Published:Updated:

கோம்பை, சிப்பிப்பாறை, ராஜபாளையம்... நாட்டு நாய்களை தேர்வு செய்வது எப்படி?

பாய்ந்து ஓடும் ராஜபாளையம் நாய்கள்
News
பாய்ந்து ஓடும் ராஜபாளையம் நாய்கள்

ஜல்லிக்கட்டுக் காளைகளைப் போல தமிழர்களின் வாழ்க்கைமுறை, பாரம்பர்யத்துடன் ஒன்றியவை நாட்டு நாய்கள்.

வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குள் வரும்போது நம்மைப் பார்த்ததும், குறைத்துக்கொண்டே நாலுகால் பாய்ச்சலில் ஓடி வந்து, வாலை ஆட்டிக்கொண்டே நம் மீது தொத்துக்கால் போடும் நாயின் முகத்தைப் பார்க்கும் அந்த ஒரு நிமிடத்திலேயே கவலைகள் காணாமல் போகின்றன. வெளிநாட்டு ரக நாய்களை அதிக விலை கொடுத்து வாங்கினாலும், நம் நாட்டு இனங்களான ராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை ஆகிய ரக நாய்களை வளர்ப்பதில் தற்போது பலரும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ராஜபாளையம் நாய்களுடன் சீனிவாச மூர்த்தி
ராஜபாளையம் நாய்களுடன் சீனிவாச மூர்த்தி

`விசுவாசமான காவல்காரன்’ என நாட்டு நாய்களைக் குறிப்பிட்டுச் சொல்வதுண்டு. ஜல்லிக்கட்டுக் காளைகளைப் போல தமிழர்களின் வாழ்க்கைமுறை, பாரம்பர்யத்துடன் ஒன்றியவை நாட்டு நாய்கள். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேல் நாய்வளர்ப்பில் ஈடுபட்டு வரும் சீனிவாசமூர்த்தியிடம் பேசினோம்.

``வீடு, தோட்டத்தின் காவலுக்காக வளர்க்கப்பட்டு வந்த நாய் வளர்ப்பு, தற்போது வெறும் கெளரவத்துக்காகவே வளர்க்கப்பட்டு வருகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

விலையுயர்ந்த நாய்களை வாங்கி, நம்மை நாய் காவல் காத்த காலம் மாறி, அந்த நாய் காணாமல் போகாதபடி வீட்டுக்குள் பூட்டி வைத்து, அதைப் பாதுகாக்கும் நிலைதான் தற்போது நிலவுகிறது. இந்தியாவில் அதிகரித்து வரும் வெளிநாட்டு நாய்களின் வரவும் பெருக்கமுமே நாட்டு நாய் வளர்ப்பு குறைவுக்குக் காரணமாக உள்ளது. உலகில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாய்கள் இருந்தாலும், அவற்றில் 350 வகை இனங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் உள்ளது.

ராஜபாளையம் நாய்க்குட்டிகள்
ராஜபாளையம் நாய்க்குட்டிகள்

அதில் 7 வகை, இந்திய நாய்களாகும். இதில் கன்னி, கோம்பை, சிப்பிப்பாறை, ராஜபாளையம் ஆகிய நான்கும் நம் தமிழகத்தின் இனமாகும். ஆசிய கண்டத்திலேயே ஐந்து வகை நாய்கள்தாம் ஒரே நிறத்தில் குட்டி போடுமாம். அதில், ராஜபாளையம் நாயும் ஒன்று. வெளிநாட்டு நாய்களுக்குப் பயிற்சி அளித்தால் மட்டுமே திறமையாகச் செயல்படும். ஆனால், நமது நாட்டு இனநாய்கள் பிறப்பிலேயே வீரமும் விசுவாச குணமும் அதிகம் கொண்டவை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுவரை இவற்றுக்கு உலக அளவில் பெரிய அளவிலான அங்கீகாரம் கிடைக்கவில்லை. நாட்டு நாய்களை வீட்டில் வளர்க்க ஆண்களைவிட பெண்களும் தற்போது ஆர்வம் காட்டி வருகிறார்கள். பொதுவாக, நாயைக் குட்டியில் இருந்து வளர்க்கும்போது அதன் ஒவ்வொரு செயலும் நமக்குள் புத்துணர்வையும் சந்தோஷத்தையும் தரும். 30 முதல் 40 நாள்கள் குட்டியாக வாங்கி வளர்ப்பது நல்லது” என்றவர் ஒவ்வொரு நாயின் குணாதிசயம், தேர்வு முறைகள் குறித்தும் சொன்னார்.

கன்னி
கன்னி

ராஜபாளையம்:

எந்தச் சூழலிலும் தன் எஜமானர்களை மாற்றிக் கொள்ளாத குணமுடையது ராஜபாளையம் நாய். மோப்ப சக்தி மிகுந்த இந்த நாய், வீட்டுக்காவலுக்குச் சிறந்தது. பார்ப்பதற்கு கம்பீரத்துடனும் வீரத்துடனும் இருக்கும். இந்நாயின் குட்டிகள் அனைத்தும் ஒரே நிறத்தில் இருக்கும். வேகமாக ஓடும் தன்மை உடையது. உடல் முழுவதும் பால் நிற வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். அடி வயிறு, மூக்கு மற்றும் கண்களைச் சுற்றிலும் ரோஸ் நிறத்தில் இருக்கும்.

