Published:Updated:

`எழுந்து வா எஸ்.ஐ..!' - தெப்பக்காடு முகாமை உலுக்கிய பெள்ளனின் கண்ணீர் #MasinagudiElephant

Elephant rescue operation
Elephant rescue operation ( Photo: Vikatan / K Arun )

யார்‌‌ யாரோ‌ வந்து அவரது கண்ணீரை‌‌ அடக்க முயன்றும் கூடியதே தவிர குறைந்த பாடில்லை. இவரது கண்ணீரால் தெப்பக்காடு முகாமே துயரத்தில் ஆழ்ந்தது.

மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இனம் புரியாத பந்தம் சில நேரங்களில் உருவாவது உண்டு. அந்த நேச உறவில் குறிப்பிட்ட அந்த நபரோ, அந்த விலங்கோ பிரிய நேர்ந்தால், இழந்த தரப்புக்கு அது பெரும் சோகத்தை ஏற்படுத்தும்.

bellan
bellan

காயத்துடன் அவதிப்பட்டு வந்த ஆண் காட்டு யானை ஒன்றை இரண்டு மாதங்களாகத் தொடர்ந்து கண்காணித்து வந்தவர் வேட்டைத் தடுப்பு காவலர் பெள்ளன். மீட்பின்போது இவர் கண் முன்பே அந்த யானை உயிரிழந்தால், அதை ஏற்க முடியாமல் கதறி அழுதது மொத்த முதுமலைக் காட்டையும் ஈரமாக்கியது.

நீலகிரி மாவட்டம் முதுமலை பொக்காபுரம் வனப் பகுதியை ஒட்டியுள்ள பழங்குடியின கிராமத்தைச் சுற்றியே கடந்த மாதத்தில் ஆண் காட்டு யானை ஒன்று உலவி வந்து கொண்டிருந்தது. யானையின் வழக்கத்துக்கு மாறான செயலால் குழம்பிய பழங்குடிகள், வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

wounded elephant
wounded elephant

யானையை வந்து பார்வையிட்ட சிங்காரா வனத்துறையினர், யானையின் முதுகில் ஆழமான காயம் ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்து உறுதி செய்தனர். காயத்தைக் குணமாக்க பழங்களில் மாத்திரைகளை வைத்து கொடுக்க முடிவு செய்து, மாத்திரையோடு பழங்களைக் கொடுத்து வந்தனர். இந்த முயற்சியில் ‌வேட்டைத்தடுப்பு காவலர் பெள்ளனும் உடன் இருந்தார்.

இந்த நிலையில், அந்த யானைக்கு காயம் அதிகமாக இருப்பதால் கூடுதல் சிகிச்சை தேவை என்பதை அறிந்து அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இரண்டு கும்கி யானைகளின் உதவியோடு கடந்த 28-ம் தேதி வனக் கால்நடை மருத்துவக் குழுவினர், அந்தக் காட்டு யானையைச் சுற்றி வளைத்து மயக்க ஊசி செலுத்தினர்.

wound on the elephant
wound on the elephant

அரை மயக்கத்தில் யானையின் அருகில் நெருங்கி 2 மணி நேரம் சிகிச்சை அளித்து பின்னர் விடுவித்தனர். தொடர்ந்து கண்காணித்தும் வந்தனர்.

அந்த யானையைத் தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் பெள்ளன் ஈடுபட்டு வந்தார். இரவு பகலாக யானையைக் கண்காணித்து வந்தார். `எஸ்.ஐ' என்ற பெயரில் உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் யானைதான் இது என்பதை உறுதி செய்தனர். கண்காணிக்கும் பொருட்டு யானையைச் சுற்றியே பெள்ளன் உள்ளிட்ட வேட்டைத் தடுப்பு காவலர்கள் வலம் வந்து கொண்டிருந்ததால், ஒரு கட்டத்தில் இவர்களை யானையும் நம்பத் தொடங்கியது.

anti poaching watcher
anti poaching watcher

இந்த யானையின் இயல்பையும், தற்போது காயத்தால் ஏற்பட்ட இயலாமையையும் பெள்ளன் நன்கு அறிந்து கொண்டார். அவ்வப்போது பழங்களையும் கொடுத்து வந்தார். காயத்திலிருந்து யானை மீண்டு வருவதைப் பார்த்து நம்பிக்கை கொண்டிருந்தார்.

இத்தகைய ஒரு நம்பிக்கையான சூழலில்தான் அந்தக் கொடூரமான காட்சியைக் கண்டு பெள்ளன் உள்ளிட்ட வனத்துறையினர் கண்கலங்கி நின்றனர்.

bellan with tears
bellan with tears

கடந்த 17-ம் தேதியன்று அதே யானை தனது இடது காது சிதைக்கப்பட்ட நிலையில் கடுமையான காயத்துடன் முன்பக்கம் முழுக்க ரத்தம் சொட்டச் சொட்ட சோர்ந்து நின்றது. அதன் அருகிலேயே இடது காதின் பாகங்களும் அறுந்து கிடந்தன.

இதைப் பார்த்து பதறிய வனத்துறையினர், உடனடியாக யானையைப்‌ பிடித்து மயக்க ஊசி செலுத்தி தெப்பக்காடு முகாமுக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்து காப்பாற்ற முடிவு செய்தனர்.

