Published:Updated:

'என்னது பூச்சி மருந்தா.... காமெடி பண்ணிக்கிட்டு!' எதிர்க்கத் தயாராகும் கரப்பான்பூச்சிகள்

ம.காசி விஸ்வநாதன்

அமெரிக்காவின் பர்டூயு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் ஜெர்மன் கரப்பான் பூச்சிகள் இந்த பூச்சிக்கொல்லிகளுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை வளர்த்துவருவது தெரியவந்துள்ளது

'என்னை யாராலும் அழிக்க முடியாது' - கரப்பான்பூச்சி
'என்னை யாராலும் அழிக்க முடியாது' - கரப்பான்பூச்சி

`மாற்றத்திற்கேற்ப மாறும் உயிரினம்தான் நீண்டகாலம் உயிர்வாழும்' என்று கூறுவர். இந்த வரி மிக சிறிய ஒற்றை செல் உயிரினத்திற்குகூட பொருந்தும். ஆனால், இந்த மாற்றம் ஒரு உயிரினத்திடையே நிகழ வெகுகாலம் ஆகும். ஆனால், கரப்பான் பூச்சிகள் இன்றைய சூழலில் மிக வேகமாக மாறிவருகிறதாம்.

இப்படியே போனால் வேதியியல் பொருள்களைக் கொண்டு மட்டும் இவற்றை கொல்வது நடக்காத விஷயமாக விரைவில் மாறிவிடும்
இந்த ஆய்வை தலைமை தாங்கும் மைக்கேல் ஸ்கார்ஃப்

கரப்பான் பூச்சி என்றாலே பலருக்கும் பயங்கர அலர்ஜி. வீட்டில் எங்காவது பார்த்துவிட்டால் போதும். வீட்டையே இரண்டாக்கி விடுவார்கள். இதற்காகவே சந்தையில் பல கரப்பான் பூச்சிக் கொல்லிகள் விற்கப்படுகின்றன. ஆனால், சமீபத்திய ஆய்வு ஒன்று விரைவில் `இந்த வித்தையெல்லாம் கரப்பான்களிடம் பலிக்காது' எனக் கண்டறிந்துள்ளது.

அமெரிக்காவின் பர்டூயு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் ஜெர்மன் கரப்பான் பூச்சிகள் இந்தப் பூச்சிக்கொல்லிகளுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை வளர்த்துவருவது தெரியவந்துள்ளது. ஆறு மாதங்கள் நடந்த இந்த ஆய்வில் ஒரு தலைமுறைக்குள் இந்த எதிர்ப்பு சக்தி பல மடங்கு உயர்வது தெளிவாக கவனிக்கப்பட்டிருக்கிறது. ``இவ்வளவு வேகமாக இது நடக்கமுடியும் என்று நாங்கள் யாருமே நினைத்துக்கூட பார்த்ததில்லை" என்கிறார் இந்த ஆய்வை தலைமை தாங்கும் மைக்கேல் ஸ்கார்ஃப்."

கரப்பான் பூச்சி
கரப்பான் பூச்சி

இப்படி ஒன்று கரப்பான் பூச்சிகளுக்குள் நடப்பதே இதற்கு முன்பு எங்களுக்குத் தெரியாது. பல வகையான பூச்சிக்கொல்லிகளுக்கு எதிராகவும் இப்படி எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொண்டே போனால், வேதியியல் பொருள்களைக் கொண்டு மட்டும் இவற்றை கொல்வது நடக்காத விஷயமாக விரைவில் மாறிவிடும்" என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வில் abamectin, boric acid, and thiamethoxam ஆகிய மூன்று பூச்சிக்கொல்லிகள் பல்வேறு அப்பார்ட்மென்ட்களில் இருக்கும் கரப்பான் பூச்சிகளின் மீது சோதனை செய்துபார்க்கப்பட்டது. இந்த மூன்றை வெவ்வேறு மாதிரி பயன்படுத்தியும் கரப்பான் பூச்சிகளின் மொத்த தொகையை அவர்களால் குறைக்கமுடியவில்லை. அவற்றுள் சிலவற்றை லேப்புக்கு எடுத்துச் சென்று சோதனை செய்துபார்த்ததில் சில கரப்பான்கள் முற்றிலுமாக இந்தக் கொல்லிகளால் பாதிக்கப்படாத அளவு எதிர்ப்புசக்தியை வளர்த்துக்கொண்டுள்ளன.

கரப்பான் பூச்சி
கரப்பான் பூச்சி

மூன்று மாத இனப்பெருக்க காலத்தில் 50 குட்டிகள் வரை இவை ஈனும் என்பதால் சிறிய அளவிலான பூச்சிகளுக்கு மட்டும் இந்த எதிர்ப்புசக்தியை வளர்த்துக்கொண்டால்கூட போதும், மீண்டும் எழுச்சி பெறத் தொடங்கிவிடும் இந்தக் கரப்பான் பூச்சிகள். இப்படியே போனால் இவைதான் உலகை ஒரு நாள் ஆளப்போகின்றன என இப்போதே நெட்டிசன்கள் மீம்களை குவித்துவருகின்றனர்.