Published:Updated:

`பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்?'- ஆராய்ச்சி தம்பதியின் அட்வைஸ்

ராபின் பெர்னாடு – சியாமளா மாதவி
ராபின் பெர்னாடு – சியாமளா மாதவி

ஒருமுறை மீட்புப் பணியின்போது நாகப்பாம்பு ஒன்று ராபினின் கையில் கடித்துவிட்டது. அதன் சுவடு இன்றுவரை ராபினின் கையில் அடையாளமாக இருக்கிறது.

“இந்தியாவில் சுமார் 270 வகை பாம்புகள் உள்ளன. அதில் கண்ணாடி விரியன், கட்டுவிரியன், சுருட்டைப்பாம்பு, நாகப்பாம்பு ஆகிய நான்கு வகை பாம்புகள் மட்டுமே உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அளவுக்கு விஷத்தன்மை கொண்டவை. மற்ற எந்தப் பாம்பு கடித்தாலும் பெரிதாக பாதிப்புகள் ஏற்படாது. எந்தெந்தப் பாம்புகள் விஷத்தன்மை கொண்டவை... பாம்பு கடித்ததும் உடனே என்ன செய்ய வேண்டும்... உயிர் பிழைத்த பிறகு ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன என்பது பற்றியெல்லாம் பெருவாரியான மக்களிடம் விழிப்புணர்வு இல்லை..."- மிகவும் கவலையோடு பேசுகிறார் ராபின் பெர்னார்டு.

மனைவி சியாமளா மாதவியோடு இணைந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாம்புகள் பற்றியும் பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றியும் ஆராய்ச்சி செய்துவருகிறார் ராபின். நேஷனல் ஜியோகிராபி சேனலில் இவர்களின் செயல்பாடுகள் குறித்த இரண்டு வெவ்வேறு பதிவுகள் ஆவணப்படமாக ஒளிபரப்பாகியுள்ளது.

பயிற்சியளிக்கும் ராபின்
பயிற்சியளிக்கும் ராபின்

வயல்வெளிகளில் அதிகளவில் ரசாயன உரங்கள் தெளிக்கப்படுவதால், எலி, தவளைகளின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இதனால் தேவையான உணவு கிடைக்காமல் மக்கள் வாழ்விடங்களுக்குள் பாம்புகள் வருவதும் அதிகரிக்கிறது. அதனால் கிராமம் முதல் நகரம்வரை எல்லாப் பகுதியிலும் பாம்புக்கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பாம்புகளைக் காப்பாற்றவும், பாம்பு- மனித மோதல்களைத் தடுக்கவும் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக களமாடும் பெர்னார்டு, ஈரோட்டைச் சேர்ந்தவர்.

“என் குடும்பத்தில் பலரும் ராணுவத்தில் வேலை செய்தவர்கள். எனக்கும் அந்த ஆசை இருந்ததால் பள்ளியில் படிக்கும்போது என்.சி.சி-யில் சில சமூகப் பணிகள் செய்ய ஆரம்பித்தேன். கல்லூரி படிக்கும்போது அந்தப் பணிகள் அதிகமாயின. அப்போது என் தோழியாக இருந்த என் மனைவியும் சமூகப் பணிகள் செய்ய ஆர்வமாக வருவார். கல்லூரி முடித்துவிட்டு வங்கிப் பணி உட்பட சில வேலைகளைச் செய்தேன். எதிலுமே மனநிறைவு கிடைக்கவில்லை. என் முழுக் கவனமும் இயற்கை மீதான தேடலில்தான் இருந்தது. என் விருப்பம்தான் சியாமளாவுக்கும். எனவே, வங்கிப் பணியிலிருந்து விலகினேன்.

