Published:Updated:

`இரண்டாவது நாளாகத் தொடரும் பாசப்போராட்டம்! - இறந்த குட்டியின் உடலை நெருங்கவிடாத தாய் யானை

குட்டி இறந்த சோகத்தில் தாய் யானை
குட்டி இறந்த சோகத்தில் தாய் யானை

`தன் குட்டி எழுந்து வந்துவிடும் என்ற நம்பிக்கையில் தாய் யானை குட்டியின் அருகில் இரண்டாவது நாளாக நின்றுகொண்டிருக்கிறது'

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள பள்ளிப்படி பகுதியில் நேற்று இரவு யானையின் பிளிறல் வழக்கத்திற்கு மாறாகக் கேட்டுள்ளது. இந்தப் பகுதி மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். வனத்துறை ஊழியர்கள் வந்து பார்த்தபோது யானைக் கூட்டம் ஒன்று ஆக்ரோஷமாக இருந்துள்ளது.

முதுமலையில் குட்டியுடன் மேய்ச்சலில் ஈடுபட்டுள்ள தாய் யானை
முதுமலையில் குட்டியுடன் மேய்ச்சலில் ஈடுபட்டுள்ள தாய் யானை

அருகில் ஒரு வயது மதிக்கத்தக்க குட்டி யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது. குட்டி இறந்ததை அறியாமல் மீட்க யானைக் கூட்டம் போராடியுள்ளதாக வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

`குட்டி யானை எடுத்து வைத்த முதல் அடி; கொள்ளை அழகு!’ - இணையத்தில் வைரலாகும் வீடியோ

மேய்ச்சலுக்கு வந்த இடத்தில் குட்டி யானை இறந்த காரணத்தைக் கண்டறிய உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வு செய்ய வனத்துறை முடிவு செய்தது. இதையடுத்து, வனத்துறையினர் குட்டி யானை சடலத்திடம் நெருங்க முயன்றனர்.

குட்டி இறந்த சோகத்தில் தாய் யானை
குட்டி இறந்த சோகத்தில் தாய் யானை

ஆனால், மிகுந்த ஆக்ரோஷத்துடன் யானைகள் இருந்ததாலும் நகராமல் தொடர்ந்து குட்டியின் அருகிலேயே இருந்ததாலும் உடலை மீட்க முடியாமல் போனது.

இரண்டாவது நாளாக இன்றும் குட்டியை மீட்க வனத்துறையினர் களமிறங்கினர். மற்ற யானைகள் வேறிடத்திற்கு நகர்ந்து சென்றிருந்த போதும் இறந்த குட்டியின் தாய் யானை குட்டியின் உடல் அருகிலேயே நின்றுகொண்டிருந்தது. வனத்துறையினர் விரட்டினாலும் நகராமல் உள்ளது.

குட்டி இறந்த சோகத்தில் தாய் யானை
குட்டி இறந்த சோகத்தில் தாய் யானை

இந்தச் சம்பவம் குறித்து வனத்துறை ஊழியர்கள், ``சுமார் 18 மாதம் மதிக்கத்தக்க குட்டி யானை கூட்டத்துடன் மேய்ச்சலுக்கு வந்த இடத்தில் சேற்றில் சிக்கி எழுந்திருக்க முடியாமல் இறந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம். மேலும், இறந்த குட்டியின் உடலை செந்நாய்கள் தின்றுள்ளதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. தன் குட்டி எழுந்து வந்துவிடும் என்ற நம்பிக்கையில் தாய் யானை நின்றுகொண்டிருக்கிறது. உடல் அழுகத்தொடங்கினால் தாய் யானை நகர்ந்து விடும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு