Published:Updated:

“தேவாரமே அதோட கன்ட்ரோல்லதான்!”

யானை
பிரீமியம் ஸ்டோரி
யானை

ஒற்றைப் பெண் யானையைக் கொல்ல சதி?

“தேவாரமே அதோட கன்ட்ரோல்லதான்!”

ஒற்றைப் பெண் யானையைக் கொல்ல சதி?

Published:Updated:
யானை
பிரீமியம் ஸ்டோரி
யானை
‘‘சாயங்காலம் அஞ்சு மணிக்கு மலையிலிருந்து அந்த ஒத்தைப் பெண் யானை மெல்ல கீழ இறங்கும். ஆடி அசைஞ்சு ஒவ்வொரு தோட்டமா வந்து இஷ்டத்துக்குச் சாப்பிடும். அது மட்டுமில்ல... மனுஷங்களைக் கண்டாலே ஆக்‌ரோஷம் அடையுற அந்த யானை இதுவரைக்கும் ஏழு பேரை அடிச்சுக் கொன்னுருக்கு. இதுக்கு நடுவுல, அந்த யானையால கடத்தல் தொழில் பாதிக்கப்பட்ட கும்பல், அதைக் கொல்ல திட்டம் போட்டிருக்குறதா தேவாரத்துல பேசிக்குறாங்க...’’ என்று நம்முடன் பேச ஆரம்பித்தார், 18-ம் கால்வாய் பாசன விவசாயிகள் சங்க நிர்வாகி திருப்பதி வாசகன்.
“தேவாரமே அதோட கன்ட்ரோல்லதான்!”

‘‘என்ன, யானையைக் கொல்ல திட்டமா? கொஞ்சம் விரிவா சொல்லுங்க...’’ என்று அவரிடம் கேட்டோம். ‘‘தேவாரம் பகுதி மக்களும் விவசாயிகளும் பல காலமா யானைகளோடதான் வாழுறாங்க. தோட்டத்துக்குள்ள தினமும் யானைக் கூட்டம் வர்றதும், வயிறுமுட்டச் சாப்பிடுறதுமா இருக்கும். நஷ்டம் ஏற்பட்டாலும், விவசாயிகள் பெருசா கண்டுக்க மாட்டாங்க. யானைகளும் விவசாயிகளை ஒண்ணும் பண்ணினதில்லை. ஆனா, நாலு வருசத்துக்கு முன்னால ஒத்தைப் பெண் யானை ஒண்ணு இந்தப் பகுதிக்கு வந்துச்சு. 2016-ம் ஆண்டிலிருந்து இதுவரைக்கும் அது ஏழு பேரைக் கொன்னுருச்சு. அதுக்கு பயந்து விவசாயிங்க யாரும் தோட்டத்துல தங்குறது இல்லை.

சாக்கலூத்துமெட்டு வழியா ஏலக்காயும் அரிசியும் கடத்துற கும்பலுக்கு இந்த யானை பெரிய பிரச்னையாவே இருந்துச்சு. ராத்திரி நேரத்துல மட்டும்தான் யானை உலா வரும். அதனால, கடத்தல் கும்பலைச் சேர்ந்தவங்க தங்களோட வேலையைப் பகல் நேரத்துக்கு மாத்திக்கிட்டாங்க. இந்த நிலைமையிலதான், போன மாசம் ஆடு மேய்க்கப்போன பெண்ணை, பகல் நேரத்துலயே அந்த யானை அடிச்சு கொன்னுருச்சு. இதனால, கடத்தல் கும்பல் பகல்லயும் நடமாட வழியில்லாமப் போச்சு. அதனால, அவுட்டுக்காய் வெடிகளை யானை வழித்தடத்துல போட்டு யானையைக் கொல்ல அந்தக் கும்பல் திட்டம் போட்டிருக்குறதா தகவல் வந்திருக்கு. தவிர யானையைக் கொன்னுட்டு, பழியை விவசாயிங்க மேல போடவும் நிறைய வாய்ப்பு இருக்கு’’ என்றார் கவலையுடன்.

“தேவாரமே அதோட கன்ட்ரோல்லதான்!”

