Published:Updated:

`காதலை பரிசுடன் வெளிப்படுத்த அவற்றுக்கும் தெரியும்!'- தன் நாயின் காதல் பற்றி ஓர் அம்மாவின் பகிர்தல்

Holly
Holly ( www.instagram.com/holly.and.her.money )

``ஹாரி டேட்டிங் செய்ய வந்திருக்கிறான் என்று என் வீட்டினர் சொன்னபோது நான் நம்பவில்லை.''

`எங்களோட அன்பைப் பார்த்ததற்கு அப்புறம் நாய்க் காதல்னு யாராவது கிண்டல் செய்வீங்க' என்று கேட்காமல் கேட்கிறது அந்த வீடியோ. `அப்படியென்ன இருக்கு அந்த வீடியோவில்' என்பவர்கள் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.

love
love
www.instagram.com/holly.and.her.money

அருகே இருக்கிற புகைப்படத்தில் கருகருவென ஜொலிப்பவளின் பெயர் ஹோலி. லேப்ரடார் வகை நாய். நியூயார்க்கில் இருக்கிற இவளுக்கு holly.and.her.money என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்கூட இருக்கிறது. ஹோலியின் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஹாரி என்ற நாயை வளர்க்கிறார்கள். ஹோலிக்கு சரிசமமான அழகில் தங்க நிறத்தில் ஜொலிப்பவன் இவன்.

`சிறுவயதில் நண்பர்களாகச் சுற்றித் திரிந்தவர்கள், தற்போது காதலர்களாகச் சுற்றித் திரிகிறார்கள்' எனும் ஹோலியின் குடும்பத்தினர், அதற்கு ஆதாரமாக வீடியோ ஒன்றையும், ஹோலியின் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார்கள்.

அந்த வீடியோவில், ஹாரி, இரவு நேரத்தில் ஹோலியின் வீட்டுக்குப் போய், சத்தம் எழுப்பி அவளை பந்து விளையாட அழைக்கிறான். ஹோலியை வளர்த்து வருகிற கேசி குக் (Casi cook), ``என் பப்பியின் பாய் ஃப்ரெண்ட் ஹாரி பக்கத்து வீட்டில்தான் வசிக்கிறான். அன்றைக்கு இரவு 10.55. அவன் ஒரு பந்தை ஹோலிக்குப் பரிசளித்து டேட் செய்ய வந்தான். கதவுக்கு அந்தப் பக்கமாக ஹாரி சத்தமிட, வீட்டுக்குள்ளிருந்தபடி ஹோலி சிணுங்க... `ஹாரி டேட்டிங் செய்ய வந்திருக்கிறான்' என்று என் வீட்டினர் சொன்னபோது நான் நம்பவில்லை. என் சகோதரன் கதவைத் திறந்ததும், ஹோலி தாவிக் குதித்து வெளியே ஓட, அந்த சின்னஞ்சிறு பந்து எங்கள் தோட்டம் முழுக்க உருண்டோடியது. இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் வரை வளர்ப்புப் பிராணிகளுக்கும் நம்மைப் போலவே காதல் உணர்வு இருக்கும். அதை ஒரு பரிசுடன் வெளிப்படுத்த அவற்றுக்கும் தெரியும் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை'' என்கிறார் சிரிப்பும் நெகிழ்ச்சியுமாய்.

ஹோலியைப் பற்றி ஒரு கூடுதல் தகவல். அவளுடைய பெயரில் holly.and.her.money என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட் இருக்கிறது என்று சொன்னோம் இல்லையா... அதற்குக் காரணம் இருக்கிறது.

ஹோலி குட்டியாக இருக்கையில், வீட்டில் இருப்பவர்களின் ஹேண்ட் பேகில் இருக்கிற பொருள்களை, டாலர் நோட்டுகளை எடுத்துக்கொண்டு போய் ஒளித்து வைத்துவிடுவாளாம். வேறு வழிதெரியாமல் ஹோலிக்குப் பிடித்த உணவுப்பொருளை லஞ்சமாகக் கொடுத்து, பணத்தைத் திரும்ப வாங்குவார்களாம். இந்த ரகசியத்தை மோப்பம் பிடித்துவிட்ட ஹோலி, தனக்கு ஏதாவது ட்ரீட் வேண்டுமென்றால், உடனே பணத்தைத் திருடிக்கொண்டு, அதைச் சம்பந்தப்பட்டவர்களின் கண்முன்னாடி கொண்டு போய் காட்டுவாளாம். அப்புறமென்ன ட்ரீட் தான்... அதன் பிரதிபலிப்புதான் holly.and.her.money.

அடுத்த கட்டுரைக்கு