Published:Updated:

ரயிலிலிருந்து எஸ்கேப்; 201 கி.மீ காட்டுவழியில் பயணம்! - ஓனரைத் தேடி நாயின் டிராவல்

கலிலுல்லா.ச

உரிமையாளருக்கு ஏற்பட்ட அலர்ஜியால், ரயிலில் ஏற்றி வேறொரு இடத்துக்கு அனுப்பப்பட்ட நாய், ரயிலிலிருந்து குதித்து 201 கிலோமீட்டர் தாண்டி மீண்டும் தன் உரிமையாளரிடமே வந்து சேர்ந்தது.

நாய்
நாய் ( The Siberian Times )

`நாய்கள் நன்றியுள்ளவை’ `மனிதர்களைக்காட்டிலும் உயிரினங்கள் அன்பு நிறைந்தவை’ இப்படியான வாக்கியங்களின் வலிமையை, உயிரினங்களை வளர்த்தவர்களால் மட்டுமே உணரமுடியும். ஏதோ ஒரு எமோஷனல் கனெக்ட் அந்த மனிதருக்கும், அவர் வளர்த்த நாய்க்கும் இருந்துகொண்டேதானிருக்கும். அப்படியான ஒரு எமோஷனல் கனெக்ட் தான்,`மரு’என்று பெயரிடப்பட்ட அந்த நாய்க்கும் இருந்திருக்கிறது. `புல்மஸ்திவ்’ இனத்தைச்சேர்ந்த நாயை, ரஷ்யாவிலிருக்கும்`அல்லா மோர்சோவா’ என்பவர் வளர்த்துவந்தார்.

நாய்
நாய்
The Siberian Times

அல்லா மோர்சோவாவுக்கு நாயால் அலர்ஜி ஏற்படவே, அவர் நாயை வீட்டிலிருந்து வெளியேற்ற முடிவுசெய்தார்.

அதன்படி, அந்த நாயின் பிறப்பிடமான நோவஸிபிர்ஸ்க் என்ற இடத்துக்கு ரயில் ஒன்றில் ஏற்றி அனுப்பிவைத்துவிட்டார். அந்த நாய்க்கு, தன் உரிமையாளரிடமிருந்து பிரிந்துசெல்ல மனமில்லை. அந்த நன்றியுள்ள நாய், ரயில் நிறுத்தம் ஒன்றில் இறங்கி, தப்பி ஓடிவிட்டது. அந்த நாயை கொண்டுசென்ற பணியாளர்,, அதை நீண்டநேரம் பிளாட்ஃபார்மில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

நாய் காணாமல் போனதை அறிந்த உரிமையாளர் மோர்சோவா, நாயின் புகைப்படம், பெயர், இனம் உள்ளிட்ட தகவல்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு தேடுதல் பணியைத் தொடர்ந்தார். சரியாக அன்றிலிருந்து 2 நாள்களுக்குப் பின்னர், மோர்சோவாவின் வீட்டுக்கு அருகில் இருக்கும் தொழிற்சாலை பகுதியில் 'மரு'வை அப்பகுதி மக்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்.

குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் இருந்து தப்பிய மரு, 201 கிலோமீட்டர் மலைப் பகுதிகளில் பயணம்செய்து, அந்தப் பகுதியை வந்தடைந்திருக்கிறது. இதுதொடர்பாக உரிமையாளர் மோர்சோவா பேசுகையில்,``என் நாய், கண்ணீருடன் நின்றிருந்தை உள்ளூர்வாசிகள் பார்த்துள்ளனர். காட்டுப்பகுதியில் பல தடைகளைத்தாண்டி, காயத்துடன் நாய் வீடுதிரும்பியுள்ளது. வனப்பகுதியின் வழியாக வந்ததால், அதன் பாதங்களிலும் காயம் ஏற்பட்டுள்ளது.

காயங்களுடன் பாதங்கள்
காயங்களுடன் பாதங்கள்
The Siberian Times

துப்பாக்கியிலிருந்து வெளியேறும் புல்லட்டைப்போல, நாய் ரயிலிலிருந்து குதித்துவிட்டது. இரவு நேரத்தில் ரயிலின் கதவு திறந்தவுடன், பிளாட்ஃபார்மில் குதித்துவிட்டது. கடுமையான காட்டுப்பகுதியில் பயணித்து, இங்கு வந்திருக்கிறது. அது வீட்டைத்தேடிதான் வந்துள்ளது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன். நாய்கள், மனிதர்களுடன் நெருக்கமாகவே இருக்கும்” என்று நெகிழ்ந்திருக்கிறார்.