Published:Updated:

உடைந்துகிடக்கும் நெல்லைப் பூங்கா சுற்றுச்சுவர்; கொல்லப்படும் மான்கள்!-நடவடிக்கை எடுக்குமா வனத்துறை?

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் உள்ள மான்கள் பூங்காவில் நாய்களால் கடித்துக் குதறப்பட்டு புள்ளிமான்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

உயிரிழந்த புள்ளிமான்
உயிரிழந்த புள்ளிமான்

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில், புள்ளிமான்கள் பூங்கா உள்ளது. மதுரை - குமரி தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள இந்தப் பூங்காவின் சில இடங்களில், சுற்றுச்சுவர் உடைந்து கிடக்கிறது. அதனால் மான்கள் வெளியே வந்து, அருகில் உள்ள விளைநிலங்களைச் சேதப்படுத்துவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தண்ணீரின்றி தவிக்கும் மான்கள்... நடவடிக்கை எடுக்குமா வனத்துறை?

அத்துடன், இரை தேடியும் தண்ணீருக்காகவும், மான்கள் பூங்காவை விட்டு வெளியேறிவிடுகின்றன. தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகனங்களில் அடிபட்டு அவை பலியாகும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.

கங்கைகொண்டான் மான்கள் பூங்காவிலிருந்து வெளியேறும் மான்கள், அங்கிருந்து 10 கிலோ மீட்டர் சுற்றளவுள்ள பகுதிகளில் உலாவுகின்றன. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், கால்நடைப் பண்ணை, ராணி அண்ணா கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் சுற்றித்திரியும் மான்களை நாய்கள் வேட்டையாடும் சம்பவங்களும் நடக்கின்றன.

மான் பூங்காவுக்குள் சுற்றும் நாய்
மான் பூங்காவுக்குள் சுற்றும் நாய்
எல்.ராஜேந்திரன்

பூங்காவின் சுற்றுச்சுவர் உயரம் குறைவாக இருப்பதால், மான்கள் துள்ளிக்குதித்து வெளியே வருவதுடன், நாய்களும் உள்ளே நுழைந்துவிடுகின்றன. மான் குட்டிகளை விரட்டிச்சென்று கொல்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

கடந்த வாரத்தில், ஒரு புள்ளிமான் சாலையில் அடிபட்டுக்கிடந்த நிலையில், நேற்று ஒரு மானை நாய்கள் கடித்துக்கொன்ற சம்பவம் நடந்துள்ளது. தாழையூத்திலிருந்து ரஸ்தா செல்லும் சாலையில், மூன்று வயது மதிக்கத்தக்க மான் பலியானது. இது குறித்த தகவல் அறிந்ததும், வனச்சரகர் கருப்பையா தலைமையிலான வனத்துறையினர் புள்ளிமானின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனை மேற்கொண்டனர்.

உயிரிழந்த மான்
உயிரிழந்த மான்

அடிக்கடி நடைபெறும் இத்தகைய சம்பவங்கள் குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘’சுற்றுச்சுவரைப் பலப்படுத்தி, மான்கள் வெளியேறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மான்கள் வெளியேறி விடுகின்றன. அதனால் சுவரின் உயரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்கள்.