Published:Updated:

`அபசகுனமெல்லாம் இல்லைங்க!'... கறுப்பு பூனைகளை கொண்டாடும் அமெரிக்கா

ஆர். மகேஷ் குமார்

அமெரிக்காவில், வருடா வருடம் ஆகஸ்ட்17 அன்று, `தேசிய கறுப்பு பூனை பாராட்டு நாள்' கொண்டாடப்படுகிறது

black cat appreciation day
black cat appreciation day

பூனைகளைப் பற்றிய பார்வை ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. ஸ்காட்லாந்தில் கறுப்பு பூனை வீட்டுக்கு வந்தால் அதிர்ஷ்டம் எனக் கொண்டாடினர். பிரிட்டன், ஜப்பான் நாடுகளிலும் கறுப்பு பூனையை அதிர்ஷ்டத்தின் குறியீடாகப் பார்த்தனர். மீனவர்களும், மாலுமிகளும், கடற்கொள்ளையர்களும் கறுப்பு பூனைகளை அதிர்ஷ்டம் தரும் வஸ்துவாகவே கருதினர். அது தங்களுக்குப் பொருளீட்டும் என நம்பிக்கை வைத்தனர்.

black cats
black cats

ஆனால், மேற்கத்திய நாடுகளோ அதற்கு நேரெதிர். ஐரோப்பிய நாடுகளில் கறுப்பு பூனை குறுக்காக நடந்தால் `கெட்ட நேரம்' என வரையறுத்தனர். இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. சில நாடுகளில் அதைச் சூனியக்கார குடும்பத்தின் ஓர் அங்கமாகவும் அது ஒரு சூனியக்காரியாக மாறும் தன்மை கொண்டது எனக் கருதி வெறுத்தனர். கறுப்பு பூனைகளை `சாத்தான்' எனப் பட்டம் கட்டி அதைக் கொத்துக் கொத்தாக எரித்தனர் பிரான்ஸ் மக்கள்.

இத்தகைய கொடூர சிந்தனைகளும், மூடப் பழக்கவழக்கங்களும் ஓர் எதிர்பாராத வினையைப் பரிசாக மக்களுக்கு அளித்தது. பூனையின் எண்ணிக்கையைக் குறைத்ததால் எலிகளின் எண்ணிக்கை தாறுமாறாக உயர்ந்தது. உணவுப் பயிர்கள் நாசமானது மட்டுமில்லாமல், பிளேக்கை உண்டுபண்ணும் கிருமியை மனிதனிடம் கொண்டுசேர்த்தது இந்த எலிக் கூட்டம். 80,000-க்கும் அதிகமான மக்களைக் கொன்று சாய்த்தது புபோனிக் பிளேக் (Bubonic Plague) நோய்.

நீங்கள் நாய், பூனை வளர்ப்பவரா...? -  உங்களுக்குத்தான் இந்த குட் நியூஸ்!

கறுப்பு பூனைகளின் வாழ்வை மேம்படுத்த, அதை மக்களிடம் செல்லப் பிராணிகளாகக் கொண்டு சேர்க்க அமெரிக்காவில், வருடா வருடம் ஆகஸ்ட்17 அன்று, `தேசிய கறுப்பு பூனை பாராட்டு நாள்' கொண்டாடப்படுகிறது. இந்நாளன்று மக்கள், விலங்குகள் தத்தெடுப்பகத்தில், கறுப்பு பூனைகளை தங்களால் இயன்ற பணம் கொடுத்துத் தத்தெடுக்கலாம். மக்களுக்கு நிறவெறியைப் பத்திய எண்ணம் ஒழிய வேண்டும் என்பதற்காகவும், கறுப்பு பூனைகளை மற்ற பூனைகளைப் போலவே வளர்க்க வேண்டுமென்பதே இந்நாளின் முக்கிய குறிக்கோள்.