Published:Updated:

மேய்ச்சல் மாடுகள்! சிறுநீர், சாணம் விற்பனைமூலம் வருமானம்!

நாட்டு மாடுகளுடன் சாலீஸ்வரி
பிரீமியம் ஸ்டோரி
News
நாட்டு மாடுகளுடன் சாலீஸ்வரி

கால்நடை

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகில் உள்ள ரோஸ்மேரிபுரத்தில் வீட்டுக்குப் பக்கத்திலேயே கொட்டகை அமைத்து, 150 மலைமாடுகளை வளர்த்து வருகின்றனர் செல்வராஜ்-சார்லீஸ்வரி தம்பதி. ஒரு காலை வேளையில், கொட்டகையில் மாடுகளை எழுப்பிச் சிறுநீர் சேகரித்துக் கொண்டிருந்தவர்களைச் சந்தித்தோம்.

உற்சாகமாகப் பேசத்தொடங்கிய செல்வராஜ், “எங்க தாத்தா காலத்துல இருந்து மூணு தலைமுறையா உள்ளுர் நாட்டு மாடுகளை மேய்ச்சல் முறையில வளர்த்துட்டு வர்றோம். 5-ம் வகுப்புக்கு மேல நான் படிக்கல. அப்பாவோடு மாடு மேய்க்கப் போனேன். இப்ப மேய்ச்சல் மாடுகளை வளர்த்துட்டு வர்றேன்.

செல்வராஜ்
செல்வராஜ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

புலிக்குளம், காங்கேயம்னு உள்ளூர் நாட்டுமாடுகள்ல 4 காளைகள், 112 பசுக்கள், 34 கன்றுகள்னு மொத்தம் 150 உருப்படி வரை இருக்குது. மலைப்பகுதிக்கு மேய்ச்சலுக்குப் போய்த் திரும்பறதால இதை மலைமாடுகள்னு சொல்றாங்க. வீடுகள்ல நாட்டுப் பசுமாடு வளர்க்குறவங்களும் பால் வத்திப்போனா மலைப்பகுதிக்கு, மேய்ச்சலுக்கு அனுப்புவாங்க. மலைமாடுகள்ல இருந்து ரேக்ளா பந்தயம், ஜல்லிக்கட்டுக்கு மாடுகளைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி கொடுப்பாங்க. பாலுக்காக மட்டுமில்லாம தொழுவுரம், கோமியம் (சிறுநீர்) தேவைக்காகவும் மலைமாடுகளை வளர்க்குறாங்க. நாட்டுமாட்டுச் சாணத்துல அதிக உரச்சத்து இருக்குறதால, விவசாய நிலங்கள்ல ஆட்டுக்கிடை போடுற மாதிரி, இந்த மலைமாட்டுக் கிடையையும் போடுவாங்க. மூணு நாள் தொடர்ந்து கிடை போட்டா, ரசாயன உரத்துல கிடைக்குற சத்தைவிடப் பல மடங்கு அதிக சத்து கிடைக்கும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

18 வருஷங்களுக்கு முன்னாடி வரைக்கும் மலைப்பகுதியில தொழுவம் அமைச்சு மாடுகளை மேய்ச்சிட்டு வந்தோம். மலைப்பகுதிகள்ல இருக்கும் மூலிகைகளை அதிகம் மேய்றதால மாடுகளோட சாணம், சிறுநீர் ரொம்ப வீரியமா இருக்கும். கடந்த சில ஆண்டுகளா வனப்பகுதியில மலைமாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வனத்துறை அதிக கெடுபிடி காட்டுது. மலை அடிவாரத்துல மட்டும் மேய்க்கணும்னு அனுமதியைப் படிப்படியா குறைச்சாங்க.