காதுமடல்கள் மடங்கியும், கால்கள் கட்டில் கால் போல நேராகவும், உறுதியாகவும் இருக்கும். வால் பகுதியை தடவிப்பார்த்தால் கரும்புகளில் உள்ள கணுக்கள் போன்றும், பார்ப்பதற்கு அரிவாள் போன்றும் வால் தூக்கி நிற்கும். தலை சிறியதாகவும் முகம் ஊசி போன்ற அமைப்பிலும், நெஞ்சுப்பகுதி இறங்கியும் வயிற்றுப்பகுதி ஏறியும் வாலின் அடிப்பகுதி தடித்தும் நுனிப்பகுதி மெல்லியதாகவும் மொத்தத்தில் நாய் பார்ப்பதற்கு எலும்பும் தோலுமாக இருக்க வேண்டும். இதில், நாய்களின் கண்கள் பூனைக்கண் போன்று இருந்தால் அந்தவகை நாய்களுக்கு காது கேட்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 30 நாள்கள் ஆன ஒரு குட்டியின் விலை ரூ.10,000 முதல் 12,000 வரை விற்கப்படுகிறது.

கோம்பை
கோம்பை

கோம்பை:

மருதுபாண்டியர்களின் கோட்டைக் காவலாக விளங்கிய கோம்பை, பார்ப்பதற்குச் `செந்நாய்’ போன்ற உருவ அமைப்புடையது. எதிரிகள் குதிரைகளில் படை எடுத்து வரும்போது, இவற்றை வைத்து குதிரைகளின் கால் பகுதிகளைக் கடித்து குதிரைகளை கீழே விழச்செய்து, எதிரிகளை தாக்கியுள்ளார்களாம். இவை புலியையே எதிர்த்து சண்டையிட்டதாகவும் வரலாறு உண்டு. உடல் மண் சிவப்பு நிறத்தில் இருக்கும். கண், மூக்கு, வாய்ப்பகுதியில் கறுப்பு நிறத்தில் இருக்கும். நெற்றிப்பகுதி மேடு பள்ளமாகவும், வால் நன்கு சுருண்டும் காணப்படும். ராஜபாளையத்தைப் போல, தற்போது கோம்பையும் வீட்டுக்காவலுக்காக வளர்க்கப்படுகிறது. 30 நாளான ஒரு குட்டியின் விலை ரூ.5,000 முதல் 6,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

வேட்டை நாய்கள்:

கன்னி, சிப்பிப்பாறை ஆகியவை முற்காலங்களில் முயல், மான், பன்றி வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்டன. கன்னி நாய் பார்ப்பதற்கு கறுப்பு நிறமாகவும் கால்கள் பிரவுன் நிறத்திலும் இருக்கும். நெஞ்சுப்பகுதி விரிந்தும், வயிற்றுப்பகுதி இறங்கியும், கால்கள் சற்று நீளமாகவும் இருக்கும். எவ்வளவு உணவு எடுத்துக் கொண்டாலும் பார்ப்பதற்கு எலும்பும் தோலுமாக இருக்கும் இதன் உடல் அமைப்புதான் வேகமாக பாய்ந்து ஓடிச் செல்லவும், விலங்குளை விரட்டவும் உதவுகிறது. இதே உடல் அமைப்புடன் கறுப்பு அல்லாமல் அழுக்குவெள்ளை, சாம்பல், மங்கிய பழுப்பு ஆகிய நிறங்களில் இருந்தால் அதை `சிப்பிப்பாறை’ என்கிறோம்.

சிப்பிப்பாறை
சிப்பிப்பாறை

கன்னி, சிப்பிப்பாறை இரண்டும் வேறு இனம் அல்ல. இவை இரண்டும் வேறு, வேறு இனம் என பலரும் குழப்பிக் கொள்கிறார்கள். தற்போது பெரிய பண்ணைகள், தோட்டங்களில் காவலுக்காகவும், அத்துமீறி நுழையும் ஆடு, மாடுகள் போன்ற விலங்குகளை விரட்டுவதற்காகவும் வளர்க்கப்படுகிறது. கன்னி, சிப்பிப்பாறை 30 நாள் குட்டியாக ரூ.8,000 முதல் 9,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. ராஜாபாளையத்தில் ஊருக்குள் நுழைவது முதல் ஊரைக் கடந்து செல்வது வரை சுமார் 10 பெரிய நாய்ப்பண்ணைகளும், 50-க்கும் மேற்பட்ட சிறிய நாய்ப் பண்ணைகளும் உள்ளன. ஆன்லைனில் குட்டிகளின் புகைப்படத்தைப் பார்த்து வாங்குவதை தவிர்த்துவிட்டு, இந்தப் பண்ணைகளில் நேரில் சென்று கூறப்பட்டுள்ள ஒவ்வொரு நாயின் உடலமைப்பைக் கூர்ந்து கவனித்து வாங்கலாம்” என்றார்.