Published:Updated:

வனமகன்களுக்காக ‘மனம்’ வைக்குமா அரசு? - கண்ணீரில் வேட்டைத் தடுப்புக் காவலர்கள்!

எங்க வேலைக்கு நேரங்காலமே கிடையாது. காட்டுக்குள்ள இருக்குற கேம்ப்ல மாசத்துல 15 நாள் தங்கி வேலை பார்க்கணும்.

பிரீமியம் ஸ்டோரி
சில ஆண்டுகளுக்கு முன்னர் செய்தி நிமித்தமாக கானகப் பயணம் செல்ல வேண்டியிருந்தது... தெங்குமரஹாடாவின் அடர்ந்த கானகம் அது. 28 ஆண்டுகளாக வனத்துக்குள்ளேயே சுற்றித்திரியும் மூத்த வேட்டைத் தடுப்புக் காவலர் ஒருவர் நம்மைப் பாதுகாப்புடன் வழிநடத்திச் சென்றார். திடீரென்று ஓரிடத்தில், ``உஸ்ஸ்...’’ என்று எச்சரித்தபடி நம்மை நிறுத்தி, மூக்கை உறிஞ்சி மோப்பம் பிடித்தார். பிறகு வானத்தை கவனித்தார். சற்றுத் தொலைவில் நான்கைந்து வல்லூறுகள் வட்டமிட்டுக்கொண்டிருந்தன. ``இங்கனதான் பக்கத்துல `கில்’ இருக்கு... அதுகூடவே சிறுத்தையோ புலியோ இருக்கலாம். உள்ளே போறது நல்லதில்லை சார்” என்றார். பிறகு சற்றுத் தூரம் அவர் மட்டும் சென்று பார்த்துவிட்டுவந்தவர், உற்சாகமாக நம்மை அழைத்துச் சென்று ஒரு மரத்தைச் சுட்டிக்காட்டினார். அங்கு பாதி உண்ணப்பட்ட நிலையில் கடமான் கிளையில் வைக்கப்பட்டிருந்தது. ரத்தம்கூட உறையாமல்... சொட்டிக் கொண்டிருந்ததைக் காட்டியவர், ``இப்போதான் சிறுத்தை சாப்பிட்டுட்டு, மிச்சத்தை மரத்துமேல வெச்சிட்டுப் போயிருக்கு. கீழேவெச்சா ஹைனாக்கள் சாப்பிட்டுடும். திரும்பவும் எட்டு மணி நேரம் கழிச்சு சிறுத்தை வந்து மரத்துமேல இருக்குறதைச் சாப்பிடும். புலிக்கும் இந்தப் பழக்கம் இருக்கும். ஆனா, அது மரம் ஏறாது. புதருக்குள்ளதான் மறைச்சுவெக்கும்” என்றபடியே நம்மைப் பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்த்தார்.

இப்போது அதே வேட்டைத் தடுப்புக் காவலரிட மிருந்துதான் அழைப்பு வந்தது. குரலில் உற்சாகமே இல்லாமல் சோகமாகப் பேசினார்... “சார், எங்கள்ல 15 பர்சன்ட் பேரை வனக் காவலர்களாகப் பணி நிரந்தரம் செய்யறதுக்கு அரசு முடிவு செஞ்சுது. அதுக்காக 112 பேருக்கு மெட்ராஸுல இன்டர்வியூ எல்லாம் வெச்சாங்க. பொறவு ஃபாரஸ்ட் டிபார்மென்ட் எதையுமே கண்டுக்கலை... செலக்ட் ஆனதுல பலரு ரெண்டொரு வருஷத்துல ரிட்டயர்டு ஆவப்போறோம்க. எங்க வாழ்க்கை இதுலயே முடிஞ்சிடுமோன்னு பயமா இருக்கு... இதை கவர்மென்ட் கண்ணுலபடுற மாதிரி கொஞ்சம் எழுதிவுடுங்க சார்...” என்றார் தழுதழுத்த குரலில்.

