Published:Updated:

5 பவுன் தங்க நகையை விழுங்கியது! - மாட்டைக் கட்டிப்போட்டு உணவு கொடுத்து காத்திருக்கும் தம்பதி

சிசிடிவி கேமராப் பதிவுகளை ஆய்வுசெய்தபோது, அங்கே கொட்டப்பட்ட காய்கறிக்கழிவுகளில் நகையும் இருந்தது தெரியவந்தது. அந்தக் கழிவுகளோடு சேர்த்து தங்க நகையையும் ஒரு மாடு விழுங்குவதும் கேமராவில் பதிவாகியிருந்தது.

மாடு
மாடு ( Representational Image )

மாட்டுக்குப் புல்லு போடலாம், பருத்திக்கொட்டை புண்ணாக்கு போடலாம்... யாராவது தங்க நகையைத் தின்னக் கொடுப்பார்களா? ஹரியானாவைச் சேர்ந்த ஜனக்ராஜ் குடும்பத்தினர் கொடுத்திருக்கிறார்கள்!

தங்க நகை
தங்க நகை

ஹரியானாவிலுள்ள சிர்சா மாவட்டத்திலுள்ள கலனவாலி பகுதியைச் சேர்ந்தவர் ஜனக்ராஜ். கடந்த அக்டோபர் 19-ம் தேதி அவரின் மனைவி, 5 பவுன் மதிப்புள்ள நகையை வீட்டிலுள்ள காய்கறிக்கூடை ஒன்றில் எதேச்சையாக வைத்துள்ளார். காய்கறி நறுக்கும்போது கழிவுகளோடு சேர்த்து, நகையையும் வீட்டுக்கு வெளியே குப்பையில் கொட்டியுள்ளனர்.

அதன்பின்னர் நகையைத் தேடியபோதுதான் அது காணாமல் போனது தெரியவந்தது. எவ்வளவோ தேடியும் கிடைக்காததால் வீட்டுக்கு வெளியே குப்பையிலும் தேடியுள்ளனர். அப்போதும் கிடைக்காததால் அங்குள்ள சிசிடிவி கேமராப் பதிவுகளை ஆய்வுசெய்தபோது அங்கே கொட்டப்பட்ட காய்கறிக்கழிவுகளில் நகையும் இருந்தது தெரியவந்தது. அந்தக் கழிவுகளோடு சேர்த்து தங்க நகையையும் ஒரு மாடு விழுங்குவதும் கேமராவில் பதிவாகியிருந்தது.

மாதிரிபடம்
மாதிரிபடம்

அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஜனக்ராஜ், அந்த மாட்டை வீதிவீதியாகத் தேடியலைந்து கண்டுபிடித்து வீட்டுக்கே இழுத்து வந்துவிட்டார். அதன் சாணியோடு சேர்ந்து நகையும் வரக்கூடும் என்று எதிர்பார்ப்போடு, அன்றிலிருந்து இன்றுவரை மாட்டைக் கட்டிப்போட்டு உணவளித்து வருகிறார்கள். தினமும் சாணியை ஆய்வு செய்யவும் தவறுவதில்லை. இந்த ஆய்வு இன்னும் சில காலத்துக்குத் தொடருமென்றும், கிடைக்கவேயில்லையென்றால் எதாவது கோசாலைக்கு மாட்டை அனுப்பவுள்ளதாகவும் கூறியிருக்கிறார் ஜனக்ராஜ்.