Published:Updated:

மனதை ரணமாக்கும் விபத்து- தண்டவாளத்தை கடக்க முயன்ற யானைக்கு நடந்த சோகம்!#video

மேற்கு வங்கத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை, ரயில் மோதியதில் பலத்த காயமடைந்தது.

Accident
Accident

மேற்கு வங்க மாநிலத்தில் ரயில் மோதி யானைகள் விபத்தில் சிக்கும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. ஆக்கிரமிப்புகள் காரணமாக வனத்தில் இருந்து வெளியே வரும் யானைகள் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகின்றன. நிலத்தில் வாழும் உயிரினங்களில் யானை மிகவும் பெரியது. இதன் காரணமாகவே யானைகள் மீது மக்களுக்கு அதிக ஈர்ப்பு இருக்கிறது. அதுவே அவற்றிற்கு பிரச்னைகளாகவும் முடிகிறது. மேற்குவங்கத்தில் ரயில் மோதி விபத்தில் சிக்கிய யானை உடல் முழுவதும் சிராய்ப்புகளுடன், எழுந்து கூட நிற்க முடியாத நிலையில் இருந்தது மனதை ரணமாக்குகிறது.

Accident
Accident

தேயிலை தோட்டத்தில் இருந்து வெளியே வந்த யானை ஒன்று சில்குரியில் இருந்து துப்ரி செல்லும் பயணிகள் ரயில்களில் மோதியது. ஓட்டுநர் ரயிலை நிறுத்த முயற்சி செய்தும் இந்த விபத்து நிகழ்ந்துவிட்டது. தண்டவாளத்தில் யானை சிறிது தூரம் இழுத்துச்செல்லப்பட்டது. இதில் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடம்பில் ஆங்காங்கே சிராய்ப்புகள் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியது. ரயிலின் முன்பகுதி கடுமையாகச் சேதமடைந்தது. ரயில் நிறுத்தப்பட்டதையடுத்து பயணிகள் யானையை நோக்கி வந்தனர். ஆனால் அவர்களால் எந்த உதவியும் செய்ய முடியவில்லை. உடனடியாக வனத்துறை இதுகுறித்து தெரிவித்தனர். அங்கிருந்த சிலர் காயமடைந்த யானை வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து நடவடிக்கை எடுக்கக்கோரி சமூகவலைதளத்தில் பதிவிட்டனர். வனத்துறை மற்றும் மத்திய அமைச்சர்களை டேக் செய்து இந்த வீடியோ ட்விட்டரில் பதிவிட்டனர்.

அந்த வீடியோவில், யானை மிகவும் சிரமப்பட்டு தண்டவாளத்தில் இருந்து வெளியேறுகிறது. அதனால் எழுந்து நிற்க முடியவில்லை. பல்வேறு சிரமங்களுக்கு பிறகு மெல்ல எழுந்து நிற்கிறது. ஆனால் நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. அதற்கு மேல் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. அப்படியே சரிந்து விழுந்தது. சிறிது நேரம் கழித்து மீண்டும் அங்கிருந்து எழுந்து காட்டு பகுதிக்குள் சென்றது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானைக்கு சிகிச்சை அளித்தனர். வனத்துறை அதிகாரிகள் அங்கேயே முகாமிட்டுள்ளனர். வனத்துறை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். ரயில் மோதியதில் உள்காயம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து பேசிய விலங்குகள் நல ஆர்வலர்கள், “ 2004-ம் ஆண்டு இது பிராட் கேஜ்ஜாக மாற்றப்பட்டது. இந்தப்பகுதியில் ரயில்கள் அதிவேகமாக இயக்கப்பட்டது. இதன் காரணமாக யானைகள் ரயில்களில் அடிப்பட்டு இறக்கும் சம்பவங்கள் நடந்தது. இதனையடுத்து இப்பகுதியை கடக்கும் போது ரயிலின் வேகத்தை குறைத்து இயக்க உத்தரவிடப்பட்டது. விபத்துகள் குறைந்ததால் தற்போது கூடுதல் வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இப்பகுதியில் ரயில்களை இயக்குவதன் மூலம் விலங்குகளுக்கு தொந்தரவு ஏற்படுகிறது. வேறு பகுதியில் தண்டவாளங்களை அமைத்து ரயில்களை இயக்கும்படி கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் அரசு அதிகாரிகள் செவிக்கு அவை எட்டுவதில்லை'' என தங்களது ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர்.