Published:Updated:

முட்டையை அடைகாக்கும் ஓரினச்சேர்க்கை பென்குவின்!

தெ.சு.கவுதமன்

இதைக் கண்ட மிருகக்காட்சிசாலை நிர்வாகம், அந்தப் பென்குவின்களுக்கு உண்மையான பென்குவின் முட்டை ஒன்றைக் கொடுத்து, அடைகாப்பதற்கான ஏற்பாட்டைச் செய்தது.

பென்குவின்
பென்குவின்

ஜெர்மனி தலைநகர் பெர்லின் நகரிலுள்ள மிருகக்காட்சி சாலையில் வசிக்கும் இரண்டு ஓரினச்சேர்க்கை ஆண் பென்குவின் ஜோடி, தற்போது உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளன. பென்குவின்களைப் பொருத்தவரை ஒவ்வோர் ஆண்டும் முட்டையிட்டு, அடைகாக்கும் காலம் உண்டு. பெண் பென்குவின் முட்டையிடும். அதை ஆண் பென்குவின் 60 நாள்களாக அடைகாக்கும். ஆண் பென்குவினுக்கான இரையைப் பெண் பென்குவின் வேட்டையாடிக் கொண்டுவரும்.

பென்குவின்
பென்குவின்

பெர்லின் மிருகக்காட்சி சாலையில் உள்ள ஓரினச்சேர்க்கை ஜோடி பென்குவின்களுக்கு முட்டையை அடைகாக்கும் ஆசை ஏற்பட்டிருக்கிறது. எனவே, அங்கிருந்த கல்லை முட்டையாகக் கருதிய ஒரு பென்குவின், அடைகாக்கத்தொடங்கியது. இறுதிவரை முட்டை பொறிக்காததால் ஏமாற்றமடைந்திருக்கிறது. இதைக் கண்ட மிருகக்காட்சிசாலை நிர்வாகம், அந்தப் பென்குவின்களுக்கு உண்மையான பென்குவின் முட்டை ஒன்றைக் கொடுத்து, அடைகாப்பதற்கான ஏற்பாட்டைச் செய்தது.

தற்போது அந்த முட்டையை பென்குவின் அடைகாக்கத் தொடங்கியுள்ளது. ஒருவேளை முட்டை பொறித்து குஞ்சு வெளிவந்தால் இந்தப் பென்குவின்கள் பெற்றோர்களாக மாறக்கூடும். இந்தப் பென்குவின்கள் அடைகாப்பதைக் காண்பதற்காகவே அந்த மிருகக்காட்சி சாலைக்கு பார்வையாளர்கள் குவிந்து வருகிறார்கள்.

இந்தப் பென்குவின்களுக்கு 10 வயதாகிறது. இந்த ஜோடி வெற்றிகரமாக அடைகாத்துவிட்டால், இதுவே அந்த மிருகக்காட்சி சாலையில் ஓரினச்சேர்க்கை ஜோடிக்குப் பிறந்த முதல் பென்குவினாக இருக்கும்.

பென்குவின்
பென்குவின்

பென்குவின்கள் கூட்டமாக வாழ்வதற்கு எடுத்துக்காட்டானவை. அந்தச் சூழலிலும் ஓரினச் சேர்க்கையை விரும்பும் பென்குவின்களும் காணப்படும். ஓரினச்சேர்க்கை உறவு இயற்கையானது என்பதை உணர்த்துவதற்கு பென்குவின்களே தக்க உதாரணமாக உள்ளன.