நாட்டு மாடுகளுடன் சாலீஸ்வரி
நாட்டு மாடுகளுடன் சாலீஸ்வரி

2002-ம் வருஷத்துக்குப் பிறகு வனப்பகுதிகள்ல முற்றிலும் மேய்ச்சலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால, மேய்ச்சல் நிலமில்லாம பல விவசாயிகள் மாடுகளை விற்க ஆரம்பிச்சிட்டாங்க. மலையடிவாரத்தில மாடுகளை மேய்ச்சப்பகூட யானை, சிறுத்தை, காட்டுப்பன்றி மாதிரியான வன விலங்குகள் எதுவும் ஊருக்குள்ள வந்ததில்லை. ஆனால், இப்ப ஊருக்குள்ள விளைநிலங்களுக்குள்ள புகுந்திடுது. கால்நடை மேய்க்குறவங்களுக்குப் ‘பட்டி பாஸ்’ கொடுக்குறதை வனத்துறை நிறுத்தினதுனால அளவுக்குமீறி செம்மண் அள்ளுறது, கட்டடங்கள் கட்டுறது அதிகமாகிடுச்சு” என்றார்.

மாடுகள் பராமரிப்பு மற்றும் வருமானம் குறித்துப் பேசிய செல்வராஜின் மனைவி சார்லீஸ்வரி, “தினமும் காலையில 5 மணியிலிருந்து ஒவ்வொரு மாடா எழுப்பி விடுவேன். மாடு எந்திரிக்கும்போது பிரியுற சிறுநீரைப் பிடிச்சு டிரம்ல சேகரிப்போம். காலையில 9 மணிக்கு, கொட்டகையிலிருந்து மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்புவோம். அப்பவும் ஒருதடவை கோமியம் பிடிப்போம். நான் இல்லைன்னா என் வீட்டுக்காரர் யாராவது ஒருவர் மாடுகளோட கூடப் போவோம். மாடுகளை அனுப்பிட்டு கொட்டகையில சாணத்தை அள்ளி, எருக்கிடங்கிலச் சேமிப்போம். சாயங்காலம் 6 மணிக்கு மாடுக வீடு திரும்பும்.

வீட்டு மாடுகளைப்போல, ஒவ்வொரு மாடுகளையும் நிறுத்திக் குளிப்பாட்ட முடியாது. மேய்ச்சலுக்குப் போற வழியில இருக்கக் குளம், குட்டைகள்ல வாரம் ஒருதடவை குளிப்பாட்டுவோம். மதியம், சாயங்காலம்னு ரெண்டு தடவை குளத்தில தண்ணிக் காட்டுவோம். ராத்திரியில தீவனம் எதுவும் கொடுக்குறதில்லை. முழுக்க மேய்ச்சல் தீவனம்தான். மழைக்காலங்கள்ல மேய்ச்சலுக்கு அனுப்ப முடியாத நாள்ல காலையில அடர்தீவனம், மதியம் பசுந்தீவனம் கொடுக்கிறோம். இந்த மாடுக தட்பவெப்ப சூழ்நிலையைத் தாங்கி வளரும். நோய் எதிர்ப்புசக்தியும் அதிகம். அதனால மற்ற கால்நடைகள் மாதிரி, மருத்துவச் சிகிச்சை எதுவும் தேவையில்ல.

மேய்ச்சல் மாடுகள்! சிறுநீர், சாணம் விற்பனைமூலம் வருமானம்!

ஒரு பசு மாட்டுல இருந்து தினமும் 3 லிட்டர் பால் மட்டும் வீட்டுத்தேவைக்காகக் கறப்போம். கன்றுகளோட வளர்ச்சிக்காக மீதிப் பசுக்கள்ல பாலைக் கறக்காம விட்டுடுறோம். கோமியத்தை விவசாயத் தேவைக்கும், மருத்துவத் தேவைக்கும் வாங்கிட்டுப் போறாங்க. தினமும் 40 லிட்டர் கணக்குல, மாசம் 1,200 லிட்டர் மாட்டுச் சிறுநீர் கிடைக்கிது. இதுல 800 லிட்டர் வரைக்கும் பஞ்சகவ்யா, அமுதக்கரைசல், ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம்னு இடுபொருள்கள் தயாரிக்க வாங்கிட்டுப் போறாங்க. 300 லிட்டர் வரைக்கும் உள்ளூர் மக்கள் மருத்துவத்துக்காக வாங்கிட்டுப் போறாங்க. உள்ளூர்ல சிறுநீரை லிட்டர் ரூ.15-க்கும், விவசாயத்திற்கு ரூ.20-க்கும் விற்பனை செய்யுறேன். அந்த வகையில மாசம் ரூ.20,500 வருமானமாக் கிடைக்கிது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேபோல, மாசம் 4 லோடு மாட்டுச் சாணம் விற்பனை செய்றோம். அதுமூலம் ரூ.16,000 வருமானமாகக் கிடைக்கிது. சிறுநீர், சாணம் மூலம் மொத்தம் ரூ.36,500 வருமானம் கிடைச்சுட்டு இருக்கு. இதுதவிர, வருஷத்துக்கு 20 மாடுகள்வரைக்கும் விற்பனையாகும். அந்த வகையில மூன்றரை முதல் 4 லட்சம் ரூபாய் வரை தனி வருமானம் கிடைக்குது” என்றார்.

மேய்ச்சல் மாடுகள் அடைக்கப்பட்ட கொட்டகை
மேய்ச்சல் மாடுகள் அடைக்கப்பட்ட கொட்டகை

நிறைவாகப் பேசிய செல்வராஜ், “மேய்ச்சல் நிலத்தைத் தேடி மாடுக மந்தை மந்தையா போறதப் பார்க்க அம்புட்டு அழகா இருக்கும். ஆனா, இப்ப மேய்ச்சல் நிலமுமில்லை; மாடுகளும் இல்லை. மேய்க்குறவங்களும் இல்லைனு ஆகிப்போச்சு. முன்னெல்லாம் கிராமங்கள்ல நாட்டுமாடுக மட்டும்தான் இருந்துச்சு. வெண்மைப்புரட்சின்னு சொல்லி வெளிநாட்டு மாடுகளைக் கொண்டு வந்தாங்க. நம்ம நாட்டுக்குச் சம்பந்தமே இல்லாத வெளிநாட்டுக் கலப்பின மாடுகளை வாங்கி வளர்க்க ஆரம்பிச்சதும், நம்ம நாட்டு மாடுகளும் அடிமாட்டுக்குப் போக ஆரம்பிச்சுது. ஒரு கட்டத்தில ஜெர்சி மாடுகளையே நாட்டு மாடுகள்னு சொல்ற அளவுக்கு விவசாயிகளோட மனநிலையும் மாறிப்போச்சு. இதனால மேய்ச்சல் நிலமும் பறிபோயிடுச்சு. காய்ஞ்ச நிலம் பசுமையாகணும், பசுமையான நிலமும் பாதுகாக்கப்படணும்னுதான் சொல்றோம். மாடுமேய்க்க பழையபடி ‘பட்டி பாஸ்’ தரணும். நாட்டுமாடுகள் காக்கப்படணும். கலப்பின மாடுகள் தவிர்க்கப்பட்டு, அந்தந்த மண்ணுக்கேத்த மாடுகள் வளர்க்கப்படணும் என்பதே எங்களோட கோரிக்கை” என்றார்.

தொடர்புக்கு, செல்வராஜ், செல்போன்: 98425 23448

நோய்களைக் குணமாக்கும் மாமருந்து!

மேய்ச்சல் மாடுகள்! சிறுநீர், சாணம் விற்பனைமூலம் வருமானம்!

