விலங்கு ஆர்வலர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற ‘The Great Indian Dog Show’ ஏப்ரல் 24-ம் தேதி சென்னை வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் மாலில் நடைபெற்றது. இந்திய நாய் இனங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக, இந்திய ப்ளூ கிராஸ் அமைப்பும் ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியும் இணைந்து நடத்திய இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தன. செல்லப்பிராணிகளின் ‘ரேம்ப் வாக்’, வீடில்லா செல்லப் பிராணிகளின் தத்தெடுப்பு, உள்ளூர் நாய் இனங்களைக் கொண்டாடுதல் ஆகியவை இந்த நிகழ்வின் முக்கிய அம்சங்களாக அமைந்தன.
தங்கள் குடும்பத்தில் ஒருவராக மாறிவிட்ட செல்லப் பிராணிகளை ஏராளமானோர் இந்நிகழ்வுக்கு அழைத்து வந்திருந்தனர். அவர்களுக்கும் செல்லப் பிராணிகளுக்குமான பிணைப்பைக் கண்டு பார்வையாளர்கள் மிகுந்த ஆச்சரியம் அடைந்தனர். செல்லப் பிராணிகள் தத்தெடுப்பு குறித்த அறிமுகமில்லாத அவர்களுக்கு இந்த நிகழ்வு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அமைந்தது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்லப் பிராணிகளை ஆர்வமுடன் தத்தெடுத்துச் சென்றனர்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நடிகைகள் அமலா அக்கினேனி, சஞ்சிதா ஷெட்டி சிறப்பு விருந்தினர்களாக நிகழ்வில் பங்கெடுத்தனர். கால்நடை மருத்துவர் ஜெய் பிரகாஷ், நிகிஷா சொராரியா ஆகியோர் செல்லப் பிராணிகளின் ‘ரேம்ப் வாக்’-க்கு நடுவர்களாக விளங்க, 25 பிரிவுகளில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. ‘ரேம்ப் வாக்’-கில் தேர்வான நாய்க்கு ‘Proud to be an Indian dog’ பட்டம் வழங்கப்பட்டது.
கைவிடப்பட்ட, ஆதரவில்லாத நாய், பூனைக்குட்டிகள் தத்தெடுப்பு நிகழ்வின் மூலம் புதிய ‘பெற்றோர்’களைக் கண்டடைந்தன. மருத்துவரும், தன்னார்வலர்களும் செல்லப் பிராணிகளின் பராமரிப்பு குறித்து அவர்களுக்கு விளக்கினர்.
ப்ளூ கிராஸ் இந்தியாவின் நிர்வாகப் பிரிவு பொது மேலாளர் வினோத் குமார் இந்நிகழ்வு குறித்துப் பேசும்போது, “இந்திய நாய் இனங்களைக் கொண்டாடுவதற்கு, அந்த நாய்களைத் தத்தெடுத்து குடும்பத்தில் ஓர் அங்கமாகச் சேர்க்கவும் இந்த ‘The Great Indian Dog Show’ ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்திய நாய் இனங்களைத் தத்தெடுத்து வளர்க்கும் பலர் இங்கு வந்திருப்பதைக் கண்டு, புதிதாக நிறைய பேர் இந்திய நாய் இனங்களைத் தத்தெடுக்க இந்த நிகழ்வு வழிசெய்யும். இந்த ஆண்டு நிகழ்வுக்கு 149 பேர் பதிவு செய்திருக்கிறார்கள்; தத்தெடுப்பு நிகழ்வில் 110 நாய்க்குட்டிகளும், 30 பூனைக்குட்டிகளும், கைவிடப்பட்ட ஆதரவில்லாத 5 வளர்ந்த நாய்களும் உள்ளன. மக்கள் விரும்பி இவர்களைத் தத்தெடுத்துச் செல்கிறார்கள்" என்றார்.