மத்தியப்பிரதேச மாநிலம், ஜபுவா மாவட்டத்தில் உள்ள கடக்நாத் கோழி(கருங்கோழி) அதன் தனித்துவமான கருநிறம் மற்றும் மருத்துவ குணங்கள் காரணமாக உள்ளூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து அதிகமாக வாங்கப்படுகிறது. அதன் நிறம் மட்டுமல்லாமல் அதன் இறைச்சி, ரத்தம், கால்கள், முட்டைகூட கருமையாக இருக்கும். அதிக புரத சத்து நிறைந்த, கொழுப்பில்லாத கடக்நாத் கோழிகளை உள்ளூர்வாசிகள் 'காளி மாசி' என்றும் அழைக்கின்றனர். மற்ற கோழி இனங்களை ஒப்பிடுகையில் கடக்நாத் கோழி இனம் அதிக விலையில் விற்கப்படுகிறது. ஜபுவா மாவட்டத்தின் புவிசார் குறியீடாக இந்த கோழி இனம் உள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மத்தியப் பிரதேசத்தின் நாட்டுக்கோழி வகையைச் சேர்ந்தவைதான் கடக்நாத் கருங்கோழிகள். இந்தக் கோழிகளின் உடலில் மெலனின் என்ற நிறமி அதிகம் உள்ளது. இதன் காரணமாக இவற்றின் இறக்கையில் தொடங்கி கறி, ரத்தம், என அனைத்துமே அடர் நிறம் கொண்டவை. யுனானி, சித்த மருத்துவம் போன்ற வைத்திய முறைகளில் இந்தக் கோழிகள் மருத்துவகுணம் கொண்டவையாகச் சிறப்பிக்கப்படுகின்றன.
நரம்புத் தளர்ச்சி போன்ற பிரச்னைகள் உள்ளவர்களுக்கு கருங்கோழிக்கறி மிகவும் நல்லது. இதன் இறைச்சியில் உள்ள மெலனின் என்ற நிறமியின் காரணமாக நரம்புகள் வலுவடைந்து, விரிகின்றன. இதில் புரதச்சத்து மிகுந்துள்ளது. உடலில் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. இதைச் சாப்பிடுவதால் ரத்தம் அழுத்தம் கட்டுப்படும். இதய நோய்களுக்கு ஏற்றது. இப்படி பல நன்மைகள் இந்தக் கோழிக்கறியில் உள்ளது.
இந்நிலையில் 2,000 கருங்கோழி குஞ்சுகளை வாங்கி வளர்க்க உள்ளார் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி. வினோத் மேதா என்பவர் ஜபுவா மாவட்டத்தில் தண்ட்லா அருகே உள்ள ருண்டிபாடா கிராமத்தில் 2017-ம் ஆண்டிலிருந்து கடக்நாத் ஆஷிஷ் கூட்டுறவு சங்கமாக பதிவு செய்து கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்.

இவருக்கு பல நாடுகளிலிருந்தும் ஆர்டர்கள் வந்தநிலையில், 2020-ம் ஆண்டில் தோனியிடம் இருந்து ஆர்டர் வந்தது. சுமார் 2,000 கருங்கோழி எனப்படும் கடக்நாத் கோழிக் குஞ்சுகளை தோனி ஆர்டர் செய்தார். ஆனால் அந்த சமயத்தில் பரவிய பறவை காய்ச்சல் காரணமாக, இந்த ஆர்டரை அனுப்ப இயலவில்லை. தற்போது 2,000 கோழி குஞ்சுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு, தோனியின் பண்ணையில் வளர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து வினோத் மேதா கூறுகையில், 'தோனியிடம் இருந்து கிடைத்த ஆர்டர் மிகவும் ஸ்பெஷல். மகேந்திர சிங் தோனியை சந்திக்க விரும்பினேன். ஆனால் ஐபிஎல் காரணமாக அவரை சந்திக்கும் வாய்ப்பு மிக குறைவாகவே உள்ளது' என தெரிவித்துள்ளார்.