Published:Updated:

சீன யானைகள் செய்யும் அட்ராசிட்டீஸ்... ஒரே வாரத்தில் உலக ஃபேமஸ் ஆனது எப்படி?

உலக ஃபேமஸ் ஆன சீன யானைகள்...!
உலக ஃபேமஸ் ஆன சீன யானைகள்...!

தற்போது சேட்டைகளையெல்லாம் முடித்து அடுத்த இடம் நோக்கிப் பயணப்பட்டிருக்கும் இந்த யானைகள் ஒன்றாக உறங்கும் புகைப்படம் உலக அளவில் கவனம் பெற்றிருக்கிறது.

எங்கு சென்றாலும் கேமராக்கள், பாதுகாப்புக்கு காவல்துறையினர்; நடந்தால் மில்லியன் வியூஸ், தூங்கினால் லட்சம் ஷேர்ஸ்... சீனாவில் புதிதாக உருவெடுத்திருக்கும் சூப்பர்ஸ்டார்ஸுக்கு கிடைக்கும் மரியாதை இது. 'நமக்கு சீனாவுல தெரிஞ்ச ஒரே சூப்பர்ஸ்டார் ஜாக்கிசான் தானே' என பெரிதாக யோசிக்க வேண்டாம். யானைக் கூட்டம் ஒன்றுதான் இப்போது சீனாவின் டிரெண்டிங் ஸ்டார்ஸ்!
Viral China Elephants
Viral China Elephants
Hu Chao

15 யானைகள் கொண்ட ஒரு யானை கூட்டம் தெற்கு சீனாவில் (மியான்மர் அருகில்) இருக்கும் Yunnan மாகாணத்தில் இருக்கும் அதன் சொந்த வாழ்விடத்திலிருந்து சுமார் 310 மைல்கள் (500 கிலோமீட்டர்கள்) பயணம் செய்து சீனாவின் தென் கிழக்குப் பகுதிகளில் இருக்கும் நகரங்களில் அட்டூழியம் செய்துவருகின்றன. கடந்த ஆண்டே இந்த நீண்ட பயணத்தைத் தொடங்கிவிட்டன இந்த யானைகள். சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான பயிர்களை இதுவரை நாசம் செய்திருக்கின்றன. நகரங்களில் சாலைகளில் ஜாலியாக சுற்றித்திரிகின்றன.

யானைகள் இப்படி உலவுவதால் கிட்டத்தட்ட ஊரடங்கு காலம் போல வீட்டிலேயே முடங்கியிருக்கின்றனர் யானைகள் சுற்றித்திரியும் பகுதியில் இருக்கும் மக்கள். அப்படியும் வீட்டிற்குள் தும்பிக்கையை விட்டு உணவுப்பொருள்களை எடுத்து உண்கின்றவாம் இந்த யானைகள். விவசாய விளைபொருள்கள் எதையும் யானைகள் கண்ணில்படும்படி வைக்க வேண்டும் என மக்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர். காவல்துறையினரும் 24/7 யானைகளை கண்காணித்துக்கொண்டே இருக்கின்றனர். எப்போதும் 10-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் இவற்றைப் படமெடுத்துக்கொண்டே இருக்கின்றன.

சீனாவின் சமூக வலைதளங்களில் இந்த யானைகள் தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் செம வைரல்.

இதில் மக்களின் பேவரைட் மூன்று குட்டி யானைகள்தான். இதில் ஒன்று இந்த நீண்ட பயணத்துக்கு நடுவே பிறந்தது என்கின்றன சீன ஊடகங்கள். இவை செய்யும் சேட்டைகள்தான் சீன மக்கள் அனைவரையும் கவர்ந்திழுத்திருக்கிறது. எந்த அளவுக்கு இவை பிரபலமாகி இருக்கின்றன என்றால் சீன பிரபலங்கள் பலரும் யானைகளின் புகழ் வெளிச்சம் நம் மீதும் படட்டும் என யானைகள் வந்து சென்ற இடங்களுக்குச் சென்று வீடியோக்கள் வெளியிட்டுவருகின்றனர். அவை மிச்சம் வைத்த சோளம், அன்னாசிப்பழம் போன்றவற்றைச் சாப்பிடும் வீடியோக்கள் வெளியிடுகின்றனர். அந்த அளவுக்குச் சீனாவெங்கும் இந்த யானைகள் பற்றிய பேச்சுதான். தற்போது சேட்டைகளையெல்லாம் முடித்து அடுத்த இடம் நோக்கிப் பயணப்பட்டிருக்கும் இந்த யானைகள் ஒன்றாக உறங்கும் புகைப்படம் உலக அளவில் கவனம் பெற்றிருக்கிறது. அதனால் இனி இந்த யானைகள் உள்ளூர் நட்சத்திரங்கள் மட்டுமல்ல உலக நட்சத்திரங்களும் கூட..!

வைரல் ஸ்டார்ஸ்- சீன யானைகள்!
வைரல் ஸ்டார்ஸ்- சீன யானைகள்!
Vikatan

இவை ஏன் இந்த நீண்ட பயணத்தை மேற்கொண்டு வருகின்றன, எதை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றன என்று தெளிவாகத் தெரியவில்லை. அதன் சொந்த வாழ்விடத்தில் இருக்கும் மழைக்காடுகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டுவருவது ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பலருக்கும் கேளிக்கையாக இருந்தாலும் இது ஒரு முக்கிய சூழலியல் பிரச்சனையை நமக்கு எடுத்துக் காட்டுகிறது என்கின்றனர் சீனாவின் சூழலியல் செயற்பாட்டாளர்கள். ஏற்கெனவே சீனாவில் இந்த ஆசிய யானைகள் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்கள் பட்டியலில்தான் இருக்கின்றன. சுமார் 300 யானைகள்தான் Yunnan மாகாணத்தில் தற்போது வாழ்ந்துவருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாகவே விவசாயத்திற்காக வனப்பகுதிகள் பெருமளவில் அழிக்கப்பட்டுவரும் அவலம் சீனாவிலும் அரங்கேறிவருகிறது. இதனால் ஒன்றாக இருந்த பல யானைக் கூட்டங்களும் ஆங்காங்கே பிரிந்து தனித்துவிடப்பட்டிருக்கின்றன. இதனால் மனிதனுக்கும் யானைக்குமான மோதல் கடந்த சில ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இதைத் தடுப்பதற்காகச் சிறப்புக் குழுக்களை நியமித்து யானைகளைக் கண்காணித்து வருகிறது சீன அரசு.

ஆனால் இது நிரந்தர தீர்வாகாது; யானைகளின் வாழ்விடங்களை மீட்பதே ஒரே வழி என்பது அங்குள்ள சூழலியல் ஆய்வாளர்களின் கருத்து!
அடுத்த கட்டுரைக்கு