Published:Updated:

Black-browed Babbler: 170 ஆண்டுகளுக்குப் பின் இந்தோனேஷியாவில் தென்பட்ட அரிய பறவையினம்!

Black Browed Babbler
Black Browed Babbler

இந்தப் பறவையானது முதலில் ஜாவா தீவுகளில் இருந்து வந்தது எனத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருந்தது. பின்னர்தான் இது போர்னியோ தீவைச் தேர்ந்த பறவைகள் எனக் கண்டறியப்பட்டது.

அழிந்துவிட்டது என வகைப்படுத்தப்பட்ட பறவையினம் ஒன்று 170 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது.

1850-களில் ஜெர்மனைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் கார்ல் ஸ்வானர் (Carl Schwaner), இந்தோனேஷியாவின் போர்னியோ காடுகளில் சுற்றித் திரிந்த போது பழுப்பு மற்றும் சாம்பல் நிற உடலும், கறுப்பு நிற புருவமும் கொண்ட பறவை ஒன்றைக் கண்டறிந்தார். Black Browed Babbler என அழைக்கப்படும் அந்தப் பறவை வகையிலேயே தென்பட்ட ஒரே பறவை அது மட்டுமே. அதன் பின்னர் அந்தப் பறவை வேறு எந்த இடத்திலும் தென்படவில்லை. எனவே இந்தப் பறவையைப் பற்றிய தகவல்கள் எந்தப் பறவையியலாளர்களிடமும் பறவை ஆர்வலர்களிடமும் கிடைக்கவில்லை.

Black Browed Babbler
Black Browed Babbler
Perseverance: நாசாவின் ரோவரை வொர்க் ஃப்ரம் ஹோமில் இருந்தே இயக்கும் இந்தியர்!

இந்த நேரத்தில்தான் கடந்தாண்டு அக்டோபர் 5 அன்று இந்தோனேஷியாவின் தென்கிழக்கு கலிமன்டன் (Kalimantan) பகுதியில் இப்பறவை காணப்பட்டுள்ளது. அதனைப் படமெடுத்து முன்னணி பறவையியலாளரான பாஞ்சி கஸ்டி அக்பருக்கு (Panji Gusti Akbar) அனுப்பியுள்ளனர். அந்தப் பறவையின் புகைப்படங்களைக் கண்ட அக்பர் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துள்ளார். அது குறித்து அவர் கூறும்போது, "அது தொலைந்து போன அந்தப் பறவைதான் என்பதை உறுதிப்படுத்திய போது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

அந்தப் பறவையானது முதலில் ஜாவா தீவுகளில் இருந்து வந்தது எனத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருந்தது. பின்னர்தான் அது போர்னியோ தீவைச் தேர்ந்த பறவைகள் எனக் கண்டறியப்பட்டது. அதன் பின்னரும், அந்தப் பறவையைப் பற்றிய தகவல்கள் யாருக்கும் தெரியவில்லை. எந்த நேரம் அந்தப் பறவையைப் பார்க்க முடியும் எனத் தெரியாது, எல்லா நேரமும் அந்தக் காடுகளில் பறவையியலாலளர்களால் இருக்க முடியாது. 2016-ஆம் ஆண்டு BW Galeatus என்ற பறவை ஆர்வலர்கள் இணைந்த குழு ஒன்று அந்த இடத்தில் நிறுவப்பட்டது. பறவைகள் மேல் ஆர்வம் இருக்கிற அந்த இடத்தைச் சேர்ந்த மக்கள் அந்தக் குழுக்களில் இணைந்தனர். அவர்களுக்கு இந்த இடத்தைச் சேர்ந்த பறவைகளைப் பற்றி நிறைய கற்றுக் கொடுக்கப்பட்டது.

Black Browed Babbler
Black Browed Babbler
Photograph: M. Suranto

அதில் சுரன்டோ (Suranto) மற்றும் பாஸன் (Fauzan) என்ற இருவர் கறுப்புப் புருவம் கொண்ட இந்தப் பறவையின் மேல் மிகுந்த ஆர்வத்துடன் இருந்திருக்கின்றனர். கலிமன்டன் காடுகளில் அந்தப் பறவை சுற்றித் திரிவதை சில நேரங்களில் இவர்கள் கண்டிருக்கின்றனர். இவர்கள் தொடர்ந்து அந்தப் பறவையைப் பற்றித் தெரிந்து கொள்ளும் முனைப்பில் இருந்தனர். அதன் விளைவாகக் கடந்த அக்டோபர் மாதம், இந்தப் பறவையைப் பிடித்துள்ளனர். பிடித்து அந்தப் புகைப்படங்களைப் பறவையியலாளர்களுக்கு அனுப்ப அவர்கள் அழிந்து விட்டதாக நினைக்கப்பட்ட கறுப்பு புருவப் பறவையின் (Black-browed babbler) இருப்பை உறுதிசெய்துள்ளனர்.

இந்தப் பறவை கண்டறியப்பட்டது, உலகம் முழுவதும் இருக்கும் பல பறவையியலாளர்கள் மற்றும் பறவை ஆர்வலர்களுக்கு ஆச்சர்யத்தையும் பரவசத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆசியாவில் இவ்வளவு காலம் ஒரு பறவையினம் காணாமல் போனதில்லை எனத் தெரிவிக்கின்றனர் பறவையியலாளர்கள். உலகம் முழுவதும் இருக்கும் பல பறவை ஆர்வலர்கள் இந்தப் பறவையைக் காண ஆர்வம் காட்டி வருவதாகவும் அக்பர் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு