Published:Updated:

யானைகளைக் கொண்டாடுகிறோம்; ஆனால், வாழவிடுகிறோமா?! #WorldElephantDay

#WorldElephantDay
#WorldElephantDay

உலகம் முழுவதும் இன்று யானைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. மனித - யானைகள் எதிர்கொள்ளல்களைத் தாண்டி இன்றைய யானைகள் என்னென்ன பிரச்னைகளையெல்லாம் எதிர்கொள்கின்றன?

அமெரிக்காவைச் சார்ந்த வில்லியம் சாட்னர் என்பவர் யானைகளை மையப்படுத்தி Return to the forest என்ற ஆவணப்படம் ஒன்றை எடுத்தார். அப்படமானது 2012 ஆகஸ்ட் 12-ல் வெளிவந்தது. அதன்பிறகு ஒவ்வோர் ஆண்டும் அந்த நாளை உலக யானைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். இதை உலக அரங்கில் உள்ள 65 அமைப்புகள் ஏற்றுக்கொண்டு இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. யானைகள் இந்தக் காலத்தில் சந்திக்கும் நடைமுறைச் சிக்கல்களையும், அவற்றின் பிரச்னைகளையும் மக்களிடம் கொண்டுசேர்ப்பதே இந்த தினத்தின் நோக்கம்.

Elephant
Elephant
`யானை வழித்தடம் போல புலிகளுக்கும் வேண்டும்!” - விலங்கு நல ஆர்வலர்கள் #InternationalTigerDay

வனம் என்று சொன்னாலே அதில் உள்ள பல்லுயிரிகள்தான் முக்கியமானவை. காடுகள் எப்போதும் மனிதனைச் சார்ந்து இருப்பதில்லை. ஆனால், மனிதனோ காடுகளைச் சார்ந்துதான் வாழ ஆரம்பிக்கிறான். அதிலிருந்து கிடைக்கும் வளங்களையும் பயன்படுத்துகிறான். இறுதியில் வளம்கொழிக்கும் அந்தக் காடுகளையே அழிக்கவும் செய்கிறான். இதுதான் இன்றைய யதார்த்தம்.

ஓர் அடர்ந்த காடு இருக்கிறதென்றால் அதன் அடையாளமாக எதையெல்லாம் குறிப்பிடலாம்? மரம், செடி, மூலிகைகள், இயற்கை வளங்கள்... இவையெல்லாம் வளர்வதற்கு யார் உதவியிருப்பார்கள்? சந்தேகமே வேண்டாம், வனத்தின் பல்லுயிர்ச் சூழலில் விலங்குகளின் பங்கு மகத்தானது. அதிலும், யானைகள் பங்கு மிக மிக அதிகம்.

யானை
யானை

யானைகள் ஒருநாளைக்கு 200 கிலோ வரையிலான பசுமையான செடி கொடிகளை ஒடித்துச் சாப்பிடுகிறது. அதில் மீதமாகும் உணவுகளை மற்ற உயிரினங்களுக்கு விட்டுச்செல்கிறது. யானைகள் ஒரு நாளைக்கு 100 முதல் 130 லிட்டர் வரையிலான தண்ணீரை அருந்துகிறது. அதன் வழித்தடம் எப்போதும் நீர்நிலைகளை நோக்கியே இருக்கும். இதன் செரிமான மண்டலம் 60 சதவிகித உணவை மட்டும்தான் செரிக்கச் செய்கிறது. மீதமுள்ளவை கழிவுகளாக வெளியேற்றப்படுகின்றன. இந்தக் கழிவு மூலம் எளிதாக விதைப்பரவுதல் நடைபெறுகிறது. சத்தான தாவரங்கள் முளைக்கின்றன. நாளொன்றுக்குக் கிட்டத்தட்ட 25 முதல் 35 கிலோமீட்டர் வரை நடக்கிறது. இவை பெரும்பாலும் இடம்பெயர்ந்துகொண்டே இருக்கின்றன. ஒரே இடத்தில் இருந்தால் உணவுத்தட்டுப்பாடு மற்றும் உணவுச்சங்கிலி பாதிப்பு ஏற்படும் என்பதால், தொடர்ந்து பயணம் செய்துகொண்டே இருக்கின்றன இவை.

அப்படி பயணம் செல்லும்போதுதான் மனிதர்களால் பல்வேறு துயரங்களை எதிர்கொள்கின்றன யானைகள். பயணத்தில் எதிர்வரும் வழிகளில் வாகனங்களிலும், ரயில்களிலும் மோதி உயிரிழக்கின்றன. தமிழக கேரள எல்லைகளில் அடிக்கடி நடக்கும் யானைகளின் உயிரிழப்புகளே இதற்கு உதாரணம்.

யானைக்குட்டி
யானைக்குட்டி

யானைகளின் வாழ்விடத்தை மனிதன் எப்போது ஆக்கிரமிப்பு செய்தானோ அப்பொழுதே அவற்றின் மரணங்களும் நாளுக்குநாள் அதிகரித்துவிட்டது. கோவையில்1998-க்கு முன்புவரை எந்த விதமான மனித விலங்கு எதிர்கொள்ளல் சம்பவங்களும் நடைபெறவில்லை. ஆனால், 1999 முதல் 2018-ம் ஆண்டு வரை 191 யானை மனித எதிர்கொள்ளல் சம்பவங்கள் நடந்துள்ளன. இருபுறத்திலும் பலி எண்ணிக்கை இருந்தாலும் அதிகமாக யானைகள்தான் உயிரிழந்திருக்கின்றன. இதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள சூழலியல் எழுத்தாளர் ராமமூர்த்தியிடம் பேசினோம்.

அவர் கூறுகையில், "மனிதர்களிடம் என்றைக்கும் பிரமிப்பை ஏற்படுத்தியவை யானைகள். புராணங்கள், இதிகாசங்கள், கடவுள்கள் என யானைக்கும் மனிதருக்கும் இடையேயான தொடர்பு நீடித்துக்கொண்டே இருக்கிறது. அவற்றைத் தொடர்ந்து கொண்டாடுகிறோம். இருந்தும் அன்றிலிருந்து இன்றுவரை மனிதர்கள் யானைகளைக் கொன்றுகொண்டே இருப்பதை மட்டும் நிறுத்தவே இல்லை. சமவெளி முழுவதும் பரவிக்கிடந்த ஒரு கூட்டத்தை நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்குள் அடைத்து வாழ்விடத்தைச் சுருக்கி வாழமுடியாத சூழ்நிலையை நாம் உருவாக்கிவிட்டோம். அதற்குண்டான இடத்தில் தேயிலை மற்றும் காபி தோட்டங்கள் அமைத்திருக்கிறோம்.

சூழலியல் எழுத்தாளர் ராமமூர்த்தி
சூழலியல் எழுத்தாளர் ராமமூர்த்தி

மேலும் மலையடிவாரம் யொட்டியுள்ள இடத்தில் கான்கிரீட் வீடுகள், மிகப்பெரிய கட்டடங்கள், ஆன்மிக ஆசிரமங்கள், ரிசார்ட்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசு மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், சாலைகள், தடுப்பணைகள் எனப் பலவற்றை அமைத்து வாழவிடாமல் செய்துவிட்டோம்.

வருங்காலத்தில் வனவிலங்கு பூங்காவில்தான் யானைகளைப் பார்க்கப்போகிறோம். நம் தாத்தா பாட்டிகள் கொடுத்த காட்டினையும், வனவிலங்குகளையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவேண்டும். அதற்கான விழிப்புணர்வு மக்களிடத்தில் வந்தால், நிச்சயம் யானைகள் புத்துயிர் பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது." என்கிறார்.

யானை
யானை

அண்மையில் உச்சநீதிமன்ற ஆணையின்படி யானை வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரியும், அதைமீறி உள்ள விடுதிகளுக்கு சீல் வைக்க கோரியும் உத்தரவு பிறபிக்கப்பட்டது. இதேபோல யானைகளைக் காப்பதற்காக சட்டங்களும், விதிமுறைகளும் கடுமையாக வேண்டும். அப்போதுதான் இனியேனும் யானைகளின் வாழ்வு சீராகும்.

அடுத்த கட்டுரைக்கு