Published:Updated:

`250 யானைகளுக்கு உடற்கூறாய்வு செய்திருக்கிறேன், ஆனால்’ -கர்ப்பிணி யானை மரணத்தால் கலங்கிய மருத்துவர்

பாதிக்கப்பட்ட யானை
பாதிக்கப்பட்ட யானை ( Facebook | Mohan Krishnan )

``ஆரம்பத்தில், யானை கர்ப்பமாக இருப்பதை நாங்கள் யாரும் அறிந்திருக்கவில்லை. நான் அதன் இதயத்தைப் பார்த்தபோது, அதில் அம்னோடிக் என்னும் திரவத்தை கவனித்தேன்'' - மருத்துவர்.

கேரளாவில், வெடிமருந்து நிரப்பப்பட்ட அன்னாசி பழத்தை சாப்பிட்டு உயிரிழந்த யானைக்காக, ஒட்டுமொத்த தேசமும் கண்ணீர் சிந்துகிறது. கேரள வனத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவரின் முகநூல் பதிவு மூலம் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. கடந்த மாதம் 27 -ம் தேதி, யானை பலியான நிலையில் அதற்கு அடுத்தநாள், அதாவது மே மாதம் 28-ம் தேதி இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறை சார்பில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட யானை
பாதிக்கப்பட்ட யானை
Facebook | Mohan Krishnan

கேரள வனத்துறை அதிகாரி ஒருவர், இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசுகையில், `காயத்தின் தன்மையைப் பார்க்கிறபோது, அது நிச்சயம் வெடிபொருளாகத்தான் இருக்கும். ஆனால், யானையைக் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் கொடுக்கப்பட்டது என்பதற்கு இன்னும் சான்றுகள் இல்லை. காடுகளை ஒட்டியுள்ள விளைநிலங்களில் இருக்கும் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதைத் தடுக்க பழங்களில் வெடிபொருள்களை மக்கள் வைக்கிறார்கள். அதை யானை தவறுதலாக எடுத்து உண்டு இருக்கலாம். அப்போது அது வெடித்திருக்கலாம். மேலும் யானையின் காயத்தை வைத்து பார்க்கும்போது, இந்தச் சம்பவம் 23 -ம் தேதி அல்லது அதற்கு முன்னர் நடந்திருக்கலாம். 25-ம் தேதி அது வெள்ளியாறு நதியில் இறங்கியது’ என்றார்.

அன்னாசிப் பழத்தில் வெடி வைத்த கொடூரம்.. கர்ப்பிணி யானையின் இறுதி நிமிடங்கள்! -மனதை உலுக்கும் சம்பவம்

` காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள், வனவிலங்குகள் ஊருக்குள் வந்தால் உணவு வகைகளைக் கொடுக்க மாட்டார்கள். அதுவே பழக்கமாகி, மீண்டும் மீண்டும் ஊருக்குள் வரும் என்பதால் பெரும்பாலும் செய்ய மாட்டார்கள். அதை விரட்டத்தான் செய்வார்கள். அதனால் மனிதர்கள் யானைக்கு மருந்தை நிரப்பி உண்ணக் கொடுத்திருப்பார்களா என்பதில் சந்தேகம் இருக்கிறது. ஆனால், விலங்குகளை விரட்ட பழங்களில் வைக்கப்பட்ட வெடிமருந்தை யானை சாப்பிட்டிருக்கலாம்’ என்ற கருத்தும் நிலவுகிறது.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

வனம் மற்றும் வன விலங்குகள் நல அமைப்பின் கூடுதல் செயலாளர் ஆஷா தாமஸ், `ஒருவேளை காட்டுப் பன்றியை கொல்லக்கூட பழங்களில் வெடிமருந்து வைத்திருக்கலாம். ஆனால், அதுவும் குற்றம்தான். அதனால் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்தார். இதனிடையே, இந்த விவகாரத்தில் காவல்துறை சார்பிலும் வனத்துறை சார்ப்பிலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. 'யானையின் மரணத்துக்குக் காரணமானவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்' என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இறந்த யானையின் உடலை கால்நடை மருத்துவர் டேவிட் ஆப்ரகாம் உடற்கூறாய்வு செய்தார். அவர், `அந்த யானை மூச்சுத்திணறல் காரணமாக இறந்திருக்கிறது. நதியில் நின்ற யானையின் நுரையீரல் மற்றும் மூச்சுக்குழாயில் தண்ணீர் நுழைந்திருக்கிறது. அதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கலாம்.

பாதிக்கப்பட்ட யானை
பாதிக்கப்பட்ட யானை
Facebook | Mohan Krishnan

20 ஆண்டுகளுக்கு மேலான எனது கால்நடை மருத்துவ வாழ்க்கையில் 250-க்கும் மேற்பட்ட யானைகளின் உடல்களை உடற்கூறாய்வு செய்துள்ளேன். ஆனால், முதல்முறையாக ஒரு யானையின் கரு என் கைகளில் இருப்பத்தைக் கண்டதும் வார்த்தைகளின்றி நகர்ந்துசென்றேன். ஆரம்பத்தில், யானை கர்ப்பமாக இருப்பதை நாங்கள் யாரும் அறிந்திருக்கவில்லை. நான் அதன் இதயத்தைப் பார்த்தபோது, அதில் அம்னோடிக் என்னும் திரவத்தை கவனித்தேன். அப்போதுதான் அது கர்ப்பமாக இருப்பதை உணர்ந்தேன்’ என்றார் கலங்கிய குரலில்.

அடுத்த கட்டுரைக்கு