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியைச் சேர்ந்த, வள்ளியூர் வட்டார மகேந்திரகிரி பாரம்பர்ய விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் சமுத்திரபாண்டி மகேஷ்வரனிடம் பேசினோம். “நானும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன்தான். 12-ம் வகுப்பு முடிச்சுட்டு வெல்டிங் இன்ஸ்பெக்டரா மும்பை, துபாய், ஓமன், கத்தார்னு 25 வருஷம் வேலை பார்த்தேன். 9 வருஷத்துக்கு முன்னால சிக்குன்குனியா காய்ச்சல் வந்தபோது, கால் முட்டுகளை மடக்க முடியாம ரொம்பக் கஷ்டப்பட்டேன். ஊசிப் போட்டு மாத்திரை சாப்பிட்டும் கேக்கலை. வேற என்ன வைத்திய முறை இருக்குன்னு இணையத்துல தேடிப் பார்த்தேன். ‘உயிர்க்கொல்லி கெமிக்கல் உடலில் தங்குவதால்தான் நோய் ஏற்படுகிறது. யூரியாவும் மாட்டுக்கோமியமும் ஒன்னுதான். யூரியாவைத் தண்ணீரில் கலக்கிக் குடிச்சா இறந்துடுவோம். ஆனா, கோமியத்தை (நாட்டுமாட்டுச் சிறுநீர்) குடிச்சா கேன்சர்கூடக் குணமாகும். தொடர்ந்து 48 நாள்கள் குடிச்சா சரியாப் போகும்’னு நம்மாழ்வார் ஐயா பேசியதைப் பார்த்தேன். அதுல இருந்து, தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் 300 மி.லி தொடர்ந்து குடிச்சுட்டு வந்தேன். 39-வது நாளிலேயே மூட்டுவலி போயிடுச்சு. தற்போது வரையிலும் வாரம் ரெண்டு நாள் 300 மி.லி மாட்டுச் சிறுநீரைக் குடிச்சிட்டு வர்றேன். முதல்நாளில் இடைவெளிவிட்டு 2 லிட்டர் வரை குடிக்க வேண்டும். உடலில் தங்கிய கழிவுகள் வெளியேறும். தொடர்ந்து 48 நாள்கள் குடித்து வரலாம்” என்றார்.

தொடர்புக்கு, செல்போன்: 75984 19861.

மேய்ச்சல் மாடுகள்! சிறுநீர், சாணம் விற்பனைமூலம் வருமானம்!

பெருவயிறு நோய்களைக் குணமாக்கும்!

நாட்டுமாட்டுச் சிறுநீரின் மருத்துவப் பயன்கள் குறித்துத் திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் மைக்கேல் செயராசுவிடம் பேசினோம். “பசுமாட்டுச் சிறுநீர், சிறந்த கிருமிநாசினியாக இருப்பதால், கிராமங்களில் முற்காலத்தில் தினமும் காலையில் வீட்டின் வாசலில் தெளிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. மங்கல காரியங்கள் தொடங்கும்போதும், ஹோமம் முதலான வேள்விச் சடங்குகளின் போதும் தீர்த்தமாக வழங்கும் பழக்கம் இன்றளவும் தொடர்ந்து வருகிறது. சித்த மருத்துவத்தில் ‘மண்டூராதி அடைக்குடிநீர்’ முதலிய பெருமருந்துகள் தயாரிப்பில் கோமியம் சேர்க்கப்படுகிறது. மேலும், பல்வேறு பாடாண நச்சுப்பொருள்களைச் சுத்தம் செய்து மருந்து தயாரிப்பதற்கும் பயன்படுகிறது. கல்லீரல், மண்ணீரல் வீக்கம் ஏற்பட்டு வருகின்ற பெருவயிறு முதலான நோய்கள் குணமாக, தினந்தோறும் 30 முதல் 50 மி.லி அளவு 48 நாள்கள் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரலாம். சர்க்கரை நோயும் குணமாக வாய்ப்புள்ளது.

மலச்சிக்கல் உள்ளவர்கள், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 100 முதல் 200 மி.லி வரை குடித்துவர நன்கு பேதியாகி, வயிற்றிலுள்ள அனைத்துக் கழிவுகளும் வெளியேறி வயிறு சுத்தமாகும். 3 நாள்கள் இவ்வாறு குடித்து வரலாம். உடலில் ஏற்படும் திடீர் ஊறல், அரிப்புக்குக் மேற்பூச்சாகப் பூசலாம். இது போன்ற மருத்துவத்திற்காக எடுத்துக்கொள்ளும் சிறுநீர், நாட்டுமாடுகளின் சிறுநீராக இருந்தால் நல்ல பலன் கிடைக்கும். மாடுகளிலிருந்து பெறப்பட்ட மூன்று மணி நேரத்திற்குள் குடிப்பது நல்லது. நேரம் கடந்தால் அதிக கசப்பு ஏற்பட்டுப் பருகமுடியாத நிலை ஏற்படும்” என்றார்.