காவல்துறை அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்கும் ராபின்
காவல்துறை அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்கும் ராபின்

எங்க நட்பு காதலா வளர்ந்துச்சு. திருமணத்துக்குப் பிறகு, விலங்குகள் நலன் உட்பட இயற்கை சார்ந்த பல விஷயங்களில் கவனம் செலுத்தினோம். பாம்புக்கடியால் உயிரிழப்போர் குறித்த செய்திகளை அதிகம் கேள்விப்பட்டோம். பாம்புகள் பற்றி பயமும் பல மூடநம்பிக்கைகளும் மக்களிடம் நிறைந்திருந்தன. அதற்குத் தீர்வுகாணும் வகையில் செயல்பட முடிவெடுத்தோம். அதற்காக முறையாக நாங்கள் இருவரும் பயிற்சி எடுத்துக்கொண்டோம். பின்னர், ‘தேசிய பாம்புக்கடி அமைப்பு’ என்ற அமைப்பைத் தொடங்கி, பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டோருக்காக வேலை செய்ய ஆரம்பித்தோம்.

அந்தப் பணிகளைச் சேவை நோக்கத்தில் செய்ததால், பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ள சுயதொழில்கள் செய்தோம். இதற்கிடையே வனத்துறையினரின் நட்பு அதிகமானது. பாம்பு பிடிப்பதற்காக அடிக்கடி எங்களைக் கூப்பிட்டார்கள். ஆரம்பத்தில் என்னுடன் வந்து என் மனைவியும் பாம்புகளைப் பிடிப்பார். பிறகு சில காரணங்களால் அவர் பாம்பு பிடிக்காவிட்டாலும், என்னுடன் வந்து இதர வேலைகள் செய்து உதவுகிறார்” என்கிற ராபின், மனைவியைப் பேச அழைத்தார்.

டி.ஜி.பி சைலேந்திரபாபுவுடன் சியாமளா
டி.ஜி.பி சைலேந்திரபாபுவுடன் சியாமளா

“இந்த உலகத்தில் வாழ்வதற்கான அனைத்து உரிமைகளும் வனவிலங்குகள், பிராணிகள் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் உண்டு. அந்தப் புரிதல் வந்துவிட்டாலே மனிதர்களால் பிற உயிரினங்களுக்கும் பிற உயிரினங்களால் மனிதர்களுக்கும் எந்தப் பிரச்னையும் வராது. அதற்கு முதலில் பாம்புகள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். பொதுவாக காட்டுப்பகுதியில்தான் பாம்புகள் அதிகம் வாழும் என்பார்கள். ஆனால், மலைப்பாம்பு (python) வகையைச் சேர்ந்த சில பாம்பு இனங்கள் மட்டும்தான் காட்டுப்பகுதிகள் அதிகம் வாழும்.

பாம்புக்கடி குறித்த ஆவணப்பதிவுக்கும், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் தற்கொலை தொடர்பான மன அழுத்தம் குறித்த ஆவணப்பதிவுக்கும் ஐ.நா அமைப்பின் விருதுகளையும் பெற்றிருக்கிறார், ராபின்.

பாம்பு வனவாழ் உயிரினம் இல்லை. மனிதர்கள் வாழும் பகுதியில்தான் பாம்புகள் அதிகம் வாழும். உணவு தேடிவரும் பாம்புகள் மக்கள் வசிப்பிடங்களுக்கு அருகில் புதர்கள், பழைய கட்டடங்கள் உள்ளிட்ட சில பகுதிகளில் தங்கிவிடுகின்றன. நகரமோ, கிராமமோ... எங்கு சென்றாலும் பாம்புகள் இருக்கும். அதற்காகப் பயப்பட வேண்டியதில்லை. மனிதர்களால் பாம்புகளுக்குப் பாதிப்பு ஏற்படாதவரை, பாம்புகளால் நமக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

பாம்புகளின் உடலிலும், அவற்றின் வசிப்பிடங்களிலும் உண்ணி எனப்படும் பூச்சிகள் நிறைய இருக்கும். அவற்றை வனத்துக்குள் விட்டால் அங்குள்ள வனவிலங்குகளுக்கு ஆபத்து ஏற்படக்கூடும். எனவே, பிடிக்கப்படும் பாம்புகளை வனப்பகுதியில் விடுவது சரியானதல்ல. ஆனால், அதைவிட்டால் வேறு மாற்று வழிகளும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே, பல்வேறு பகுதிகளில் பிடிக்கப்படும் பாம்புகள் இன்றுவரை வனப்பகுதியில்தான் விடப்படுகின்றன. எனவே, பாம்புகளைக் கண்டால் வனத்துறையினரிடம் சொல்லி அதை மீட்பதே சிறந்தது. அதைவிடுத்து நாமே அதைப் பிடிப்பதும், சாகடிப்பதும் தவறான நடைமுறை. இதுபோன்ற செயல்களினாலும், இரவு நேரங்களில் தெரியாமல் பாம்பை மிதித்துவிடுவதாலும்தான் பாம்புகள் மனிதனைக் கடிக்கின்றன.

நேஷனல் ஜியோகிராபி ஆவணப்பட படப்பிடிப்பில்
நேஷனல் ஜியோகிராபி ஆவணப்பட படப்பிடிப்பில்

அப்படி நிகழ்ந்தால் கடிப்பட்ட நபரை உடனடியாக மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இதுதான் முதலில் செய்ய வேண்டியவை. இதைத்தான் அரசும் வலியுறுத்துகிறது. மாறாக, கடிபட்ட இடத்தில் கயிற்றால் கட்டுவது, விஷம் பரவாமல் தடுக்க கடிபட்ட இடத்தைச் சுற்றியுள்ள ரத்தத்தை வெளியேற்றுவது உள்ளிட்ட முதலுதவி சிகிச்சைகளைச் சிலர் செய்வார்கள்.

இதனால் மருத்துவச் சிகிச்சையளித்து பாம்பினால் கடிப்பட்டவர்களை உயிர் பிழைக்கச் செய்வதற்கான 'கோல்டன் ஹவர்ஸ்' எனப்படும் மதிப்புகிக்க நேரம் குறையும். எனவே, நேரத்தை வீணாக்காமல், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதே நல்லது” என்கிறார் சியாமளா.

இந்த உலகத்தில் வாழ்வதற்கான அனைத்து உரிமைகளும் வனவிலங்குகள், பிராணிகள் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் உண்டு. அந்தப் புரிதல் வந்துவிட்டாலே மனிதர்களால் பிற உயிரினங்களுக்கும் பிற உயிரினங்களால் மனிதர்களுக்கும் எந்தப் பிரச்னையும் வராது.
சியாமளா

“சில வருடங்களுக்கு முன்புவரை, தென்னிந்தியாவில் பல பகுதிகளுக்குப் போய் பாம்பு பிடிக்கும் வேலைகளைச் செய்திருக்கிறோம். இப்போது நேரமின்மையால் பாம்பு பிடிப்பதைக் குறைத்துக்கொண்டோம். தவிர்க்க முடியாதபட்சத்தில் எங்களை அழைத்தால் மட்டும் பாம்பு பிடிக்கச் செல்வோம். மற்றபடி பாம்புக் கடிக்குப் பிறகான தீர்வுகளுக்குத்தான் அதிகம் வேலை செய்றோம். பாம்பு கடித்து குணமாகிவிட்ட பிறகும்கூட, விஷத்தின் தன்மையைப் பொறுத்து கடிபட்ட இடத்தில் சிலருக்குப் புண் ஏற்பட்டு அந்தத் தோல் பகுதியே சீல் பிடிக்கும் அளவுக்கு விளைவுகள் பெரிதாகும்.