வனமகன்களுக்காக ‘மனம்’ வைக்குமா அரசு? - கண்ணீரில் வேட்டைத் தடுப்புக் காவலர்கள்!

காலங்காலமாக வனத்தையே நம்பி வாழும் பழங்குடி மக்களுக்கு, வனம் குறித்த பாரம்பர்ய அனுபவ அறிவு அதிகம். அதனாலேயே, `வனம் சார்ந்த பணிகளில் 30 சதவிகிதம் பழங்குடிகளை நியமிக்க வேண்டும்’ என்று வனத்துறை விதிமுறை இருக்கிறது. இதற்காகவே, தற்காலிகப் பணியாக பழங்குடிகள் வேட்டைத் தடுப்புக் காவலர் பணியில் நியமிக்கப்படுகிறார்கள். வனத்துறையில் களத்தில் வேலை பார்க்கும் கடைநிலை ஊழியர் களும் இவர்களே. ஆனால், 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணி நிரந்தரமும் செய்யாமல், பதவி உயர்வும் கிடைக்காமல் கடைநிலை ஊழியர் களாகவே அவர்களின் வாழ்க்கை முடிந்துவிடுகிறது என்பதுதான் சோகம்!

இப்படியான சூழலில்தான், வனத்துறையில் பணியாற்றிவரும் 1,119 வேட்டைத் தடுப்புக் காவலர்களில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிவரும் 15 சதவிகிதம் பேரை வனக்காவலர் களாகப் பணி நிரந்தரம் செய்ய கடந்த ஆண்டு அரசு முடிவெடுத்தது. தகுதியான 112 பேர் தேர்வு செய்யப்பட்டு, 2019, ஆகஸ்ட் மாதம் சென்னையில் நேர்முகத்தேர்வும், சான்றிதழ் சரிபார்ப்பும் நடத்தப்பட்டன. ஆனால், இதுவரை அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.

தொடர்ந்து நம்மிடம் பேசிய அந்த வேட்டைத் தடுப்புக் காவலர், “எங்க வேலைக்கு நேரங்காலமே கிடையாது. காட்டுக்குள்ள இருக்குற கேம்ப்ல மாசத்துல 15 நாள் தங்கி வேலை பார்க்கணும். சின்ன ரூம் அது. எந்த வசதியும் இருக்காது. பல நேரங்கள்ல தனியாத்தான் தங்கி வேலை செய் வோம். எப்படியாச்சும் வனக்காவலர் போஸ்டிங் கிடைச்சு, நிரந்தரப் பணியில் சேர்ந்துடலாம்; நம்ம குடும்பத்தைத் தூக்கி நிறுத்திடலாம்கிற நம்பிக்கைலதான் எல்லா கஷ்டத்தையும் தாங்கிக்கிறோம். ஆனா, பழங்குடி மக்களுக்குப் பதவி உயர்வு தர தொடர்ந்து தாமதம் பண்றாங்க.

வனமகன்களுக்காக ‘மனம்’ வைக்குமா அரசு? - கண்ணீரில் வேட்டைத் தடுப்புக் காவலர்கள்!

இப்போ டி.என்.பி.எஸ்.சி மூலமா நேரடியா வனக்காவலர் பணிக்கு ஆள் எடுக்குறாங்க. அவங்களுக்குக் காட்டைப் பத்தி எதுவும் தெரியாது. நாங்கதான் ட்ரெய்னிங் கொடுக்குறோம். எங்ககிட்ட ட்ரெய்னிங் எடுத்துக்கிட்டு, எங்களுக்கே உயரதிகாரியா வந்துடுறாங்க. நாங்க இன்னும் அதே இடத்துலதான் இருக்கோம். அவங்களுக்கு வாய்ப்பு கொடுக்கறதைத் தப்பு சொல்லலை. எங்களை மாதிரி கஷ்டப்படுறவங்களுக்கும் வாய்ப்பு கொடுக்கணும்’’ என்றார் ஆதங்கத்துடன்.

