Published:Updated:

யானைகளையும் பன்றிகளையும் காவு வாங்கும் பன்றிக்காய்... எப்படி நடக்கிறது, எப்படி தவிர்ப்பது?

யானை
News
யானை

"இந்த வலியோடு என்னால் உயிர்வாழ முடியவில்லை. எப்படியாவது இறந்தால் போதுமே!" என்கிற அளவுக்குச் சித்ரவதையைச் சாகும் நிமிடம் வரை அனுபவிப்பதுதான் மரணங்களிலேயே மிகவும் கொடூரமான மரணம்.

"நாங்கள் அவளைப் பார்த்தபோது நதியில், தலையை நீரில் முக்கியவாறு நின்றுகொண்டிருந்தாள். அவளது ஆறாவது அறிவுதான் மரணிக்கப் போவதாகச் சொல்லியிருக்க வேண்டும். நதிக்குள் நின்ற நிலையிலேயே ஜலசமாதி எய்தினாள்."

அமைதிப் பள்ளத்தாக்கில், வெடிமருந்து மறைத்து வைக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டதால் காயமடைந்த கர்ப்பிணி யானையைக் காப்பாற்ற அமைக்கப்பட்ட தனிப்படையைச் சேர்ந்த ஒரு வனத்துறை அதிகாரி, யானை இறந்துவிட்டது குறித்த தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

வெள்ளியார் நதியில் நிற்கின்ற கர்ப்பிணி யானை
வெள்ளியார் நதியில் நிற்கின்ற கர்ப்பிணி யானை

மே 23-ம் தேதியன்று இந்தப் பெண் யானை வாயில் பெரிய காயத்தோடும் உடைந்த தாடையோடும் அலைந்துகொண்டிருப்பதை அமைதிப் பள்ளத்தாக்கின் வனக் காவலர்கள் கண்டுபிடித்தனர். அந்தக் காயம் இரண்டு வாரங்கள் பழையதாக இருந்தாலும்கூட, அது ஏற்படுத்திய வழி தாங்காமல் யானை ஒற்றையாகத் துடித்துக் கொண்டிருந்ததை வனத்துறையினர் கவனித்திருக்கிறார்கள். மருத்துவர்கள் அதற்குச் சிகிச்சை கொடுக்க முயன்றனர். ஆனால், மருத்துவர்களிடம் நெருங்க அஞ்சி, சில கிலோமீட்டர்கள் நகர்ந்து சென்றுவிட்டது. அது தொடர்ந்து மனிதர்கள் மத்தியில் வராமல் நகர்ந்துகொண்டேயிருந்தது. ஆனால், இரண்டு வாரங்களுக்கு மேலாகக் காயம் ஏற்படுத்திய வலி தாங்க முடியாமல், சாப்பிடவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது அந்தப் பெண் யானை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இறுதியில் ஒன்றும் முடியாமல் போகவே, மே 25-ம் தேதியன்று வெள்ளியார் நதியில் இறங்கி, தலையை நீரில் முக்கியவாறு நின்றுவிட்டது. அதனுடைய உயிர் பிரியப் போகின்றது என்று அதற்குத் தெரிந்துள்ளது. அடுத்து என்ன செய்வதெனத் தெரியாமல், வலியைக் கொஞ்சமாவது ஆற்றிக்கொள்ள நதிநீரில் காயத்தைக் குளிர்வித்துக்கொண்டு அப்படியே நின்றுவிட்டது. நதியிலிருந்து அதைக் கரைக்கு மீட்டுக் கொண்டுவந்து சிகிச்சை கொடுக்க வனத்துறையினர் எவ்வளவோ முயன்றனர். அருகே செல்லும்போதெல்லாம், சீறிய யானை யாரையும் அதனருகே அனுமதிக்க மறுத்துவிட்டது. சுமார் 48 மணிநேரம் நதிக்குள்ளேயே நின்றிருந்த அது, இறுதியாக மே 27-ம் தேதி மாலை உயிரிழந்தது.

இறந்த யானையைக் கரைக்குக் கொண்டுவருகின்றனர்
இறந்த யானையைக் கரைக்குக் கொண்டுவருகின்றனர்

இதுபோன்ற மரணங்கள் யானைகளுக்குப் பெரும் சித்ரவதையைக் கொடுக்கக்கூடியது. "இந்த வலியோடு என்னால் உயிர்வாழ முடியவில்லையே. எப்படியாவது இறந்தால் போதுமே!" என்கிற அளவுக்குச் சித்ரவதையைச் சாகும் நிமிடம் வரை அனுபவிப்பதுதான் மரணங்களிலேயே மிகவும் கொடூரமான மரணம். பலரும் யானைக்கு அன்னாசிப் பழத்தில் வெடியை மறைத்து வைத்துக் கொடுத்துள்ளதாகக் கூறுகின்றனர். எந்தப் பழம் என்பது இன்னும் உறுதியாகவில்லை என்று அதன் சடலத்தைப் பிரேதப் பரிசோதனை செய்தபிறகு மருத்துவர் ஆப்ரஹாம் தெரிவிக்கின்றார். இதுபோன்ற வெடிகள் பொதுவாகப் பன்றிகளுக்கு வைக்கப்படும். பழங்களுக்குள் வெடியை மறைத்து வைத்துவிடுவார்கள். அழுத்தம் கொடுக்கும்போது வெடித்துவிடும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டிருக்கும். பன்றிகள் பழம் என்று நினைத்து வாயில் வைத்துக் கடிக்கும்போது, தலை வெடித்துச் செத்துவிடும். அதனாலேயே அதற்குப் `பன்றிக்காய்’ என்று பெயர் வந்தது. அப்படிப்பட்ட பன்றிக்காயை யானைகளைக் கொல்லவும் பலரும் பயன்படுத்துகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதே அமைதிப் பள்ளத்தாக்கில், ஏப்ரல் மாதமும் இத்தகைய ஒரு மரணம் நிகழ்ந்தது. அதனுடைய மரணமும் இதைப் போலவே இருந்துள்ளது. தாடை உடைந்து நீண்ட நாள்கள் சாப்பிடாமலே இருந்து இறந்துள்ளது. அதற்கும் பன்றிக்காய்தான் காரணமென்று கூறப்படுகிறது.

பல நேரங்களில் பன்றிக்கு வைக்கப்படும் பழத்திற்குள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் பன்றிக்காயின் விபரீதம் தெரியாமல், யதேச்சையாக யானை சாப்பிட்டுவிடுகின்றது. வாய்க்குள்ளேயே பன்றிக்காய் வெடித்துச் சிதறுகின்றது. அப்படிச் சிதறும்போது, நாக்கு, தாடை என்று அனைத்துமே உடைந்து யானையின் வாய்ப் பகுதி முழுக்கச் சிதைந்துவிடும்.

அப்படிச் சிதைந்துவிடுவதாலும் காயம் பலமாக இருப்பதாலும் யானையால் நீர்கூட அருந்தமுடியாது. எதையும் சாப்பிட முடியாமல், பசியுடனே திரிந்துகொண்டிருக்கும் அடிபட்ட யானை இறுதியில் பசியாலும் வலியாலும் மரணிக்கும். இடைப்பட்ட நாள்களில் வனத்துறையினரின் கண்ணில் பட்டால் மருத்துவர்கள் மூலம் சிகிச்சையளிக்கப்படும். காயம் ஓரளவுக்குச் சிறிதாக இருந்தால் குணப்படுத்திவிட முடியும். வெடி பெரியதாக இருந்து தாடை உடைந்திருந்தால் குணப்படுத்துவது மிகவும் சிரமம்.

இதே அமைதிப் பள்ளத்தாக்கில், ஏப்ரல் மாதமும் இத்தகைய ஒரு மரணம் நிகழ்ந்தது. அதனுடைய மரணமும் இதைப் போலவே இருந்துள்ளது. தாடை உடைந்து நீண்ட நாள்கள் சாப்பிடாமலே இருந்து இறந்துள்ளது. அதற்கும் பன்றிக்காய்தான் காரணமென்று கூறப்படுகிறது. அதேபோல், கொல்லம் மாவட்டத்திலுள்ள பத்தனபுரம் வனப்பகுதியில் மற்றுமொரு பெண் யானை ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் தாடை உடைந்த நிலையில் அலைந்து திரிந்துள்ளது. அதைக் கண்ட வனத்துறை யானையை மீட்டு, சிகிச்சையளிக்க முயன்றுள்ளனர். அதன் மந்தையிலிருந்து பிரிந்து தனியே அலைந்து கொண்டிருந்ததைப் பார்த்த, வனத்துறையினர் சிகிச்சை அளிக்க முயன்றபோது மீண்டும் காட்டுக்குள் சென்று தன்னுடைய மந்தையுடன் இணைந்துகொண்டது. ஆனால், சாப்பிட முடியாததாலும் காயம் பலமாக இருந்ததாலும் மந்தையின் வேகத்திற்கு அதனால் ஈடுகொடுக்க முடியவில்லை. அதற்கு அடுத்த நாளே மீண்டும் மந்தையிலிருந்து பிரிந்து தனியே அலையத் தொடங்கியது. அதை மீண்டும் கண்டுபிடித்த வனத்துறை, இயன்ற அளவுக்குச் சிகிச்சை அளித்தபோதும்கூட அதைக் காப்பாற்ற முடியாமல் போனது. அதுவும் பன்றிக்காய் மறைத்து வைக்கப்பட்டிருந்த உணவைச் சாப்பிட்டதால்தான் இப்படியோர் அவலமான மரணத்திற்கு ஆளாக நேரிட்டது.

பன்றிக்காய் வெடி!
ஆண்டுக்குக் குறைந்தது நான்கு யானைகளாவது பன்றிக்காய் வெடிக்குப் பலியாகின்றன.

இத்தகைய பன்றிக்காய் மரணங்கள் காட்டு யானைகள் மத்தியில் தொடர்ந்து நடத்தப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது. யானைகளுடைய மிகப்பெரிய பலவீனம் உணவு. அவற்றை அடிமைப்படுத்த, அவற்றின் பசியைப் பயன்படுத்திக் கொண்டிருந்த மனிதர்கள் அவற்றை வேட்டையாடவும்கூட அதையே பயன்படுத்தத் தொடங்கியதற்கான ஓர் அடையாளம்தான் பன்றிக்காய். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பன்றிக்காயைப் பயன்படுத்தி யானைகளைக் கொல்வது மிகச் சாதாரணமாக நிகழ்ந்துகொண்டிருந்தது. அமைதிப் பள்ளத்தாக்குப் பகுதியின் வனத்துறையினர் எடுத்த தீவிர முயற்சியின் காரணமாகச் சமீப காலமாகக் குறைந்திருந்தது. இருப்பினும், ஆண்டுக்குக் குறைந்தது நான்கு யானைகளாவது பன்றிக்காய் வெடிக்குப் பலியாகின்றன. இப்போது ஏற்பட்டுள்ள கர்ப்பிணி யானையின் மரணம்தான், இந்த மரணங்கள் குறித்துத் தேசியளவில் மக்களைப் பேச வைத்துள்ளது.

கேரளாவில் நடந்துள்ளதைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளேன். நம் நாட்டின் விலங்குகளை அன்போடு நடத்துவோம். இந்தக் கோழைத்தனமான நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டுவோம்.
விராட் கோலி

சுமார் இரண்டு மாதம் கர்ப்பமாக இருந்த பெண் யானை உயிரோடிருந்திருந்தால், அடுத்த 18 முதல் 20 மாதங்களில் ஒரு குட்டியைப் பெற்றெடுத்திருக்கும். மனித இனத்தை நம்பி, அவர்கள் வைத்த உணவைச் சாப்பிட்டதால், இப்போது இரண்டு உயிர்கள் இறந்துவிட்டன. இந்த மோசமான அனுபவம் மனிதர்கள் மீது யானைகளுக்கு இருக்கும் சிறியளவிலான நம்பிக்கையையும் சிதைத்துவிடுகிறது. அதனால்தான், பன்றிக்காயால் பாதிக்கப்பட்ட யானைகள் சிகிச்சையளிக்க வருபவர்களைக்கூட நெருங்காமல், நம்பிக்கையின்றி விலகிச் சென்றுவிடுகின்றது. அந்த அளவுக்கு அவை மனித இனத்தின்மீது நம்பிக்கையற்றுப் போய்விடுவதையே அந்தச் செய்கை காட்டுகின்றது.

