Published:Updated:

``பறவைகளை அழிக்கும் பட்டத்திருவிழா அவசியமா?" கோவை பட்டத் திருவிழா சர்ச்சை

பட்டத்திருவிழாவால் குஜராத்தில் மனிதர்களுக்கு இப்போது பெரியளவில் பாதிப்பு இல்லையென்றாலும், பறவைகள் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகின்றன.

kite festival
kite festival

விளையாடுவது நல்லதுதான். ஆனால், அந்த விளையாட்டு யாரையும் பாதிக்காமல் இருக்க வேண்டும். விளையாட்டு வினையாகும் பட்சத்தில் அதை விளையாட்டு என்று சொல்வதே அபத்தம். அப்படியொன்றுதான் பட்டம் விடுவது. குஜராத்தில் ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்படும் சர்வதேசப் பட்டம் விடும் திருவிழா, ஆயிரக்கணக்கான பறவைகளின் உயிரைக் காவு வாங்கிக்கொண்டிருக்கிறது. அந்தத் திருவிழா கோயம்புத்தூரிலும் இனி வெகு விமரிசையாக நடக்கப்போகிறது.

`அந்தப் பறவைகள் கொடுக்குற நிம்மதி, வருமானத்தைவிடப் பெருசு!' அடர்வனம் உருவாக்கிய கிருஷ்ணவேணி
kite festival
kite festival

செப்டம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடக்கவிருக்கும் இந்தத் திருவிழாவை டைமண்ட் சிட்டி டெவலப்பர்ஸ் ஒருங்கிணைத்து நடத்துகிறது.

"பட்டம் விடுவது உலகம் முழுவதும் பாரம்பர்யமாக மேற்கொள்ளப்படும் ஒரு விளையாட்டு. நகரமயமாக்கலும் இடப் பற்றாக்குறையும் பட்டம் விடுவதைக் குறைத்துக்கொண்டிருக்கிறது என்பதால் இந்த விளையாட்டை மீட்டெடுப்பதே இந்தத் திருவிழாவின் நோக்கம்" என்று அவர்கள் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது.

மத்திய மற்றும் வட மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்தத் திருவிழாக்கள், பல்வேறு வகையான பறவைகளைப் பலி வாங்கியது. இந்தத் திருவிழாவில் பயன்படுத்தப்படும் மாஞ்சாவால் பல மனித உயிர்களும் பறிபோனது. அதேபோன்ற பாதிப்புகளை, இந்தத் திருவிழா இங்கும் ஏற்படுத்தும் என்று பறவையாளர்கள் அஞ்சுகின்றனர்.

kite
kite

கோயம்புத்தூரில் பட்டம் பறக்கம்விடும் திருவிழா செப்டம்பர் 21, 22-ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இது குழந்தைகளைக் குதூகலப்படுத்தும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சொல்கின்றனர். ஆனால், இந்தப் பட்டம் பறக்கவிடும் நிகழ்வால் உயிரினங்கள் பல பாதிப்புகளுக்கு உள்ளாகும் என்று பறவையாளர்கள் எச்சரிக்கின்றனர். தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டுகள் பல இருக்கின்றன என்றும் அவற்றைக் கொண்டாடுமாறும், ஆபத்தான இந்த விளையாட்டைக் கைவிடுமாறும் 'பாறு கழுகுகள் பாதுகாப்பு' இயக்கமான அருளகம் அறிக்கை விடுத்துள்ளது.

இந்த விளையாட்டால், பட்டம்விடும் நூலின் மீது பறவைகள் மோதி, அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டுக் கீழே விழுந்து இறக்க நேரலாம். கண்ணுக்குத் தெரியாத நூலில் சிக்கி இறக்கை, கழுத்துப் பகுதிகள் அறுந்து ரத்தப்போக்கு ஏற்பட்டு இறக்க நேரிடலாம். பல பறவைகளின் கால்கள் ஒடியலாம். அவற்றின் கண்களில் நூல்கள் கீறுவதால் கண்களிலும் காயங்கள் ஏற்படலாம் என்பது உள்ளிட்ட பல விஷயங்களை மேற்கோள்காட்டுகிறார் அருளகம் அமைப்பின் தலைவர் பாரதிதாசன்.

