மக்கள் மணிக்கணக்கில் ஸ்மார்ட் போனில் மூழ்கியிருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள லிங்கன் பார்க் உயிரியல் பூங்காவில் உள்ள 193 கிலோ எடையுள்ள அமரே என்ற கொரில்லா, ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகி உள்ளது. சுற்றி என்ன நடக்கிறது என்பதுகூட தெரியாத அளவிற்கு தொலைபேசியின் ஸ்க்ரீனை அதிக நேரம் பார்த்துக்கொண்டே இருப்பதாக பூங்காவில் இருப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
16 வயதான கொரில்லாவிற்கு ஸ்மார்ட் போன்கள் வழங்கப் படவில்லை. கண்ணாடிக் கூண்டில் வைக்கப்பட்டுள்ள இந்த கொரில்லாவைப் பார்க்கவரும் மக்கள், அதன் கவனத்தை ஈர்க்க வீடியோக்கள், செல்ஃபிகள், செல்லப்பிராணிகளின் புகைப்படங்கள் போன்றவற்றோடு சில நேரங்களில் கொரில்லாவையும் படமெடுத்துக் காட்டுகின்றனர். பார்வையாளர்கள் தொடர்ந்து இந்தச் செயலைச் செய்வதால் ஸ்மார்ட் போன் திரைக்கு கொரில்லா அடிமையாகி உள்ளதாகவும், அதனால் மற்றொரு டீனேஜ் கொரில்லா தன்னைத் தாக்கியதுகூட தெரியாமல் கவனச் சிதறலில் மூழ்கி உள்ளதாகவும் பூங்கா நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
அமரேவின் வழக்கத்திற்கு மாறான இந்தப் பழக்கம் குறித்து, (லெஸ்டர் இ. ஃபிஷர் குரங்குகளின் ஆய்வு மற்றும் பாதுகாப்பு) உயிரியல் காட்சி சாலையின் இயக்குநரான ஸ்டீபன் ராஸ் கூறுகையில், ``இது அநேகமாக ஒரு சுழற்சி நிகழ்வாக இருக்கலாம், கொரில்லா எவ்வளவு ஆர்வம் காட்டுகிறதோ, அவ்வளவு அதிகமாக மக்கள் அந்தச் செயலில் ஈடுபட விரும்புகிறார்கள். ஆனால் மக்கள் இதனால் ஏற்படும் அபாயங்களை மறந்து விடுகின்றனர்'' என தெரிவித்தார்.

மூன்று கொரில்லாக்களுடன் அமரே இருந்தாலும், போனுக்கு அடிமையானதால் கண்ணாடிக்கு அருகிலேயே அமர்ந்து கொள்கிறது, இதைத் தடுக்க கண்ணாடிக்கும் பார்வையாளர்களுக்கும் இடையில் கயிற்றைத் தொங்க விட்டுள்ளனர். சிலர் கொரில்லாவின் கவனத்தை திசைத்திருப்பும் போது பார்வையாளர்களுக்கு பிரச்னையைச் சொல்லிப் புரிய வைக்கின்றனர்.