கிரிக்கெட் வீரர் விராட் கோலி, பாலிவுட் நடிகர்கள் அக்‌ஷய் குமார், அனுஷ்கா ஷர்மா உட்படப் பலரும் சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்க வேண்டுமென்று குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

"கேரளாவில் நடந்துள்ளதைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளேன். நம் நாட்டின் விலங்குகளை அன்போடு நடத்துவோம். இந்தக் கோழைத்தனமான நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டுவோம்" என்று கிரிக்கெட் வீரர் விராட் கோலி பதிவிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், இறந்த யானையின் படத்தைப் பகிர்ந்து, ``விலங்குகள் மிருகத்தனமின்றியும் மனிதர்கள் மனிதத் தன்மையின்றியும் இருக்கின்றார்கள். பெண் யானைக்கு நிகழ்ந்தது மனிதத்தன்மையற்றது, ஏற்றுக்கொள்ளமுடியாதது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ட்வீட் செய்துள்ளார்.

``தெருநாய்கள் மீது கல் எறிபவர்கள் முதல், ஓர் உயிரைத் துன்புறுத்துபவர்கள் வரை, ஒரேயொரு முகத்தோடு இருங்கள். விலங்குகளில் பலவும் மனிதர்கள்மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளன. இந்தச் சம்பவம் அளவிட முடியாத அளவுக்குக் கொடூரமானது. பச்சாதாபம், இரக்கம் போன்றவை இல்லாதபோது, மனிதர் என்று சொல்லிக்கொள்ளும் தகுதியை நீங்கள் இழக்கின்றீர்கள். இந்தக் கொடூரத்தைச் செய்தவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படும் வரை, இத்தகைய அரக்கர்கள் சட்டத்திற்கு அஞ்சமாட்டார்கள். இது கடினமானதாக இருந்தாலும், சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடித்துத் தண்டிப்பார்கள் என்று நம்புகிறேன்" என்று இன்ஸ்டாகிராமில் மிகவும் காட்டமாகப் பதிவிட்டுள்ள பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா, கேரள முதல்வர் பினராயி விஜயனையும் டேக் செய்துள்ளார்.

View this post on Instagram

#Repost @tedthestoner . We all would urge @cmokerala to find the perpetrators and bring them to justice for this heinous crime. • A pregnant elephant was fed cracker stuffed pineapple by unidentified people in Kerala which exploded in her mouth and damaged her jaw. She walked around the village and finally passed away standing in a river. We keep searching for monsters hoping they would be having the devil's horns on their heads. But look around you, the monsters walk beside you. This elephant was going to give birth 18-20 months later. Even after the elephant was injured, she did not crush a single home or hurt a single human being. She just stood in a river because of the excruciating pain and passed away without hurting a single soul. From anybody who throws stones at a stray dog to anybody hurting a living soul, choose one face. A lot of these animals trust human beings because they have been helped by them in the past. This is cruel beyond measure. When you lack empathy and kindness, you do not deserve to be called a human being. To hurt someone is not human. Just stricter laws won't help. We need a decent execution of the law too. Until the guilty are punished in the worst possible way, these wicked monsters will never fear the law. Though it's a difficult task, I hope they are able to find out the one who committed this crime and punish them accordingly. Artwork by Bratuti.

A post shared by ɐɯɹɐɥS ɐʞɥsnu∀ (@anushkasharma) on

எந்தளவுக்குக் காட்டு நிலங்களை நாம் ஆக்கிரமித்துக் கொண்டே செல்கின்றோமோ அந்த அளவுக்கு, விலங்குகள் வெளியே வரத்தான் செய்யும்.
பைஜூ, காட்டுயிர் ஆர்வலர்

"இறப்பு நடந்துள்ள பகுதியை ஒட்டி விவசாய நிலங்கள் அதிகமாக உள்ளன. பன்றிகளைக் கொல்வதற்காக இதுபோன்ற வெடிகளைப் பயன்படுத்துகிறார்கள். அடிப்படையில், அதற்காகத்தான் இந்த வெடிகளைப் பழங்களில் ஒளித்து வைக்கிறார்கள். அப்படிச் செய்வது சட்டப்படி குற்றம், இருப்பினும் அப்படிச் செய்கின்றார்கள். அதற்காக வைக்கப்படுவதைச் சாப்பிட்டு யானைகளும் பல நேரங்களில் இறக்கின்றன. அங்கு மட்டுமன்றி மலையாத்தூர் வனச்சரகத்திலும் இதனால் பல யானைகள் பலியாகியுள்ளன.

எந்தளவுக்குக் காட்டு நிலங்களை நாம் ஆக்கிரமித்துக் கொண்டே செல்கின்றோமோ அந்த அளவுக்கு, விலங்குகள் வெளியே வரத்தான் செய்யும். இதுகுறித்த புரிதலை மாணவர்கள் முதல் அமைச்சரவை வரை அனைவர் மத்தியிலும் நாம் ஏற்படுத்த வேண்டும். கட்டுப்படுத்துதல், மேலாண்மை செய்தல் ஆகியவற்றையும் கடந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் முக்கியம். அதை முழுமையாகச் செய்யாத வரை, இதுபோன்ற மரணங்கள் நிகழ்ந்துகொண்டுதானிருக்கும்" என்று கூறுகிறார் காட்டுயிர் ஆர்வலரும் வேலி ஆஃப் ஹோப் (Valley of Hope: Moyar and Vultures) நூலின் ஆசிரியருமான பைஜூ.

இதுகுறித்து விசாரிக்க உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ள கேரள முதல்வர், இதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிப்பது சிரமமாயினும் நிச்சயம் கண்டுபிடித்துத் தண்டிப்பதாக உறுதியளித்துள்ளார். யானைகள் உணவுக்காகப் பல கிலோமீட்டர் தூரத்திற்குத் தினமும் நடப்பதால், அவை எந்தப் பகுதியில் இந்த அவல நிலைக்கு உள்ளாகின்றது என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். இந்தப் பெண் யானை அமைதிப் பள்ளத்தாக்கிலிருந்து வெளியே வந்து கிராமங்களைச் சுற்றியே கடந்த சில நாள்களாக வந்துகொண்டிருந்தது. அதன் மெலிந்த உடலும் காயத்தின் நிலையும், காயம்பட்டுச் சுமார் 20 நாள்களாவது ஆகியிருக்கும் என்று கூறுவதால், எந்தப் பகுதியில் பன்றிக்காய் வைக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டது என்று கண்டுபிடிப்பது மிகவும் கடினமான காரியம். இருப்பினும், உள்ளூர் மக்கள் உதவினால் கண்டுபிடித்துவிட முடியுமென்று கேரள வனத்துறை தெரிவித்துள்ளது.

காட்டுயிர்கள்
காட்டுயிர்கள்
Pixabay

இந்தக் கர்ப்பிணி யானை, பாலக்காடு மாவட்டத்திலுள்ள வெள்ளியார் நதியைச் சுற்றியே நாக்கு அறுந்து, தாடை உடைந்த நிலையில் கடந்த சில நாள்களாகச் சுற்றிக் கொண்டிருந்துள்ளது. இது மிகுந்த மன வேதனையைச் சூழலியலாளர்கள் மத்தியிலும் யானை ஆர்வலர்கள் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாள்களாக நடந்துகொண்டிருக்கும் இந்தக் கொடூரச் செயலுக்கு, இதன் மூலமாவது ஒரு முடிவு வரவேண்டும் என்பதே அவர்களுடைய நோக்கமாக உள்ளது. தேசியளவில் இறந்த யானைக்கு நீதி கேட்டு இணையத்தில் கையொப்ப போராட்டத்தை மக்கள் முன்னெடுத்துள்ளனர். அதில், இதுவரை ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் கையொப்பமிட்டுள்ளனர். ஆதரவு பெருகிக்கொண்டே செல்கின்றது.

இதுகுறித்த நடவடிக்கையைக் கேரள அரசு மட்டுமன்றி, தமிழக அரசாங்கமும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கடந்த 2019-ம் ஆண்டில் மட்டுமே பன்றிக்காய் வெடிப்பினால் நீலகிரி மாவட்டத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் நான்கு யானைகள் இறந்துள்ளதாக அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தக் கொடூர மரணங்கள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளைத் தமிழக அரசாங்கமும் மேற்கொள்ள வேண்டும்.