Published:Updated:

` சின்னத்தம்பியால் எனக்கு ஏற்பட்ட இழப்பு!' - விருது பாரபட்சத்தால் கலங்கும் `யானை டாக்டர்' அசோகன்

தமிழக வனத்துறை வழங்கும் விருது, தனக்கு வழங்கப்படவில்லை என்று பிரபல யானை டாக்டர் அசோகன் வேதனை தெரிவித்துள்ளார்.

டாக்டர் அசோகன்
டாக்டர் அசோகன்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின், வன கால்நடை மருத்துவராகப் பணிபுரிந்துவருகிறார், டாக்டர் அசோகன். புகழ்பெற்ற யானை டாக்டரான கிருஷ்ணமூர்த்தியின் சீடர். முதுமலை புலிகள் காப்பகம், கோவை வ.உ.சி பூங்கா உட்பட தமிழகத்தின் ஏராளமான பகுதிகளில் பணிபுரிந்திருக்கிறார். யானை, பறவைகள், மான்கள், காட்டு மாடுகள் என்று பல உயிரினங்களின் வாழ்க்கையைக் காப்பாற்றியவர்.

அசோகன்
அசோகன்

சமீபத்தில், தாய் யானையை இழந்த குட்டி யானைக்கு அடைக்கலம் கொடுத்தது, கோமா நிலைக்குப் போன கழுதைப் புலியை உயிர்ப் பிழைக்க வைத்தது என்று அசோகனின் அசாத்திய உழைப்பை அடுக்கிக்கொண்டேபோகலாம்.

28 ஆண்டுகளில் 14 பணியிட மாற்றங்கள் என்ற பதக்கத்தை நெஞ்சில் ஏந்தி பணியாற்றிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில், வன வார (Wildlife Week) கொண்டாட்டத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு அதிகாரிகளுக்கு வனத்துறை சார்பில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சின்னத்தம்பி யானையைப் பிடித்ததற்காக கோவை, திருப்பூர், பொள்ளாச்சி வனத்துறைக்கு விருது வழங்கப்பட உள்ளது.

சின்னத்தம்பி யானையை பிடிக்கும்போது
சின்னத்தம்பி யானையை பிடிக்கும்போது

இதற்கான நிகழ்ச்சி, வருகின்ற 8-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இந்நிலையில், சின்னத்தம்பியை மயக்க ஊசி போட்டு பிடிக்க முக்கியக் காரணமாக இருந்த டாக்டர் அசோகனின் பெயர் விருதுப் பட்டியலில் இடம்பெறவில்லை.

இதுகுறித்து டாக்டர் அசோகன் தனது முகநூல் பக்கத்தில், “ சின்னத்தம்பி யானையைப் பிடித்தவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. ஆனால் எனக்கில்லை. கோவையில் சின்னத்தம்பியைப் பிடிக்கும்போதும் உடன் இருந்தேன். உடுமலைப்பேட்டையில் 15 நாள்கள் சின்னத்தம்பியைப் பிடிக்கப் போகும்போதும் தங்கியிருந்தேன்.

அசோகன்
அசோகன்

அந்தநேரத்தில், நான் பாசமுடன் வளர்த்துவந்த உடல் ஊனமுற்ற பறவை, என்னைக் காணாமல் சாப்பிடாமல் இருந்தது. 15 நாள்கள் கழித்து நான் திரும்பிய உடன், என்னைப் பார்த்த மகிழ்ச்சியில் என் கைகளிலேயே மரணமடைந்தது. இது எனக்கு தாங்கமுடியாத வேதனையை அளித்தது.

அந்தப் பறவை எங்கள் வீட்டில் ஒரு குடும்ப உறுப்பினராக இருந்தது. அதற்காகவே, எங்கிருந்தாலும் இரவு வீட்டுக்கு வந்து விடுவேன். அதற்குத் தனியாக படுக்கை அறை உள்ளது. இன்றும் அதன் நினைவாகவே உள்ளது.

டாக்டர் அசோகன்
டாக்டர் அசோகன்

பறவைகளிடம் மனம் விட்டுப் பேசுங்கள். கூண்டில் அடைக்காதீர்கள். அதன் மொழியைப் புரிந்து கொள்ளுங்கள். எனக்கு சின்னத்தம்பியால் ஏற்பட்ட இழப்பு இதுதான்” என்று வேதனை தெரிவித்துள்ளார்.