Published:Updated:

நகரமயமாக்கல் நம் வீட்டு பல்லிகளையும் விட்டுவைக்கவில்லை! #WorldLizardDay

பல்லி
பல்லி

இயற்கை பல்லுயிர்ச் சூழலில் பல்லிகளின் பங்கு மிக முக்கியமானது.

பூமியில் வாழ அனைத்து உயிரினங்களுக்கும் இடமும் உரிமையும் உண்டு. ஊர்வனங்கள், பறவையினங்கள், வனவிலங்குகள், பூச்சிகள், தாவரங்கள் அனைத்தும் சேர்ந்துதான் ஒரு பல்லுயிரிக் கோளம் அமைகிறது. ஓர் உயிரினம் இவ்வுலகில் வாழவேண்டும் என்றால் அதற்கு மற்றோர் உயிரினத்தின் துணை அவசியமாகிறது. இதில் பல்லிகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பலரும் பார்ப்பதற்கே அருவருப்பு என நினைக்கும் இந்த ஊர்வன இனங்கள், மாறிவரும் சூழலியல் மாற்றங்களால் இன்று பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகின்றன.

பல்லிகளைப் பொறுத்தவரை நம் வீட்டு பல்லிகள், ஓணான்கள் ஆகிய சில வகைகள்தான் நமக்குத் தெரியும். ஆனால், இந்த உலகில் ஆயிரக்கணக்கான பல்லி வகைகள் இருக்கின்றன.

ஓணான்கள்
ஓணான்கள்

இந்த உயிரினங்களைக் கொண்டாட ஆண்டுதோறும் ஆகஸ்ட் 14-ம் தேதி உலக பல்லிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த தினமானது ஊர்வன இனக் காதலர்கள், விலங்கின ஆர்வலர்கள் மற்றும் சூழலியல் கல்வியாளர்களின் ஆதரவோடு நடத்தப்படுகிறது. பல்வேறு நாடுகளில் உள்ள உயிரியல் பூங்காக்கள், சரணாலயங்கள், அருங்காட்சியங்கள் மற்றும் கல்லூரிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றால் இந்த தினத்திற்கான சிறப்பு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதன்மூலம் பல்லிகளைப் பற்றிய விழிப்புணர்வு, தகவல்கள், அழிந்துவரும் இனங்கள், வேட்டையாடப்படும் உயிரினங்களை மீட்பு மற்றும் பாதுகாப்பது போன்றவை பற்றி விவாதிக்கப்படுகிறது.

பல்லிகள் குளிர்ந்த இரத்தம் கொண்ட ஊர்வனம் ஆகும். அவை நகர்ப்புறம் முதல் அமேசான் காடுகள் வரை பல்வேறு வகையான நிலப்பரப்பிலும் வாழ்ந்துவருகின்றன. உலகின் மிகப்பெரிய பல்லியான கொமோடா டிராகன் முதல் மிகச்சிறிய பல்லியான ப்ரூக்ஸியா மைக்ரா வரை இதுவரைக்கும் உலகில் 5600-க்கும் மேற்பட்ட பல்லி இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுபோக பல பல்லி இனங்கள் மனிதர்களுக்குத் தெரியாமலேயே வாழ்ந்துவருவதாகவும் கூறப்படுகிறது. இந்தப் பல்லி இனங்களுக்கு இன்று பெரும் சவாலாக இருப்பது வாழ்விட இழப்புதான்.

ஓணான்கள்
ஓணான்கள்

பல்லிகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள மதுரையைச் சேர்ந்த ஊர்வன அமைப்பின் விஷ்வா அவர்களிடம் பேசினோம். ஓணான், கவுளி, உடும்பு, பச்சோந்தி, அரணைகள் ஆகியவை சூழலைச் சார்ந்து உடல் வெப்பத்தை சமன் செய்திடும் உயிரினங்கள். எனவே ஆர்டிக் மற்றும் அன்டார்டிக் போன்ற குளிர்நிறைந்த பகுதிகளில் இவை வாழ்வதில்லை. காரணம் குளிர் ரத்தப் பிராணிகள் என்பதால் தங்கள் உடல் வெப்பத்தை உடலளவில் உற்பத்தி செய்திட இயலாது.