மயக்க ஊசியை செலுத்தினர்
மயக்க ஊசியை செலுத்தினர்

கடந்த 19-ம் தேதி காலை இரண்டு வனக் கால்நடை மருத்துவர்கள் குழுவுடன் வசிம், விஜய், கிரி, கிருஷ்ணா ஆகிய நான்கு கும்கி யானைகள் உதவியுடன் அந்த யானையைச் சுற்றி வளைத்தனர். கால்நடை மருத்துவர்கள் துப்பாக்கி மூலம் முதல் மயக்க ஊசியைச் செலுத்தினர். அதன் வேகம்‌ மெல்ல குறைய ஆரம்பித்தது.

சிறிது நேரத்தில் அடுத்த ஊசியைச் செலுத்தினர். யானை‌ இன்னும் சோர்வடைந்தது. கும்கிகளோடு அருகில் நெருங்கி யானையின் கால்களில் கயிற்றைப் பிணைத்தனர். யானை இவர்களின் கட்டுக்குள் வந்தது. முதலுதவி சிகிச்சை அளிக்க அருகில் சென்ற கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனத்துறையினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

kumkis in operation
kumkis in operation

காரணம், யானைக்கு இடது பகுதிகளில் ஏற்பட்டிருப்பது தீக்காயங்கள். உயிரோடு இருக்கும் யானைக்கு தீக்காயங்கள் ஏற்படுவது சாத்தியமில்லாத ஒன்று.

விரோதிகள் சிலர் யானையைக் கொல்ல வேண்டும் என பெட்ரோல் வெடிகுண்டை வீசியிருக்க வேண்டும் அல்லது பெட்ரோல், டீசல், கெரோசின் போன்றவற்றைக் கொண்டு பந்தம் கொளுத்தி யானையின் மீது எரிந்து சித்ரவதை செய்திருக்க வேண்டும் என உறுதி செய்த மருத்துவர்கள், உடனடியாக யானையை ஜே.சி.பி‌ இயந்திரம் மற்றும் கும்கி யானைகளின் உதவியுடன் லாரியில் ஏற்றி, தெப்பக்காடு வளர்ப்பு முகாமை நோக்கிக் கிளப்பினர்.

வளர்ப்பு முகாமை நோக்கி கிளப்பினர்.
வளர்ப்பு முகாமை நோக்கி கிளப்பினர்.

கால்நடை மருத்துவர்கள் ஒருவித பதற்றத்திலேயே இருந்தாலும், பெள்ளன் போன்ற வனத்துறையினர் யானையைக் காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தனர். தெப்பக்காடு வந்தடைந்த லாரியை வரவேற்று யானையை இறக்க ஏதுவான இடத்தில் நிறுத்தி அடுத்தகட்ட வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர்.

ஆனால், லாரியில் இருந்த யானையோ எந்த அசைவுமின்றி அமைதியாக இருந்தது. பதற்றமடைந்தவர்கள் அருகில் சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது, வரும் வழியிலேயே யானை தனது இறுதி மூச்சை நிறுத்தியதை.

elephant died
elephant died

அனைவரது முகத்திலும் திகில் பரவியிருக்க அந்த இடமே மயான அமைதியாக இருந்தது. திடீரென காற்றைக் கிழித்துக்கொண்டு ஒரு அழுகுரல் கேட்க யானையின் பக்கம் பார்வைகள் குவிந்தன. தலையில் தொப்பியுடன் வனப் பணியாளர்‌ சீருடையில் இருந்த நடுத்தர வயதுக்காரர் ஒருவர் இறந்த யானையின் தும்பிக்கையைப் பற்றி `எழுந்து வா எஸ்.ஐ... உனக்கு ஒண்ணும் இல்ல' என இடைவிடாது கதறி அழுதுகொண்டிருக்கிறார். யார்‌‌ யாரோ‌ வந்து அவரது கண்ணீரை‌‌ அடக்க முயன்றும் கூடியதே தவிர குறைந்த பாடில்லை. இவரது கண்ணீரால் தெப்பக்காடு முகாமே துயரத்தில் ஆழ்ந்தது.

தலையைக் கவிழ்த்தபடி வனத்துறை உடுப்பில் இருந்த ஒருவர் கரகரப்பு குரலில் நம்மிடம் பேசுகையில், ``இவர் பேரு பெள்ளன் சார். பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இவர் ஏ.பி.டபிள்யூவா இருக்காப்ல. ரெண்டு மாசமா இவர்தான் இந்த யானைய‌ கண்காணிச்சிட்டு இருந்தார். தெனமும் கூடவே இருந்ததால இவருக்கு அது மேல ரொம்ப‌ பாசமாயிடுச்சு.

Died Elephant
Died Elephant

இந்த‌ யானைக்கும் இவர நல்லா தெரியும். எப்படியாவது காப்பத்திடலாமுன்னு இருந்தோம். கடைசில இப்படி ஆயிடுச்சு. இத ஏத்துக்க முடியாத பெள்ளன் கெடந்து தவிக்கிறார்" எனப்‌ புலம்பினார்.

தாயைத் தேடியலையும்‌ சிறு குழந்தையைப்போல இறந்த‌ யானையை நினைத்து தேம்பித் தேம்பி அழுது வண்ணமே இருந்தார்‌ பழங்குடி பெள்ளன்.

elephant died
elephant died
முதுமலை: யானை மீது பெட்ரோல் குண்டுவீச்சு! - தீக்காயங்களை உறுதி செய்த மருத்துவர்

காயத்துடன் அவதிப்பட்டு வந்த யானையை உயிரோடு‌ தீ வைத்து சிதைத்த கொடூரர்கள் வாழும் இதே மண்ணில்தான் பெள்ளன் போன்ற வெள்ளந்திகளும் வாழ்கிறார்கள் என யோசித்தபடியே கனத்த இதயத்தோடு திரும்பினோம்.

அடுத்த கட்டுரைக்கு