Published:Updated:

மறிக்கப்படும் வழித்தடங்கள்... யானை மனித எதிர்கொள்ளலில் சிக்கித் தவிக்கும் கோவை!

கோவையின் மக்கள் தொகை 2 மில்லியனைத் தாண்டிவிட்டது. தினசரி புதிது புதிதாகக் கட்டடங்கள் முளைத்துக்கொண்டேயிருக்கின்றன. இவையாவும், ஒரு காலத்தில் யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் வாழ்விடம் என்பது மனிதர்களின் மூளையில் சிறிதளவுகூட உறைக்கவில்லை.

யானைகள்
யானைகள் ( படம் தி.விஜய் )

கோவையில் உணவு தேடி ஹோட்டல் கடைக்கு வருகிறது ஓர் யானை. தன் வழித்தடங்கள் யாவும் அடைக்கப்பட்டிருக்க, இதே போல உணவையும் வாழ்விடத்தையும் தேடி வரும் மற்றொரு யானை டாப்ஸ்லிப் அருகே வரகளியாறு அருகே மரக்கூண்டில் தண்டனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறது.

சின்னத்தம்பி மயக்க ஊசி போட்டு பிடிக்கப்பட்டபோது.
சின்னத்தம்பி மயக்க ஊசி போட்டு பிடிக்கப்பட்டபோது.
படம் தி.விஜய்

இதே விஷயத்துக்காக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மயக்க ஊசி பிடிக்கப்பட்டு, கூண்டில் அடைக்கப்பட்ட இன்னொரு யானை வனத்துறையின் கவனக்குறைவால் இறந்தேவிட்டது. மற்றொரு யானை, மயக்க ஊசி போட்டு முதுமலையில் விடப்பட்டுள்ளது.

கோவையில், 1999-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை யானை மனித மோதலில் 191 யானைகள் இறந்துள்ளன. மனிதர்களில் 143 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு தரப்புகளிலுமே உயிர் பலி இருந்தாலும், இதில் அதிகம் பாதிக்கப்படுவது என்னவோ? யானைகள்தாம்.
யானை
யானை
படம் தி.விஜய்

இதே நிகழ்வுகள் நாளை நாம் முதலில் கூறிய ஹோட்டல் கடைக்கு வந்த யானைக்கும் நடக்கலாம். இப்படிப்பட்ட நெருக்கடிகளுக்கு மத்தியில்தான், கோவையில் உள்ள யானைகள் தங்களின் நாள்களை நகர்த்தி வருகின்றன. கோவையில், 1999-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை யானை மனித 191 யானைகள் இறந்துள்ளன. மனிதர்களில் 143 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு தரப்புகளிலுமே உயிர் பலி இருந்தாலும், இதில் அதிகம் பாதிக்கப்படுவது என்னவோ யானைகள்தாம். ஒத்த கொம்பன், சில்லுக் கொம்பன், கட்ட கொம்பன், மொன்ன வாலு, பேய், பெரிய தம்பி, மதுக்கரை மகாராஜ், விநாயகன் போன்ற பல யானைகள் கோவையை விட்டும் உலகத்தை விட்டுமே மனிதர்களால் விரட்டப்பட்டுள்ளன.

ஒற்றை யானை... இரண்டு மாநிலம்... ஆறு உயிர்கள்!

"1998-ம் ஆண்டுக்கு முன்பு, கோவையில் யானை மனித எதிர்கொள்ளல் நடக்கவில்லை. தற்போது, இந்தியாவில் அதிகம் நடக்கும் பகுதியாக கோவை இருக்கிறது. வனப்பகுதியை ஒட்டியுள்ள மலையடிவாரங்களில் நிகழ்ந்துள்ள மாற்றங்களே இதற்குக் காரணம். நகரத்தில் இருக்கும் பலர், வனத்தையொட்டிய பகுதிகளில் நிலத்தை வாங்கி, விவசாயம் செய்தும், கட்டடங்கள் கட்டியும் வருகின்றனர். இதற்காக போர்வெல் போடுவது, வேலிகள் அமைப்பது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இதனால், யானைகள் காலம் காலமாக வாழ்ந்து வந்த வாழ்விடங்கள் மறிக்கப்பட்டுள்ளன.