சுமார் 200 வகைக்கும் மேலான பல்லியினங்கள் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பல்லிகள் உயிர்ச்சங்கிலித் தொடர் சமன்பாட்டில் முக்கிய காரணியாக விளங்குகிறது. பூச்சிகளின் பெருக்கத்தை கட்டுக்குள் வைப்பது போல் பல உயிரினங்களுக்கு (பறவை, பாம்புகள்) இரை விலங்காகவும் விளங்குகிறது. கொசுக்களை தின்றொழித்த பல்லிகளை மனிதன் அதிக அளவில் கொன்றொழித்தான். ஆம், பல்லிகள்மீது மனிதன் கொண்டிருந்த மூட நம்பிக்கைகள் மற்றும் பூச்சிகளை ஒழிக்க பயன்படுத்திய உயிர்க்கொல்லி நச்சு மருந்துகள் இவற்றின் அழிவுக்குக் காரணமாக அமைகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பறக்கும் பல்லிகள் (Flying Lizards, பாறை ஓணான்கள் (Rock Agama), விசிறித் தொண்டை ஓணான்கள் (Fan Throated Lizard), மரப்பல்லிகள் வகைகள், பச்சைநிற காட்டு ஓணான்கள் உட்பட இன்னும் பல வகை இனங்களைக் காணலாம்.

ஓணான்கள்
ஓணான்கள்

நகரமயமாக்கல் பல்லி இனங்களின் வாழ்க்கைச் சூழலை பாதித்து அவ்வினத்தின் அழிவுக்கு வித்திட்டது. என் சிறுவயதில் இயல்பாய் நான் கண்டு விளையாடிய அரணைகள், ஓணான்களை இன்று காண்பதே அரிதாகிவிட்டது. தோட்டங்கள் கட்டடங்களாக ஆனதும், மண், சிமென்ட் பூச்சால் பசுமை துளிர்க்க முடியவில்லை. அதனால் பல பல்லிகள் அழிந்தன. தண்ணீர் கேட்ட ராமருக்கு சிறுநீர் கொடுத்த கோபம், என் பகுத்தறிவு இல்லாத தலைமுறை வரை நீண்டது. விளைவு காய்ந்த நீளக் குட்சியில் நரம்பு கோத்த சுருக்கில் எத்தனை எத்தனை ஓணான்கள் மூக்குப்பொடி மூக்கில் இட்டு ஆட வைக்கிறேன் என்ற பெயரில் கொன்று குவித்திருப்போம், வாலில் நூள் கட்டி மின்கம்பத்தில் கட்டியிருப்போம், தீயில் வாட்டியிருப்போம்.

இதேபோல நம்மில் பலரும் இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் விஷயம் பல்லி விழுந்த உணவு முழு விஷம் என்பது. ஆனால், அதில் முழு உண்மையல்ல.
ஓணான்கள்
ஓணான்கள்

பல்லி விழுந்த உணவை உண்டு மயங்கி விழுந்தவர்கள் பலரும் பல்லி விழுந்த செய்தியைக் கேட்ட பின்பே அதிர்ச்சியடைந்திருக்கக் கூடும். அதைத் தொடர்ந்து நீர்ச்சத்து இழந்து மயக்கமும் ஏற்பட்டிருக்கும் உடனே மருத்துவமனை அழைத்துச் சென்று குளூகோஸ் ஏற்றுவார்கள். பொதுவாக கழிவறை, குப்பைக்கூடை போன்ற இடங்களில் சுற்றும் பல்லியின் உடலில் தொற்றியிருக்கும் சால்மோனெல்லா என்கின்ற ஒருவகை தொற்றுக் கிருமியால் அது விழுந்த உணவுப் பண்டம் கெட்டுப்போயிருக்கலாம்.

இதில் சூடான உணவு என்றால் கிருமிகள் இறந்து போகும். சரி ஆறிய உணவு என்றாலும் சாப்பிட்ட உடனே வாந்தி மயக்கம் போன்ற உடலியல் மாற்றங்கள் ஏற்படாது. அதற்கு சில நாள்கள் பிடிக்கலாம். நாம் சிறுவயது முதலே பல்லி கண்டு ஒவ்வாமை வெளிப்படுத்துவது, தவறான பார்வை போன்றவற்றால் மட்டுமே ஒருவருக்கு வாந்தி வரும்.

Vikatan

நகரமயமாக்கலின் விளைவால் பெருகிவரும் பூச்சிக்கொல்லிகளால் பூச்சியினங்கள் அழிவதோடு மட்டும் இல்லாமல் அதை நம்பி வாழும் இவ்வுயிரினமும் அழிந்து வருகிறது. மற்ற உயிரினங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை பல்லி போன்ற உயிரினத்திற்கும் கொடுத்தால் உணவுச் சங்கிலியும் சீராக அமைய வாய்ப்புள்ளது.

அடுத்த கட்டுரைக்கு