இதில் பயன்படுத்தப்போவது எந்த நூலாக இருந்தாலும் சரி, மேற்கூறிய பாதிப்புகள் ஏற்படுவது நிச்சயம் என்று சொல்லப்படுகிறது. இந்த மாதம் பலவகையான பறவைகள் வலசை வரும் காலம் என்பதால் அவற்றின் பயணத்துக்கு இந்தத் திருவிழா தடையாக இருப்பதோடு அவற்றின் உயிருக்கும் ஆபத்தை உண்டாக்கும்.  

Birds
Birds

பறவைகள் ஏற்கெனவே பல பாதிப்புகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றன. அவற்றின் இருப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில் பூச்சிக்கொல்லி மருந்துகள், தொழிற்சாலைக் கழிவுகள், நீர் மாசு, சுருங்கும் வாழிடங்கள், கால்நடைகளுக்குச் செலுத்தும் வலி நிவாரணி மருந்துகள், நஞ்சு தடவிய சடலங்கள் என்று பல பிரச்னைகள் இருக்கின்றன. இவற்றைச் சரி செய்யவே வழி தெரியாமல் சூழலியல் ஆர்வலர்களும் பறவை ஆய்வாளர்களும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றியதைப்போல் அவற்றின் வாழ்வை மேலும் சிக்கலாக்குவது அறிவுடைமையாகாது.

ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது, குஜராத்தில் பறக்கவிடும் பட்டங்களில் சிக்கி ஆயிரக்கணக்கான பறவைகள் அடிபடுகின்றன, நூற்றுக்கணக்கான பறவைகள் இறக்கின்றன. அதில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 30 வகையான பறவைகள் பாதிக்கப்படுகின்றன. பாறு கழுகுகள் (Vultures), சாரச கொக்குகள் (பெருங்கொக்குகள் குறிப்பாக Sarus Crane), அரிவாள் மூக்கன் (Ibis sp), செவ்வரி நாரை, கூழைக்கடா (Pelican sp) போன்ற அழியும் நிலையிலுள்ள பறவைகளும் சில வேட்டையாடிப் பறவைகளும் அடக்கம். உலகம் முழுவதுமிருந்து தலைசிறந்த கால்நடை மருத்துவர்களை வரவழைத்துச் சிகிச்சை கொடுத்தாலும்கூட, பல பறவைகள் இறந்துவிடுகின்றன.

கோயம்புத்தூரில் அமைந்துள்ள 'சாலிம் அலி பறவையியல் மையம்' ஒவ்வோர் ஆண்டும் டாக்டர் முரளிதரன் தலைமையில் ஒரு குழு அங்கு சென்று அடிப்பட்ட பறவைகளை மீட்பதிலும் இறந்த பறவைகளை உடற்கூறாய்வு செய்வதிலும் ஈடுபட்டு வருகிறது. அந்தக் குழுவில் ஒருவராக அங்கு களப்பணியில் ஈடுபட்ட கிருபாநந்தினியிடம் பேசினோம்.  

bird
bird

``பட்டத்திருவிழாவால் குஜராத்தில் மனிதர்களுக்கு இப்போது பெரியளவில் பாதிப்பு இல்லையென்றாலும், பறவைகள் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகின்றன. நூலில் மாட்டிக் கீழே விழுவதால் ஏற்படும் மாரடைப்பால் உடனடியாக இறக்கின்றன. அடிபட்டுக் கீழே விழுந்தால் முதலில் ரத்தப்போக்கு ஏற்படும், அடுத்து கால்கள், இறக்கைகள் உடையும். அதிலும் பலவற்றுக்குக் கால்களை அகற்ற வேண்டிய சூழல்கூட ஏற்பட்டுள்ளது. பல பறவைகளை எவ்வளவுதான் சிகிச்சை அளித்தாலும் காப்பாற்ற முடிவதில்லை. உயிர் பிழைக்கும் பறவைகளும் கால்கள், இறக்கைகளை இழந்து ஊனமுற்று வேதனையோடு வாழ்கின்றன. பறக்கும்போது நூல்கள் கண்ணிலேயே படுவதால், அவை கண்பார்வையை இழக்கின்றன. இதனால், அவை தன் இயல்பான வாழ்வை வாழ முடிவதில்லை.

