நோய்த்தொற்றா... விஷம் வைத்து கொல்லப்பட்டதா? - நீலகிரியில் மர்மமாக இறந்து கிடந்த கருஞ்சிறுத்தை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் இறந்த நிலையில் கருஞ்சிறுத்தை கண்டெடுக்கப்பட்டது.
நீலகிரியில் காட்டை இழந்த காட்டுயிர்கள் வனத்தையொட்டிய தேயிலைத் தோட்டங்களிலும் யூகாலிப்டஸ் காடுகளிலும் தஞ்சமடைந்துள்ளன. உணவுக்கும் தண்ணீருக்கும் தவிக்கும் விலங்குகள் பல குடியிருப்புகளையொட்டிய பகுதிகளிலேயே உலவுகின்றன. இதனால் எதிர்கொள்ளல்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள கடக்கோடு கிராமம் அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் கருஞ்சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு அந்தப் பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அந்தத் தேயிலைத் தோட்டத்துக்குச் சென்று பார்த்த வனத்துறை ஊழியர்கள் தங்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
உதவி வனப்பாதுகாவலர் சரவணகுமார் தலைமையிலான குழுவினர் சென்று ஆய்வு செய்தனர். மேலும், கால்நடை மருத்துவரை வரவழைத்து இறந்து கிடந்த கருஞ்சிறுத்தையின் உடல் பாகங்களை ஆய்வு செய்தனர். இதில் இறந்தது சுமார் 3 வயது மதிக்கத்தக்க பெண் கருஞ்சிறுத்தை என்பது தெரிய வந்தது.

கருஞ்சிறுத்தை இறப்புகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "கட்டபெட்டு வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட கருஞ்சிறுத்தையின் உடலை கால்நடை மருத்துவர் ராஜன் தலைமையில் ஆய்வு செய்து மாதிரிகளை சேகரித்துள்ளோம். நோய் தொற்று ஏற்பட்டு இறந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றோம். தொடர் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். கருஞ்சிறுத்தையின் உடல் பாக மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்படும். ஆய்வு முடிவுகளுக்குப் பின்னரே முழுமையான விவரம் தெரியவரும்" என்றனர்.
இது குறித்து காட்டுயிர் ஆர்வலர்கள், "நிறமிக் குறைபாட்டால் கறுப்பு நிறத்தில் காணப்படும் சிறுத்தைகள் ஒரு சிலவே உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சக்கம்பை பகுதியில் கருஞ்சிறுத்தை ஒன்று விஷம் வைத்து கொல்லப்பட்டது.

சமீப காலமாக குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் மர்மமான முறையில் இறக்கின்றன முறையான விசாரணை மேற்கொண்டு இறப்புக்கான காரணத்தைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கின்றனர்.