ராம்குமார்
ராம்குமார்

கோவை சரிவான வனப்பகுதி என்பதால் இங்கு மழை பெய்தால் நீரும் நிற்காது. இதன் காரணமாக யானைகள் ஊருக்குள் வந்துதான் வனப்பகுதிக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அப்படி வரும் யானைகள், இங்கே கிடைக்கும் உணவை சாப்பிட்டு பழகிவிட்டன. ஒரு யானைக்கு சராசரியாக ஓராண்டுக்கு 300 முதல் 800 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு பகுதி வேண்டும். அதற்குத் தொடர்ச்சியான காடுகள் இருப்பது அவசியம். தொடர்ச்சியான காடுகளுக்கு, யானைகளின் வலசைப் பாதை மற்றும் வாழ்விடம் இரண்டையும் பாதுகாத்தால் போதும்" என்கிறார் இந்திய வன உயிரின அறக்கட்டளையை (WTI) சேர்ந்த ஆராய்ச்சியாளர் ராம்குமார்

சூழலியல் ஆர்வலர் ராமமூர்த்தி, "30 ஆண்டுகளுக்கு முன்பு காடுகளையொட்டி மானாவாரி பயிரை வைத்துதான் விவசாயம் செய்துகொண்டிருந்தனர். தற்போது, அவை முழு நேர பணப்பயிர்களாக மாறிவிட்டன. முக்கியமாக அவை யானைகளை ஈர்க்கும் பயிர்களாகவும் இருக்கின்றன. கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஆசிரமங்கள், கோயில்கள் என்று யானைத்தடங்களில் ஏகப்பட்ட கட்டடங்கள் வந்துவிட்டன.

ராமமூர்த்தி
ராமமூர்த்தி

இப்போது அந்தப் பூமிக்கு நாம் பட்டா வாங்கலாம். அதற்காக, அவை யானை வழித்தடம் இல்லை என்றாகிவிடாது. யானைக்குப் பட்டா நிலத்துக்கும் வனத்துக்கும் வித்தியாசம் தெரியாது. பொதுவாக யானைகள் சமவெளிக் காடுகளைத்தான் விரும்பும். தற்போது வனப்பகுதிகள், மலை அடிவாரத்தை ஒட்டி சென்றுவிட்டன. மலைப்பகுதியிலும் தேயிலை, காபி பயிர்கள் வந்துவிட்டன. கீழேயும் கட்டடங்கள் வந்துவிட்டன. யானைகள் சரிவில்தான் வாழ வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம்? யானைகளுக்கு நாம் மிகப்பெரிய பாதகத்தைச் செய்து வருகிறோம்" என்றார் வேதனையாக.

உலக வனஉயிர் அமைப்பைச் (WWF) சேர்ந்த பூமிநாதன், "வனப்பகுதிகளில், லண்டனா போன்ற அந்நிய தாவரங்கள் அதிகரித்துவிட்டன. இதனால், யானைகளின் உணவான நாட்டுத்தாவரங்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டன. எனவே, முதலில் அந்த அந்நிய தாவரங்களை அகற்ற வேண்டும். யானைகள் வலம் வர மிகப்பெரிய பரப்பளவிலான நிலம் தேவை. கல்லாறு பகுதி யானைகளின் முக்கியமான வலசைப் பாதையாக இருக்கிறது. ஆனால், போக்குவரத்து நெருக்கடியால் கல்லாறு மிகவும் பரபரப்பாகக் காணப்படுகிறது. எனவே, கல்லாற்றில் ஒரு பாலம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமா கோரிக்கை வைத்து வருகிறோம்.

பூமிநாதன்
பூமிநாதன்
படம் தி.விஜய்

அதேபோல, வனப்பகுதியைச் சுற்றி அகழிகளைப் பலப்படுத்த வேண்டும் அகழி அமைப்பதுடன் நிறுத்திவிடாமல், அவற்றை முறையாகப் பராமரிப்பதும் அவசியம். யானைகள் எந்த இடத்தில் எல்லாம் அதிகம் வருகிறது என்று தெரிகிறதோ, அங்கெல்லாம் வனத்துறை அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். வனத்துறை மட்டும் மனது வைத்தால் பத்தாது. விவசாயிகள், மற்ற அரசுத்துறைகள் அனைவரும் ஒத்துழைப்பு தந்ததால்தான் இந்தப் பிரச்னையில் தீர்வு காண முடியும்" என்றார்.