e-bird தரவுகளின்படி, கோயம்புத்தூரில் மட்டுமே 400-க்கும் மேற்பட்ட பறவைகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். அதிலும் இது செப்டம்பர் மாதம் என்பதால், உள்நாட்டு வலசைப் பறவைகளின் (Local Migratory Birds) செயல்பாடு அதிகமாக இருக்கும். பட்டம் விடும் திருவிழா நடக்கவுள்ள இந்த இரண்டு நாள்களும் அவற்றுக்குப் பெருத்த சேதங்கள் ஏற்படும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. குஜராத்தில் இந்தப் பட்டம் விடும் திருவிழாவின்போது முன்பெல்லாம் ஆயிரக்கணக்கில் பறவைகள் அடிபடும். அது தற்போது வெகுவாகக் குறைந்துவிட்டது. பறவைகளே குறைந்துவிட்டால், அடிபடுவதும் குறையும்தானே. அந்த நிலை இங்கும் வர வேண்டுமா!" என்று வேதனையோடு கூறினார்.

birds
birds

இந்தப் பட்டம் விடும் திருவிழாவை நடத்தவுள்ள டைமண்ட் சிட்டி டெவலப்பர்ஸ் தரப்பில் கேட்டபோது, "ஆட்சியரிடம் இதற்கான அனுமதியை வாங்கிக்கொண்டுதான் செய்கிறோம். கடந்த மூன்று ஆண்டுகளாக இதை நடத்துகிறோம், இதுவரை இதுமாதிரி எந்தப் பிரச்னையும் ஏற்படாதவாறு மிகக் கவனமாகத்தான் நடத்தியுள்ளோம். இந்த ஆண்டும் அப்படியே நடத்துவோம். குழந்தைகள் பயன்படுத்தும் சாதாரண நூல்களைப் பயன்படுத்தித்தான் பட்டம் விடுவார்கள். அதேசமயம் இதற்கு உரிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செய்துகொண்டுதான் திருவிழா கொண்டாடப்படும்" என்று கூறினர்.

"மாஞ்சாவுக்குத் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இவர்கள் எதைப் பயன்படுத்தப்போகிறார்கள் என்று தெரியவில்லை. நூல், நார்க்கயிறு என்று எதைப் பயன்படுத்தினாலும் அது பறவைகளைப் பாதிக்கும். நமது பாரம்பர்யமான விளையாட்டுகள் பல உள்ளன. இந்த நிகழ்வுக்குப் பதில் நம்மிடம் இருக்கும் வேறு பல மனமகிழ் நிகழ்வுகளை நடத்தலாம். நாம் கொண்டாடும் திருவிழாக்களும் பண்டிகைகளும் இயற்கையோடு இயைந்ததாக எப்போது மாறப்போகிறது? பிற உயிரினங்களை வருத்திதான் நம் கொண்டாட்டங்கள் இருக்க வேண்டுமா? இப்போதுதான் பிள்ளையார் விழா கொண்டாடி நீர்நீலைகளை நாசப்படுத்தினோம். அதற்குள் அடுத்து ஒன்று வந்துவிட்டது. நாம் கொண்டாடும் திருவிழாக்களையெல்லாம் மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய நேரம் இது" என்கிறார், `அருளகம்’ பாரதிதாசன்.

bird
bird

ஆம், நாம் கொண்டாடும் திருவிழாக்கள் நம்மைக் குதூகலப்படுத்துவதாக மட்டுமே இருந்தால் போதாது. மற்ற உயிரினங்களைக் குருதி சிந்த வைப்பதாக இருக்கக் கூடாது. ஒருவேளை அப்படி அமைந்தால் அது திருவிழாவாக இருக்காது.

Vikatan