தேவாரம் சுற்றுப்புற விவசாயிகள் சங்கச் செயலாளர் முருகனோ, ‘‘மலையி லிருந்து யானை இறங்குனா முதல்ல எதிர்ப்படுறது எங்க தோட்டம்தான். சின்ன வயசுல இருந்து எத்தனையோ யானைக் கூட்டங்களைப் பாத்திருக்கேன். ஆனா, இந்த ஒத்தைப் பெண் யானை மாதிரி எந்த யானையையும் நான் பாத்ததில்லை. ரொம்ப ஆக்ரோஷமா இருக்கும். மனுஷங்களைப் பாத்தாலே வெறிபிடிச்ச மாதிரி ஓடிவரும். ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு ஆளை நாங்க இழந்துட்டு இருக்கோம். வனத்துறை போட்ட சோலார் மின்வேலி, அகழி யெல்லாம் அந்த யானைக்கு ஒரு விஷயமே இல்லை. இப்ப மொத்த தேவாரமே அதோட கன்ட்ரோல்லதான் இருக்கு. வனத்துறைதான் அந்த ஒத்தை யானையை இங்கிருந்து பிடிச்சிட்டுப்போய், எங்க பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தணும்” என்றார்.

‘‘யானையைக் கொல்ல சதித்திட்டம் தீட்டப் பட்டிருப்பதாகக் கூறப்படுகிறதே?’’ என்று மாவட்ட வன அலுவலர் கெளதமிடம் கேட்டோம். ‘‘எங்களுக்கும் அப்படித்தான் தகவல் கிடைத் துள்ளது. யானையைப் பாதுகாப்பதுடன், மக்களுக்கு உயிர்ச்சேதம் ஏற்படாமல் தடுப்பதுதான் எங்களது முதல் கடமை. வனத்துறை அதிகாரிகள் தேவாரம் மலைப்பகுதியில் முகாமிட்டு தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். யானைக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது’’ என்றார்.

திருப்பதி வாசகன் - முருகன்
திருப்பதி வாசகன் - முருகன்

“ஒற்றைப் பெண் யானையின் நடவடிக்கைகளை எப்படிக் கட்டுப் படுத்துவது?” வனவிலங்கு ஆர்வலரும் யானை மருத்துவருமான டாக்டர் கலைவாணனிடம் பேசினோம். ‘‘அந்த யானைக்கு 35 முதல் 40 வயது இருக்கலாம். யானைகள் தாய்வழிச் சமூகமாக வாழ்பவை என்பதால் பெண் யானைதான் கூட்டத்தை வழிநடத்தும். கூட்டத்திலுள்ள 12 வயதுக்கு மேற்பட்ட ஆண் யானையைத் தலைவி யானை விரட்டிவிடும். தனியாக விடப் பட்ட ஆண் யானை தண்ணீர், உணவு கிடைக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்து, தனக்கான வாழிடத்தை வரையறுத்துக் கொள்ளும். ஆனால், கூட்டத்திலிருந்து பெண் யானை ஒன்று தனியாகச் சுற்றுவது இயல்பானது அல்ல. அதுவும் அது மனிதர்களைத் தாக்குகிறது என்றால் மனிதர்களின் தொடர் தொந்தரவுகள், அதன் மனநிலையை மூர்க்கமாக்கியிருக்கலாம்.

வருடா வருடம் ஜூன் மாதத்தில் யானையின் நடமாட்டம் அதிகமிருக்கும். இந்த வருட ஜூன் மாதத்தில் வனத்துறையும் விவசாயிகளும் இணைந்து, யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்துக்கொண்டே இருந்தார்கள். அதனால், உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. ஜூலை மாதத்துக்குப் பிறகு கண்காணிப்பை நிறுத்தி விட்டனர். அதனால், நவம்பர் மாதம் பெண் ஒருவர் பலியாகிவிட்டார். ஜூன் மாதக் கூட்டு நடவடிக்கைபோல, வருடம் முழுவதும் மேற் கொள்வது நல்லது’’ என்றார்.

யானையை மனிதர்களிடமிருந்தும்... மனிதர் களை யானையிடமிருந்தும் காக்க வேண்டிய பொறுப்பு வனத்துறையிடம்தான் இருக்கிறது!

கும்கி யானைகளும், பெண் காட்டு யானையும்!

“தேவாரமே அதோட கன்ட்ரோல்லதான்!”

ஒற்றைப் பெண் யானையைப் பிடிக்க, 2018, ஜூலை மாதம் கலீல் மற்றும் மாரியப்பன் ஆகிய இரண்டு கும்கி யானைகள் தேவாரத்துக்கு வரவழைக்கப்பட்டன. கும்கி யானைகளைப் பார்த்த பெண் யானை, மலையைவிட்டுக் கீழிறங்கவே இல்லை. யானை வழித்தடத்தை ஆய்வுசெய்து, வனத்துக்குள் தேடுதல் வேட்டை நடத்தியும், பெண் யானை சிக்கவில்லை. ஒரு மாதம் தேவாரத்தில் முகாமிட்டிருந்த கும்கி யானைகள் புறப்பட்டுச் சென்ற மறுநாள், அதற்காகக் காத்திருந்ததுபோல விளைநிலங்களுக்குள் உலா வந்தது பெண் யானை.