கோவையில், செங்கல் சூளைகள், ஈஷா யோகா மையம், காருண்யா கல்வி நிறுவனம், சின்மயா, ஏ.சி.சி ஆலை, அமிர்தா விஷ்வ வித்யபீடம் பல்கலைக்கழகம், சச்சிதானந்தா நிகேதன் பள்ளி, சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம், மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை கட்டடம் (சி.ஆர்.பி.எஃப்) என்று யானை வாழ்விடத்தை மறித்த புகாரில் சிக்கிய நிறுவனங்களின் பட்டியலை அடுக்கிக்கொண்டே போகலாம்.

சச்சிதானந்தா நிகேதன் பள்ளி
சச்சிதானந்தா நிகேதன் பள்ளி

இதில், நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் உள்ள அரசு, தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட்டுக்கொண்டு கட்டடங்களை கட்டி வருகிறது. வெள்ளியங்கிரி காளிமங்கலம் வனப்பகுதியையொட்டி கட்டப்படும் குடிசை மாற்று வாரியத்தின் அடுக்கு மாடிகுடியிருப்பே இவர்களின் அத்துமீறல்களுக்கு சமீபத்திய சாட்சி.

மலைப்பகுதி மற்றும் அடிவாரங்களில் கட்டடம் கட்ட, ஹாகா என்றழைக்கப்படும் தமிழ்நாடு மலைப்பகுதிகள் பாதுகாப்பு ஆணையத்திடம் அனுமதி வாங்க வேண்டும். ஆனால், கோவையில் உள்ள பெரும்பாலான கட்டடங்கள், ஹாகா அனுமதியில்லாமல்தான் இயங்கி வருகின்றன.

கோவையில், 30 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை உணர்த்தும் சேட்டிலைட் படம்
கோவையில், 30 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை உணர்த்தும் சேட்டிலைட் படம்

இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவும் இல்லை. நீண்ட ஆண்டுகளுக்கு முன்பிருந்த இடைத்தாங்கல் மண்டலம் (Buffer Zone) (வனத்திலிருந்து குறிப்பிட்ட தொலைவுக்கு எந்தப் பணிக்கும் அனுமதி வழங்காமல் அந்த இடத்தை பராமரிப்பது) தொழில்நுட்பமும் இப்போது இல்லை.

இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் சிலரிடம் பேசியபோது, "வனப்பகுதியில் இருந்து பட்டா நிலத்துக்கு 40 மீட்டர் முதல் 60 மீட்டர் தொலைவு இருக்க வேண்டும் என்பது விதிமுறை. பெரும்பாலான இடங்களில், இது கடைப்பிடிக்கப்படுவதில்லை.

கோவை சி.ஆர்.பி.எஃப் கேம்ப் வளாகம்
கோவை சி.ஆர்.பி.எஃப் கேம்ப் வளாகம்
படம் தி.விஜய்

பட்டா நிலங்கள் தற்போது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு (Reserve forest) மிகவும் அருகில் வந்துவிட்டன. அதுதான் பிரச்னைக்கு முக்கிய காரணம். அந்த நிலங்களின் பட்டாக்களை ரத்து செய்ய, மேலிடத்துக்கு பரிந்துரை செய்துள்ளோம்" என்றனர்.

யானைகள் கேட்பது, நமது பட்டா பூமியையோ உணவையோ அல்ல. மறிக்கப்பட்டுள்ள தங்களது வழித்தடத்தையும் வாழ்விடத்தையுமே யானைகள் தேடி வருகின்றன.

யானை
யானை
படம் தி.விஜய்
Vikatan

இந்தப் பிரச்னையை சரிசெய்யாமல் கோவையில் எத்தனை திட்டங்கள் செயல்படுத்தினாலும் அவையும் யானைகளுக்கு மனித இனம் செய்யும் தீங்குதான்.