Published:Updated:

அழிவின் விளிம்பில் லாடம் கட்டும் தொழில்... கலங்கும் தொழிலாளர்கள்!

மணிமாறன்.இரா
வெங்கடேஷ்.ஆர்

வாகனங்களின் பெருக்கத்தாலும், நவீன இயந்திரங்களின் வருகையாலும், வண்டி மாடுகளின் தேவை குறைந்ததாலும், உழவுத் தொழிலில் மாடுகளின் பயன்பாடு குறைந்ததாலும், மாடுகளுக்கு லாடம் கட்டும் தொழில் நலிவடைந்துவருகிறது. 

லாடம் கட்டும் தொழிலாளி சபரி
லாடம் கட்டும் தொழிலாளி சபரி ( வெங்கடேஷ்.ஆர் )

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு வரையிலும் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் லாடம் கட்டும் தொழிலில் ஈடுபட்டனர். இன்று 10-க்கும் குறைவான தொழிலாளர்களே இந்தத் தொழிலில் ஈடுபடுகின்றனர். தினசரி லாடம் கட்டும் வேலை கிடைக்கவில்லை என்பதால், பலரும் மாற்று வேலைக்குச் சென்றுவிட்டனர். அழிவின் விளிம்பில் உள்ள இந்தத் தொழிலைக் காக்க, பரம்பரையாகத் தொழில் செய்துவரும் ஒரு சிலர் மட்டுமே போராடி வருகின்றனர்.

லாடம் அடிப்பதற்காக மாட்டை படுக்க வைக்கின்றனர்.
லாடம் அடிப்பதற்காக மாட்டை படுக்க வைக்கின்றனர்.
வெங்கடேஷ்.ஆர்

மாடுக்கு லாடம் கட்டுவதை முதன்முதலாகப் பார்ப்பவர்களுக்கு, லாடமடிப்பவர் அந்த மாட்டை, கொடுமைப்படுத்துவது போன்றுதான் தெரியும். ஆனால், அது உண்மையில்லை. லாடம் கட்டாத மாடுகளின் கால் குளம்புகள், காயம் ஏற்பட்டு நடப்பதற்கே சிரமப்படும் சூழல் உருவாகும். கடும் பாரங்களை சுமக்கும் மாட்டின் கால் குளம்புகளைப் பாதுகாப்பதற்கே இந்த லாடம் கட்டுகின்றனர். மாடுகளின் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியமான இந்தத் தொழில் அழிவின் விளிம்பில் இருப்பதுதான் வேதனை.

புதுக்கோட்டை நமணசமுத்திரம் பகுதியில் வசிக்கும் சபரியின் குடும்பம் 3-வது தலைமுறையாக லாடம் கட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகிறது. 25 வருடங்களாக லாடம் கட்டும் சபரி, இந்தப் பகுதியில் உள்ள லாடமடிக்கும் கடைசி தொழிலாளியும்கூட. சபரியைப் பார்க்க அவரது வீட்டிற்குச் சென்றோம். உப்புப்பட்டியில் உள்ள ஒருவருக்குச் சொந்தமான மாடுகளுக்கு லாடம் அடிப்பதற்காக, சபரி சென்றுவிட்டார் எனத் தகவல் தெரிவித்தனர். முன்பெல்லாம், அரசமரத்தடி, குளக்கரை உள்ளிட்ட பொது இடங்களில் வைத்து தொழிலாளர்கள், மாடுகளுக்கு லாடம் கட்டுவார்கள்.

மாடுக்கு லாடம் கட்டுதல்
மாடுக்கு லாடம் கட்டுதல்
வெங்கடேஷ்.ஆர்

இன்று நேரடியாகவே விவசாயிகளின் வீட்டிற்குச் சென்று மாடுகளுக்கு லாடம் கட்டுகின்றனர். சபரியைப் பார்க்க உப்புப்பட்டிக்குச் சென்றோம். "ஆரம்பத்துல எங்க தாத்தா லாடம் கட்டுனாரு. அதுக்கப்புறம் எங்க அப்பா, இப்போ நான். 25 வருஷமா இந்தத் தொழில செய்றேன். எனக்கப்புறம் பிள்ளைங்க யாரும் இந்தத் தொழிலுல ஈடுபடலை. ஒரு நேரத்துல நூத்துக்கணக்குல லாடம் கட்டுறதுக்கு ஆள்கள் இருந்தாங்க.

அந்தளவுக்கு மாடுகள் எண்ணிக்கையும் அதிமாக இருந்துச்சு. இன்னைக்கு, ஆள் எண்ணிக்கையும், மாட்டு எண்ணிக்கையும் ரொம்பவே குறைஞ்சுபோச்சு. இப்போ, புதுசா யாரும் இந்தத் தொழிலுக்கு வரலை.

லாடம் கட்டும் தொழிலாளி சபரி
லாடம் கட்டும் தொழிலாளி சபரி
வெங்கடேஷ்.ஆர்

பழைய ஆள்கள் கொஞ்சம் பேர்தான் இந்தத் தொழிலை விடாம கெட்டியா பிடிச்சிக்கிட்டு இருக்கோம். அடுத்த தலைமுறைக்கு இந்தத் தொழில் தொடருமா என்பது சந்தேகம்தான். ஒரு சிலர் மட்டும் இன்னமும் வண்டி மாடு பூட்டி விவசாய வேலைகளைச் செஞ்சுக்கிட்டு வர்றாங்க. அப்படி 25 வருஷமா இருக்கிற ஒருசில வாடிக்கையாளர்களுக்காகவும், வாயில்லா அந்த ஜீவன்களுக்காகவும்தான், நான் விடாமல் இந்தத் தொழிலை நடத்திக்கிட்டு இருக்கேன்.

என் குடும்பத்துல, எனக்கப்புறம் யாரு இந்தத் தொழிலை தொடரப் போறாங்கனு தெரியலை. ஆனா, என் உசுரு இருக்குறவரைக்கும் என்னால இந்தத் தொழிலை விட்டுவிட்டு வேற எந்தத் தொழிலுக்கும் போக மாட்டேன்" என்று வைராக்கியத்துடன் கூறும் சபரி, மாட்டுக்கு லாடம் அடிக்கும் முறை பற்றி விளக்குகிறார். 

தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும்லாடங்கள்(இரும்புத் தகடுகள்)
தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும்லாடங்கள்(இரும்புத் தகடுகள்)
வெங்கடேஷ்.ஆர்

"மாட்டைப் பொறுத்தவரை வண்டி மாடு, ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா ரேஸ் மாடு என்று மூன்றுவகை இருக்கும். இவை அனைத்துக்கும் லாடம் கட்டுவோம். எல்லா மாடுகளுக்கும் ஒரே வகை லாடம் பயன்படுத்துவோம். ஆனாலும், ஒவ்வொரு மாட்டுக்கும் ஒவ்வொரு முறையில் லாடம் கட்ட வேண்டும். இதற்கான இரும்பு லாடத்தை திண்டுக்கல்லிருந்தும், ஆணியை கரூரிலிருந்தும் வாங்கி வருவோம். வண்டி மாட்டுக்கு லாடம் கட்டுறது கொஞ்சம் ஈஸியான வேலை.

ஜல்லிக்கட்டு மாட்டுக்கு லாடம் கட்டுறது ரொம்பவே கஷ்டம். மாட்டைப் படுக்கவச்சபிறகு, மொதல்ல, முன்னங்கால்களுக்கு லாடம் கட்டுவோம். அப்புறம் பின்னங்கால்களுக்குக் கட்டுவோம். கால் குளம்புகளில் மண், அழுக்குகள் நிறைய இருக்கும். அதையெல்லாம் அகற்றுவோம். பழைய லாடம் இருந்தால், அதை லாகவமாக எடுத்துவிட்டு, அதற்கப்புறம் கால் குளம்புகளைக் கத்தியால் செதுக்கி சமமாக்குவோம். பின்பு, மாட்டின் காலுக்குப் பொருத்தமான இரும்பிலான லாடத்தை எடுத்து கால் குளம்பில் பொருத்துவோம்.

மாட்டுக்கு லாடம் கட்டுதல்
மாட்டுக்கு லாடம் கட்டுதல்
வெங்கடேஷ்.ஆர்

அதில், ஆணி அடிப்பதற்கு வசதியாக சிறுசிறு துளைகள் இருக்கும். அந்தத் துளைகளுக்கிடையே, மாட்டின் கால்களோடு சேர்த்து ஆணியைவைத்து இறுக்குவோம். மொத்தமாக ஒரு மாட்டுக்கு 32 ஆணிகள் வரையிலும் தேவைப்படும். மாட்டின் கால் குளம்பின் சதைப்பகுதியில் ஆணி இறங்கிவிடாமல் லாகவமாக லாடம் அடிக்க வேண்டும். லாடத்திற்குள் ஆணி அடிக்கும்போதுதான் ரொம்பவும் கவனமாக இருக்கணும். சற்றுப் பிசகினாலும் அந்த மாட்டின் கால்களை ஆணி பதம் பார்த்துவிடும். அப்படிக் காயம்பட்டால், மாடு பல நாள்களுக்குச் சரியாக நடக்காது. வண்டி மாட்டைத் தொடர்ந்து ஓட்டினால், குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒருமுறை லாடம் அடிக்கணும். மற்ற மாடுகளுக்கும் லாடம் தேய்மானத்தைப் பொறுத்து, தேவைப்பட்டால் லாடமடித்துக் கொள்ளலாம். மாடு காலடி எடுத்துவைப்பதைப் பார்த்து, அந்த மாட்டிற்கு லாடம் தேவைப்படுகிறதா என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியும்.

லாடத்திற்குள் ஆணி அடிக்கும்போதுதான் ரொம்பவும் கவனமாக இருக்கணும். சற்று பிசகினாலும் அந்த மாட்டின் கால்களை ஆணி பதம் பார்த்துவிடும்.
லாடம் கட்டும் தொழிலாளர் சபரி
``50 வருஷமா கீத்து பின்னியும் குடிசைய கட்டமுடியலை!” - புலம்பும் புதுக்கோட்டை தொழிலாளர்கள்!

முன்பைப்போல லாடம் கட்டுவதில் பெரிதாக வருமானம் கிடைக்கவில்லை. இதில், கிடைக்கும் வருமானத்தின் பெரும்பகுதி லாடத்திற்கும், ஆணிக்கும் செலவாகிறது. ஆனாலும், இந்தத் தொழில்தான் இதுநாள் வரைக்கும் எங்களுக்குச் சோறு போட்டுக்கிட்டு இருக்குது. அதனாலதான், இந்தத் தொழிலை விட்டுட்டு வேற தொழிலுக்குப் போக எனக்கு மனசு வரலை. இப்ப உள்ள பிள்ளைகளுக்கு லாடம் கட்டுறதுன்னா என்னவென்றே தெரியலை. அரசுதான் எங்களைப் போன்ற தொழிலாளர்களுக்கு உதவிகள் செஞ்சு, இந்தத் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கணும்" என்றார்.