அந்த நேரத்தில் பலருக்கும் அதிக மன உளைச்சல் ஏற்படும். உடனடியாக சிகிச்சை எடுக்காவிட்டால் அப்போதும் பாதிப்பு அதிகரிக்கலாம். இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான விழிப்புணர்வு அளிப்பதோடு மருந்துகள் கொடுத்தும் உதவுகிறோம். தவிர, வனத்துறை, தீயணைப்புத்துறை, காவல்துறை அதிகாரிகளுக்கும் பாம்பு பிடிக்கும் வழிமுறைகள் குறித்துப் பயிற்சி அளிக்கிறோம். சமீபத்தில் தமிழக ரயில்வே டி.ஜி.பி சைலேந்திரபாபு அலுவலகத்தில் அவருக்கும், அவரது குழுவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளுக்கும் பாம்புகள் குறித்தும், பாம்புகள் பிடிக்கும் வழிமுறைகள் குறித்தும் பயிற்சி கொடுத்தோம்” என்னும் ராபின், வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் நீண்டகால அனுபவம் கொண்டவர். சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் வனவிலங்குகள் குறித்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்குப் பயிற்சி அளிக்கிறார்.

பாம்புக்கடியால் பாதித்த மக்களுடன் உரையாடும் ராபின்
பாம்புக்கடியால் பாதித்த மக்களுடன் உரையாடும் ராபின்

மனிதர்களுக்குப் பாம்புகள் குறித்த உண்மையான விவரங்களை எடுத்துச் சொல்வது, கிராமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பாம்புகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்குகள் நடத்துவது, பாம்புக்கடி ஏற்பட்டவர்களின் உடல்நிலை விவரங்கள் சேகரிப்பது, தீயணைப்பு மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்குப் பயிற்சிகள் அளிப்பது, பாம்புகள் மற்றும் பாம்புக்கடி குறித்து ஆவணப் பதிவுகள் மேற்கொள்வது என எப்போதும் பரபரப்பாக இயங்கும் இவர்கள். பாம்புக்கடிக்கான தீர்வுகள் குறித்து, சர்வதேச அளவில் நடந்த சில கருத்தரங்குகளிலும் கலந்துகொண்டு உரையாடியிருக்கிறார்கள்.

“பாம்புக்கடியால் பாதிக்கப்படுவோர் குறித்த முறையான டேட்டாக்கள் எதுவும் சேகரிக்கப்படுவதில்லை. முந்தைய ஆண்டுகளில் பாம்புக்கடிக்கு என்ன மருத்துவ சிகிச்சைகள் இருந்தன, பாம்புக்கடி ஏற்பட்டவர்களுக்கு எப்படிச் சிகிச்சையளிக்கப்பட்டது, சிகிச்சை பெற்றவர்கள் தற்போது எப்படியிருக்கிறார்கள் என்பது உட்பட பல விவரங்களைப் பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டோரைச் சந்தித்து சேகரிக்கிறோம். இந்த ஆய்வுகளைக் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்கிறோம். அரசு உட்பட எந்தத் தரப்பினரும் இதுபோன்ற ஆய்வில் ஈடுபடுவதில்லை. அதனால்தான் பாம்புக்கடி குறித்த விஷயங்கள் அதிகம் பேசப்படாமலேயே இருக்கின்றன. எங்களுடைய இந்த ஆய்வு விவரங்களைத் தொகுத்து அரசிடம் கொடுக்கவிருக்கிறோம். பாம்புகள் மற்றும் பாம்புக்கடி குறித்துப் பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுவது உட்பட அரசு பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்தால்தான், மக்களுக்கு விழிப்புணர்வு கிடைக்கும்” என்று கூறுகிறார் ராபின்.

நேஷனல் ஜியோகிராபி ஆவணப்பட படப்பிடிப்பில்
நேஷனல் ஜியோகிராபி ஆவணப்பட படப்பிடிப்பில்

இந்தத் தம்பதிக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர். பாம்புகள் குறித்த பணிகள் தவிர, கிரீன் கிராஸ் இந்தியா என்ற அமைப்பின் மூலம் விளை பொருள்களை வாங்கி விற்பனை செய்யும் முயற்சிகளிலும் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு