Published:Updated:

`அந்த வீடியோ மனதைப் பாதித்தது; இது ஆறுதல் அளிக்கிறது!' - வைரலான யானையின் வீடியோ

மேற்குவங்கத்தில், யானை ஒன்று தண்டவாளத்தைக் கடப்பதற்காக ரயிலை நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது.

Train
Train

மேற்கு வங்கத்தில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெண் யானை ஒன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளானது. இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. ரயில் மோதியதில் யானைக்குக் கடுமையான காயம் ஏற்பட்டது. ரயில் பயணிகள் அளித்த தகவலின் அடிப்படையில், வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். யானையை இரவு பகலாகத் தொடர்ந்து கண்காணித்துவந்தனர். ரயில் மோதியதில் கடுமையான உள்காயம் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், யானை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவத்துக்குப் பல்வேறு தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் வந்து குவிந்தன.

மனதை ரணமாக்கும் விபத்து- தண்டவாளத்தை கடக்க முயன்ற யானைக்கு நடந்த சோகம்!#video
யானை
யானை

வனப்பகுதியில் அதிவேகமாக ரயில்களை இயக்குவதே விபத்துக்குக் காரணம் என விலங்குகள் நல ஆர்வலர்கள் கூறினர். யானைகள் உலாவும் பகுதியில் ரயில்கள் இயக்குவதை நிறுத்த வேண்டும். யானைகளின் நலன்களைக் கருத்தில்கொண்டு ரயில்வே நிர்வாகம் மாற்றுப் பாதையை ஏற்படுத்தி, ரயில்களை இயக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். விபத்து நடந்த பகுதியில் ரயில்களை குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் இயக்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய ரயில்வே, அந்த உத்தரவு 24 மணிநேரம் அமலில் இருப்பதாகவும் விளக்கம் கொடுத்தது.

மேற்குவங்கத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தண்டவாளத்தை கடப்பதற்காக யானை ஒன்று ரயிலை நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது. பயணிகள் ரயில் சென்றுகொண்டிருந்தபோது, தண்டவாளத்தின் நடுவே யானை ஒன்று போய்க்கொண்டிருந்தது. அதைக் கண்ட ரயில் ஓட்டுநர், ரயிலை உடனடியாக நிறுத்தி விபத்தைத் தவிர்த்துள்ளார். இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வைரலாகிவருகிறது. மேற்குவங்கத்தில், யானை - ரயில் மோதல்கள் நடப்பது தொடர்கதையாகிவருகிறது. வனப்பகுதி என்பதால், ரயில்களை மெதுவாக இயக்க ஓட்டுநருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், எதிர்பாராத விதமாக விபத்துகள் ஏற்படுகின்றன. தந்தங்களுக்காக யானைகள் ஒருபுறம் வேட்டையாடப்படும் நிலையில், ரயில்கள் மோதியும் யானைகள் உயிரிழக்கின்றன. மேற்குவங்கத்தில், ரயில்களில் மோதி யானைகள் அதிகம் இறப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது.

இந்நிலையில், யானையைக் காப்பதற்காக ஓட்டுநர் ரயிலை நிறுத்திய வீடியோவை அலிபுர்தார் கோட்ட ரயில்வே அதிகாரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஓட்டுநரின் செயலுக்குப் பலர் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். அதேசமயத்தில், ``விலங்குகளின் வாழ்விடத்தில் ரயில் பாதைகளை அமைக்கும்போது, ​​பறவைகள் மற்றும் விலங்குகளின் உயிரைப் பாதுகாப்பது ரயில் பணியாளர்களின் கடமை” என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ``கடந்த சில நாள்களுக்கு முன்பு, பெண் யானை ஒன்று கடுமையான காயங்களுடன் இருந்த வீடியோவைப் பார்த்தேன். அது, மனதைப் பாதித்தது. இந்த வீடியோ, என் மனதுக்கு நிம்மதியைக் கொடுத்துள்ளது” என்று ஒருவர், அந்தப் பதிவுக்குக் கீழே கமென்ட் செய்துள்ளார்.