Published:Updated:

`ஸ்கீம் முடிஞ்சிடுச்சி; அனுப்ப வாய்ப்பே இல்லை' - ஈரமில்லாத மருத்துவர்களால் உயிருக்குப் போராடும் பசு!

உயிருக்கு போராடும் பசு... பரிதவிக்கும் இளம் கன்றுக்குட்டி
உயிருக்கு போராடும் பசு... பரிதவிக்கும் இளம் கன்றுக்குட்டி ( படங்கள் : ம.அரவிந்த் )

தமிழ்நாடு அரசின் கால்நடை ஆம்புலன்ஸ் அவசர எண் 1962-க்கு பல முறை போன் பண்ணினோம். வர முடியாதுனு பிடிவாதமா சொல்லிட்டாங்க.

கால் முறிந்து கீழே விழுந்த தாய்ப் பசு, மூன்று நாள்களாக உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறது. இதனால், அதனுடைய இளம் கன்றுக்குட்டி பரிதவிக்கும் காட்சி, நம் நெஞ்சை கனமாக்குகிறது. ஆனால், கால்நடை ஆம்புலன்ஸ் மருத்துவர்கள் ஈரம் இல்லாமல் நடந்துகொண்டது இப்பகுதி மக்களை பெரும் ஆதங்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

கால்நடை ஆம்புலன்ஸ்
கால்நடை ஆம்புலன்ஸ்
படங்கள்: ம. அரவிந்த்

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகில் உள்ள கீழத்திருப்பந்துருத்தி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுகுமாரன் இதை நம் கவனத்துக்குக் கொண்டுவந்தார். ``என் தம்பி வீட்டு மாடு, வயல்ல மேஞ்சிக்கிட்டு இருக்குறப்ப, கால்ல கயிறு சிக்கி கீழே விழுந்துடுச்சி. அதால எழுந்திரிக்கவே முடியலை. கால் எலும்பு முறிஞ்சிருக்குமோனு சந்தேகமா இருக்கு.

மூணு நாளா ரொம்ப அவதிப்படுது. பார்க்க சகிக்கலை. வலியில் துடிக்குறதுனால, எதுவுமே சாப்பிடலை. தண்ணீர்கூட குடிக்கலை. இதுல என்ன கொடுமைன்னா, 20 நாள்களுக்கு முன்னாடிதான் இது கன்னு ஈணுச்சு. இளம் கன்னுக்குட்டிகள் குறைந்தபட்ச ஒரு மாசமாவது தாய்க்கிட்டதான் பால் குடிக்கும். இதுதான் உணவு. வேற எதுவும் சாப்பிடாது. தவ்வி தவ்வி பால் குடிக்கப் போயி ஏமாந்து பரிதவிக்குது. இது பட்ற கஷ்டத்தைப் பார்த்தால், மனசு இன்னும் வேதனையா இருக்கு.

கால்நடை மருத்துவக் குழு
கால்நடை மருத்துவக் குழு
படங்கள்: ம.அரவிந்த்

திருவையாறுல உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில போயி எவ்வளவோ கெஞ்சிப் பார்த்துட்டோம். ``எங்களால முடியாது... ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி கொண்டு போங்கனு சொல்லிட்டாங்க. தமிழ்நாடு அரசின் கால்நடை ஆம்புலன்ஸ் அவசர எண் 1962-க்கு பல முறை போன் பண்ணினோம். வர முடியாதுனு பிடிவாதமா சொல்லிட்டாங்க. முதலுதவி சிகிச்சை அளிச்சி, கால்நடை மருத்துவமனைக்கு தூக்கிக்கிட்டுப் போனால்தான் காப்பாத்த முடியும். என்ன செய்றதுனே தெரியலை” என கவலையுடன் தெரிவித்தார். தமிழக அரசால் செயல்படுத்தப்படும் கால்நடை ஆம்புலன்ஸில், விழுந்து கிடக்கும் மாடுகளை லாகவமாக உள்ளே ஏற்றுவதற்கான லிப்ட் உள்ளிட்ட பல நவீன வசதிகள் உண்டு. இதில் மருத்துவர்கள், உதவியாளர்களும் இருக்கிறார்கள். இதற்காக தமிழக அரசு பல கோடி ரூபாய் செலவு செய்கிறது.

இந்த விவகாரம் குறித்து கால்நடை ஆம்புலன்ஸ் அவசர எண் 1962-க்கு தொடர்புகொண்டு நாம் பேசியபோது, மறுமுனையில் பேசிய நபர் , ``இந்த ஸ்கீம் முடிஞ்சிடுச்சி. இப்ப டாக்டர் இல்லாததால, ஆம்புலன்ஸ் அனுப்ப வாய்ப்பே இல்லை” என தெரிவித்து இணைப்பைத் துண்டித்தார். மீண்டும் நாம் தொடர்புகொண்டபோதும் அதே பதிலையே தெரிவித்தார்கள். இந்தப் பிரிவின் உயர் அதிகாரிகளும் அலட்சியமாகவே பதில் சொன்னார்கள். தொடர்ச்சியாக வலியுறுத்திய பிறகு, கால்நடை ஆம்புலன்ஸ் கீழத்திருப்பந்துருத்தி சென்றது. வேண்டா வெறுப்பாக மாட்டை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர், இதை சரி பண்ண முடியாது. கால் எலும்பு முறிஞ்சிடுச்சி" என சொல்லியிருக்கிறார். மருத்துவரிடம், அங்கிருந்த விவசாயிகள் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும்கூட மனம் இறங்கவே இல்லை . அவரிடம் நாமும் எவ்வளவோ பேசிப் பார்த்தோம். முதலுதவி சிகிச்சைக்கூட அளிக்காமல் , ஆம்புலன்ஸ் சென்றுவிட்டது.

இந்த ஸ்கீம் முடிஞ்சிடுச்சி. இப்ப டாக்டர் இல்லாததால, ஆம்புலன்ஸ் அனுப்ப வாய்ப்பே இல்லை
மருத்துவமனை

நம்மிடம் பேசிய சுகுமாரன்,``விகடன் எடுத்த முயற்சியினால்தான் ஆம்புலன்ஸ் இங்க வந்துச்சு. ஆனால், கொஞ்சம்கூட அவங்கக்கிட்ட ஈரம் இல்லை. வெளிநாடுகள்ல அடிபட்டுக் கிடக்குற யானையைக்கூட காப்பாத்துறாங்க. ஒரத்தநாடு மருத்துவக்கல்லூரிக்குக் கொண்டுபோயி, சிகிச்சை அளிச்சுப் பார்க்காமலே, இப்படி கைவிட்டுட்டாங்க. வாய் இல்லாத அந்த ஜீவனோட வலியை எங்களால மட்டும்தான் உணர முடியும். தமிழக அரசால் உயிருக்குப் போராடுற என் மாட்டை காப்பாத்த முடியலை” என கொந்தளித்தார்.

அடுத்த கட்டுரைக்கு