நம்மிடம் பேசிய மற்றொரு காவலரோ, ‘‘பத்து வருஷத்துக்கு மேல வேலை செஞ்சாலே பணி நிரந்தரம் செய்யணும்னு அரசாணை சொல்லுது. ஆனா, எங்கப் பழங்குடி மக்கள்ல 36 வருஷமா வேலை செய்யறவங்களும் இருக்காங்க. இப்போ வரை அவங்களைப் பணி நிரந்தரம் செய்யலை. காட்டுல கஞ்சாச் செடி போட்டிருக்காங்களா, மரம் வெட்டியிருக்காங்களா, நக்சலைட், மாவோயிஸ்ட் நடமாட்டம் இருக்கானு கண்காணிக் கணும். வனவிலங்குகள் இறப்பு, வன எல்லை ஆக்கிரமிப்பு பிரச்னையை கவனிக்கணும். வனவிலங்குகளோட வாழ்விடம் எந்தச் சூழ்நிலையில இருக்குங்கிறதைக் கண்காணிக்கணும். கடைநிலை ஊழியர் வேலையில ஆரம்பிச்சு, ஒரு பயாலஜிஸ்ட் வேலை வரை எல்லாத்தையும் செய்யுறோம்’’ என்றவர், பணியின்போது தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட சம்பவங்களையும் விவரித்தார்...

‘‘காட்டுக்குள்ள குறிப்பிட்ட இடங்கள்லதான் போன் சிக்னல் கிடைக்கும். அப்படியொரு இடத் துக்குப் போய், சிக்னலுக்காக நின்னுட்டு இருந்தேன். பக்கத்துல ஏதோ நிக்கிற மாதிரி உணர்ந்தேன். திரும்பிப் பார்த்தா 10 அடி தூரத்துல ஒரு புலி என்னைப் பார்த்துக்கிட்டு இருந்துச்சு. நல்ல இருட்டு. கையில இருந்த டார்ச்சை ஆன் பண்ணினவுடனே அது ஓடிருச்சு. சாமி புண்ணியம், நான் பொழைச்சது. ஏதோ கோபத்துல பலமுறை பெரிய சாமி (யானை) துரத்தியிருக்கு. சின்ன சாமி (பாம்பு) கடிச்சிருக்கு. மழைக்காலம் வந்தா உடம் பெல்லாம் அட்டை ஒட்டிக்கும். மண்ணெண்ணெய் தேய்ச்சு, மெழுகுவத்தி நெருப்புக் காட்டி எடுப்போம். வலி உசுரு போகும். ரத்தம் உறிஞ்சுனதுல ரொம்ப களைச்சிடுவோம். இப்படி நெதமும் உசுரைப் பணயம்வெச்சுத்தான் வேலை பார்க்குறோம். எங்கள்ல பலரு ரிட்டயர்டு ஆகுற வயசுல இருக்காங்க. வனத்துறை இன்னமும் தாமதம் பண்ணினா அவங்க வாழ்க்கை இதுலயே முடிஞ்சிடும். இனியும் தாமதிக்காம எங்களைப் பணி நிரந்தரம் பண்ணணும்... இந்த அரசாங்கத்தைக் கையெடுத்து கும்பிட்டுக்கிறோம்’’ என்றார் உருக்கமாக.

வனமகன்களுக்காக ‘மனம்’ வைக்குமா அரசு? - கண்ணீரில் வேட்டைத் தடுப்புக் காவலர்கள்!

வனத்துறை முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் யுவராஜிடம் இது குறித்துக் கேட் டோம். ‘‘இந்த உத்தரவு ஏற்கெனவே அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அரசும் இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டிருக்கிறது. டிசம்பருக்குள் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.

பழங்குடிகளின் கானகம் குறித்த பாரம்பர்யமான நுண்ணறிவை உலகில் எந்தக் கல்லூரியிலும் கற்றுத்தேற முடியாது. அவர்களை அங்கீகரித்து, அவர்களின் பாரம்பர்ய அறிவை அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டியது அரசின் கட்டாயக் கடமை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு