒரு கட்டத்தில் அம்பிகாவுக்கு கீல்வாதம் ஏற்படவே, அதற்காக anti inflammatory மருந்துகள் வழங்கப்பட்டுவந்தன. பாதங்கள் மற்றும் நகங்களில் புண்கள் ஏற்பட, கால்களை நன்றாக சுத்தப்படுத்தி குளிப்பாட்டுவது, pedicure மற்றும் antibiotic மருந்துகள் கொடுப்பது எனத் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வந்தது.

அம்பிகாவின் வலது முன் காலில் வளைவு உருவாக, நிற்கும் திறன் பலவீனமானது. இதனால் தன் வாழ்விடத்தையோ, உடன் வளரும் யானைகளையோ முன்புபோல சுற்றிவருவதும் சந்திப்பதும் இல்லை. வயது மூப்பு, உடல் நலக் குறைவு மற்றும் நீண்ட கால மருத்துவ கண்காணிப்பு காரணமாக சிரமப்படுவதைக் கண்டு மனிதாபிமானத்துடன் கருணைக்கொலை செய்வதற்கான முடிவை மிருகக்காட்சி சாலை நிர்வாகிகள் எடுத்தார்கள்.

அம்பிகா என்றழைக்கப்படும் ஆசிய யானை
அம்பிகா என்றழைக்கப்படும் ஆசிய யானை

இதை, யானைக் கொட்டகையில் மேற்கொள்ள முடிவு செய்தனர். அம்பிகா, தன் நண்பர்களான சாந்தி மற்றும் போஸி உடன் சிறிது நேரம் செலவழித்த பின்னர் மருந்துகளைப் பயன்படுத்தி கருணைக் கொலை செய்யப்பட்டது. அவளுடைய நெருங்கிய நண்பர்களான போஸி (45) மற்றும் சாந்தி (44) ஆகியோரின் முன்னால் இது மேற்கொள்ளப்பட்டது. காலை 8:15 மணியளவில், மயக்கமடைந்த பின்னர் படுக்க வைத்து கருணைக்கொலை மருந்துகளை மிருகக்காட்சிசாலையின் தலைமை கால்நடை மருத்துவர் டான் நெய்ஃபர் வழங்கினார். காலை 9:15 மணியளவில் அம்பிகா இறந்தது என்று அவரது நீண்டகால காப்பாளர் மேரி காலோவே வருத்தத்தோடு தெரிவித்துள்ளார்.

போஸியும் சாந்தியும் அம்பிகாவின் உடலுடன் சிறிது நேரம் இருக்க அனுமதிக்கப்பட்டன. பொதுவாக யானைகள் தம் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் இறந்துவிட்டால், விநோதமாகச் செயல்படும். போஸி மற்றும் சாந்தியின் விநோத செயல்பாடுகளை அனைவருமே எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், எதிர்பார்த்ததுபோல் வியத்தகு முறையில் அவை செயல்படவில்லை என்று மிருகக்காட்சிசாலை தெரிவித்துள்ளது.

அவள் மிகவும் புத்திசாலி யானை. இந்த இடத்தைப் பற்றியும் எங்களைப் பற்றியும் அவளுக்கு நிறையவே தெரிந்திருந்தது.
காலோவே, யானை மேலாளர்

33 ஆண்டுகளாக அம்பிகாவின் பராமரிப்பாளராக இருந்த யானை மேலாளரான காலோவே, ``இது முற்றிலும் சரியானது போல் நான் உணர்கிறேன். தனிப்பட்ட முறையில் என்னைப் பொறுத்தவரை என் அம்மா 88 வயதில் இறந்ததைப் போன்றது. அம்பிகாவும் அதே வழியில் சென்றுள்ளது. அவள் சோர்வாகவும் வேதனையுடனும் தோன்றினாள். எனவே, நாங்கள் அவளுக்கு எங்களால் முடிந்த அமைதிப் பரிசை வழங்கினோம். அவளது இழப்பு மிகவும் வருத்தமளிக்கிறது" என்றார்.

அவளது ஏறக்குறைய 6,500 பவுண்டு உடல், டிரக் கொண்டு விலங்குகளுக்கான பிரேதப் பரிசோதனைக் கூடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, கடந்த சனிக்கிழமை அன்று பிரேதப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த மாதம் மிருகக்காட்சிசாலையில் மேற்கொண்ட இரண்டாவது கருணைக்கொலை இதுவாகும். ஜோரா என்ற அமெரிக்க காட்டெருமை மார்ச் 3-ம் தேதி காலில் அடிபட்டு இடது கால் முறிந்தது. 7 வயதான ஜோரா 6 ஆண்டுகளாக மிருகக்காட்சிசாலையில் வாழ்ந்து வந்தது. அதுவும் இதைப்போலவே கருணைக் கொலை செய்யப்பட்டது. 59 ஆண்டுகளாக மிருகக்காட்சிசாலையில் இருந்த 7 யானைகளில் ஒன்றான அம்பிகா இப்போது இல்லை என்பதைக் கனத்த மனதோடு ஏற்றுக்கொள்ளப் போவதாக மிருகக்காட்சி சாலையில் பணிபுரிவோர் கூறினர்.

ஆசிய யானை
ஆசிய யானை
`விவசாய நிலத்தில் புதைக்கப்பட்ட காட்டு யானை!' -வனத்துறைக்கு அதிர்ச்சி கொடுத்த குடியாத்தம் விவசாயி

அம்பிகா இறந்த பின்னர் அவளுடைய உடல், காப்பாளர் குழுவால் சூழப்பட்டது. ``அவள் மிகவும் புத்திசாலி யானை. இந்த இடத்தைப் பற்றியும் எங்களைப் பற்றியும் அவளுக்கு நிறையே தெரிந்திருந்தது. அவளை உதாரணமாக கொண்டு மற்ற யானைகளுக்கும் எங்களால் பயிற்சியளிக்க முடிந்தது" என்றார் காலோவே.

அடுத்த கட்டுரைக்கு