Published:Updated:

அஸ்ஸாம் ஆடு, 60 வகை புறாக்கள்,ஆஜானுபாகுவான குதிரைகள்!’ - அந்தியூர் கால்நடைச் சந்தைக்கு ஒரு விசிட்!

கால்நடைகள்மீது மனிதன் வைத்திருக்கும் அபரிமிதமான காதலைக் காண வேண்டுமென்றால், நீங்களும் ஒருமுறை அந்தியூர் கால்நடைச் சந்தைக்கு விசிட் அடித்துப் பாருங்கள்.

அந்தியூர் கால்நடைச் சந்தை
அந்தியூர் கால்நடைச் சந்தை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் அருகே அமைந்திருக்கிறது, குருநாதசுவாமி கோயில். கிட்டத்தட்ட 500 ஆண்டுகள் பழைமையான கோயில் இது. ஒவ்வொரு வருடமும் ஆடிமாதம் நடைபெறும் இந்தத் திருவிழாவில், ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள். இந்தத் திருவிழாவின்போது நடைபெறும் கால்நடைச் சந்தை மிகவும் பிரசித்திபெற்றது. 50 ஆயிரத்தில் தொடங்கி 50 லட்சம் வரை விலைகொண்ட விதவிதமான குதிரைகள், நாட்டு மாடுகள், ஆடுகள், விதவிதமான நாய் வகைகள் மற்றும் புறாக்கள் என திரும்பும் இடமெல்லாம் கால்நடைகளாகத்தான் இருக்கும். அந்த வகையில், இந்த ஆண்டு அந்தியூர் கால்நடைச் சந்தை கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது.

கால்நடைச் சந்தையில் ஈர்த்த புறாக்கள்
கால்நடைச் சந்தையில் ஈர்த்த புறாக்கள்

இந்த ஆண்டு கால்நடைச் சந்தையில், கோவையைச் சேர்ந்த சரவணன் என்பவர் 60 வகையான புறாக்களை காட்சிப்படுத்தியது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. காற்றை உறிஞ்சி தொண்டைப் பகுதியில் வைத்துக்கொள்ளும் ‘பெளட்டர்’, ராஜ தோரணையுடன் உலாவரும் ‘கிங்’, அந்தக் காலத்து மன்னர்களுக்கு போஸ்ட்மேனாக இருந்த 10 கிராம் எடையைத் தூக்கிச்செல்லும் ‘கேரியர்’, வாயிலேயே டிரம்பட் இசை வாசிக்கும் ‘பொக்காரா’ என, இவர் வைத்திருந்த புறாக்களை அதிசமயமாக மக்கள் பார்த்தனர்.

அதேபோல, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையைச் சேர்ந்த ஜிபி.ஸ்ரீ பாலன் என்பவர் காட்சிப்படுத்திய, புஸுபுஸுவென இருந்த வெள்ளை அஸ்ஸாம் ஆடுகள், கர்நாடகா பன்னூர் குட்டை ஆடுகள், இரண்டரை அடியே இருந்த வெச்சூர் மாடுகள், அதற்கான மாட்டுவண்டி போன்றவறை பார்ப்போரின் புருவத்தை உயர்த்தியது.

அஸ்ஸாம் ஆடுகள், குட்டை மாடுகள்
அஸ்ஸாம் ஆடுகள், குட்டை மாடுகள்

‘5 வருஷத்துக்கு முன்னாடி அஸ்ஸாம்ல ஒரு வித்தியாசமான ஆஸ்திரேலியன் டைப் ஆடு இருக்குன்னு சொன்னாங்க. 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அந்த ஒரு ஜோடி அஸ்ஸாம் ஆட்டை வாங்க, காரை எடுத்துக்கிட்டு அஸ்ஸாமுக்கு போய், 25 ஆயிரம் செலவு பண்ணினேன்’ எனச் சொல்லும் ஸ்ரீபாலன், ‘வித்தியாசமான கால்நடைகளை வளர்க்கணும்ங்கிறது என்னோட ஆசை. எத்தனை லட்சம் கொடுத்தாலும் என்கிட்ட இருக்கிற கால்நடைங்களை யாருக்கும் தர மாட்டேன்’ எனச் சொல்லும்போது, கால்நடைகள் மீதான அவருடைய காதல் தெரிந்தது.

கத்தியவார், மார்வாரி, சிந்தி, நுக்ரா மற்றும் நாட்டுக் குதிரைகள் என கால்நடைச் சந்தையில் குதிரைகளின் எண்ணிக்கைதான் அதிகம். திப்பு சுல்தான் ஆட்சிக்காலத்தில், குதிரைகளை வாங்குவதற்காக இந்தக் கால்நடைச் சந்தை உருவானதாக வரலாறுகள் சொல்கின்றன. 50 ஆயிரம் முதல் 50 லட்சம் விலையுள்ள குதிரைகள் நெடுநெடுவென ஆஜானுபாகுவாய் காட்சியளித்தன. ஒவ்வொருவரும் தாங்கள் கொண்டுவந்திருந்த குதிரைகளின்மீது ஏறி, அங்கிருந்த மைதானத்தில் ஒய்யாரமாக ஒரு மாஸ் ரைடு போனது பார்வையாளர்களை குஷிப்படுத்தியது. ‘இன்டிஜீனியஸ் ஹார்ஸ் சொஸைட்டி தமிழ்நாடு’ என்னும் அமைப்பினர், குதிரைகளை வளர்ப்பது எப்படி? என இந்தியாவின் சிறந்த 10 குதிரை ஆர்வலர்களை வரவழைத்து, குதிரைகளின் உரிமையாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினர். மேலும், சிறந்த குதிரைகளைத் தேர்வுசெய்து, அவற்றுக்கு பரிசுகளையும் வழங்கினர்.

விதவிதமாக வரிசைகட்டி நின்ற குதிரைகள்
விதவிதமாக வரிசைகட்டி நின்ற குதிரைகள்

இந்தச் சந்தையில், நாட்டு மாடுகளுக்கு செம கிராக்கி இருந்தது. பலரும் ஆர்வமாக நாட்டு மாடுகளை வாங்கிச்சென்றனர். இயந்திர உலகில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கிடையே, கால்நடைகள்மீது மனிதர்கள் வைத்திருக்கும் அபரிமிதமான காதலைக் காண வேண்டுமென்றால், நீங்களும் ஒருமுறை அந்தியூர் கால்நடைச் சந்தைக்கு விசிட் அடித்துப் பாருங்கள்.