Published:Updated:

நீலகிரி: டூரிஸ்ட்டுகளுக்கு `குரைக்கும் மான்’ விருந்து! - சிக்கிய காட்டேஜ் உரிமையாளர்

வேட்டைக் கும்பல்
வேட்டைக் கும்பல்

தேயிலைத் தோட்டத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த, அழிந்துவரும் பட்டியலிலுள்ள குரைக்கும் மானை (Barking Deer) இறைச்சிக்காகத் துப்பாக்கியில் சுட்டுக் கொன்று காரில் எடுத்துச் சென்ற ஐந்து பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

மானை‌ வேட்டையாடி,‌ காரில் எடுத்துச் செல்வதாக வனத்துறையினருக்கு நேற்று முன்தினம் மாலை தகவல் வந்திருக்கிறது. இந்தத் தகவலின் அடிப்படையில், உடனடியாக காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்த வனத்துறை அதிகாரிகள், அந்த வேட்டைக் கும்பலைத் தேடும் பணியில் களமிறங்கினர்.

 வேட்டையில் ஈடுபட்ட மணிகண்டன்
வேட்டையில் ஈடுபட்ட மணிகண்டன்

குறிப்பிட்ட அந்த காரின் எண் மற்றும் நிறத்தைக் கண்டறிந்த வனத்துறையினர், சோதனைச் சாவடிகளை சுதாரிக்கச் செய்திருக்கிறார்கள். ஊட்டி‌ அருகிலுள்ள கேத்தி பகுதியில் அந்த கார் சென்றுக்கொண்டிருக்கும்போது கேத்தி போலீஸார் காரை சோதனையிட்டிருக்கிறார்கள்.

காரின் பின் பகுதியில் ரத்தக்கறையும், மானின் ரோமமும் இருப்பதை உறுதி செய்து காரை‌ ஓட்டிவந்த நபரைப் பிடித்து காரை, பறிமுதல் செய்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். அந்த நபரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர்‌ அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள்.

பறிமுதல் செய்யப்பட்ட மான் இறைச்சி
பறிமுதல் செய்யப்பட்ட மான் இறைச்சி

கேத்தி பகுதியில் `எம்.கே’ என்ற‌ பெயரில் காட்டேஜ் நடத்திவரும் மணிகண்டன் என்பவர், தனது தங்கும் விடுதியில் தங்கியுள்ளவர்களுக்கு விருந்தளிக்க `பார்க்கிங் டீர்’ எனப்படும் குரைக்கும் மானைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று‌, வேட்டையாடியிருக்கிறார்.

மான் வேட்டை குறித்து நம்மிடம் பேசிய வனத்துறை ஊழியர் ஒருவர், ``வெளி ஊர்லருந்து டூரிஸ்ட்டை வரவழைச்சு இவரோட காட்டேஜ்ல தங்கவைக்கிறது... அப்புறம் அவங்களை ரைடு போலாம்ணு வெளி ஏரியாவுக்குக் கூட்டிட்டுப்போய்

 வேட்டை கும்பலுடன் வனத்துறை
வேட்டை கும்பலுடன் வனத்துறை

காட்டு விலங்குகளைத் துப்பாக்கியில் சுட்டு வேட்டையாடி, அதோட இறைச்சியை விருந்தாக்கியிருக்கார். கடந்த சில வருஷமாவே இந்தச் சட்ட விரோத வேலையைச் செஞ்சிருக்கார்" என்றனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய உதவி வனப் பாதுகாவலர் சரவணக்குமார், ``மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா உத்தரவின் பேரில், காவல்துறையினர் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டோம். காரைப் பிடித்து குந்தா வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினோம்.

 வேட்டைக் கும்பலுடன் வனத்துறை
வேட்டைக் கும்பலுடன் வனத்துறை

அதில் எம்.கே காட்டேஜ் நடத்திவந்த கேத்தி சாந்தூரைச் சேர்ந்த மணிகண்டன் (43) என்பவர் துப்பாக்கியால் மானை வேட்டையாடியது தெரிந்தது. அவருடன் சுற்றுலாப் பயணிகளான தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெபராஜ் (44), ஜான் ஆம்ஸ்ட்ராங் பாபு (41), ராமையா (39) மற்றும் ‌ மதுரையைச் சேர்ந்த சுலைமான் (39) ஆகியோர் உடனிருந்திருக்கிறார்கள்.

அவர்களிடமிருநது‌ குரைக்கும் மான் கறி பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், மலபார் அணில் [Malabar Giant Squirrel] ஒன்றையும் வேட்டையாடியிருக்கிறார்கள்.

வேட்டை துப்பாக்கி
வேட்டை துப்பாக்கி

அதையும் பறிமுதல் செய்திருக்கிறோம். ஐந்து பேர் மீதும் வன உயிர் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து, அவர்களைச் சிறையில் அடைத்திருக்கிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு