Published:Updated:

`இரவு முழுவதும் முகாம்.. உள்காயம்.. நெஞ்சை உலுக்கிய புகைப்படம்'-பரிதாபமாக உயிரிழந்த மேற்குவங்க யானை!

மேற்கு வங்கத்தில் ரயில் மோதியதில் படுகாயமடைந்த பெண் யானை உயிரிழந்தது.

Accident
Accident

யானைகளுக்கு பொதுவாக ஞாபக சக்தி என்பது மிகவும் அதிகம். ஆக்கிரமிப்புகள் காரணமாக காடுகளின் பரப்பளவு குறைந்துக் கொண்டே வருகிறது. வனத்தில் உணவு, தண்ணீர் போன்றவை கிடைக்காததால் விலங்குகள் நகர்ப்புறங்களை நோக்கி படையெடுக்கின்றன. வனத்திற்கு அருகில் உள்ள விவசாய நிலங்கள், கிராம பகுதிகளுக்குள் உணவை தேடி வருகின்றன. யானைகளுக்கு ஞாபகம் சக்தி அதிகம் என்பதால் தனக்கு உணவு கிடைத்த இடங்களுக்கு தொடர்ந்து படையெடுக்கின்றன. இந்த காலகட்டத்தில் தான் மனித - யானை மோதல்கள் நடக்கின்றன. இதில் சில சமயங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

Accident
Accident

மேற்கு வங்கத்தில் பெண் யானை ஒன்று ரயில் மோதி விபத்தில் சிக்கிய வீடியோ ஒன்று இணையத்தில் அதிகமாக காணமுடிந்தது. தேயிலை தோட்டத்தில் இருந்து வெளியே வந்த யானை தண்டவாளத்தை கடக்கும் போது விபத்தில் சிக்கியது. ஓட்டுநர் ரயிலை நிறுத்த முயற்சி செய்தும் இந்த விபத்து நிகழ்ந்துவிட்டது. அவரின் முயற்சியில் யானை காயங்களுடன் தப்பியது. ரயில் மோதியதில் சில தூரம் யானை இழுத்துச்செல்லப்பட்டது. தண்டவாளத்தில் இருந்த ஜல்லி கற்கள் யானையில் தோலை கடுமையாக சேதப்படுத்தியது. ரயில் மோதியதால் யானைக்கு உள்காயம் ஏற்பட்டது.

அந்த பெண் யானையால் தண்டவாளத்தில் இருந்து எழுந்து நடக்க முடியவில்லை. ஒரு குழந்தையை போல மெல்ல தவழ்ந்து சென்றது. சிறிது நேரத்திற்கு பிறகு முழு திறனையும் பயன்படுத்தி எழுந்து நின்றது. நடைபழகும் குழந்தை தட்டு தடுமாறி எழுந்து நிற்பது போல் அந்த யானை சிரமத்துடன் எழுந்தது. அடுத்த கனமே அப்படியே சரிந்தது. இது பார்ப்பவர்களுக்கு கண்ணீர் வரவைப்பதாக இருந்தது. இந்தக்காட்சிகளை படமெடுத்த பயணிகள் சமூகவலைதளத்தில் பதிவிட்டனர். ரயிலின் முன் பக்கம் பலமாக சேதமடைந்து இருந்தது. இந்த விபத்து தொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர். யானையை பின் தொடர்ந்து சென்று கண்காணித்தனர். உடனடியாக மருத்துவக்குழு வரவழைக்கப்பட்டது. யானைக்கு தேவையான சிகிச்சை அளித்தனர். இரவு முழுவதும் அங்கே முகாமிட்டனர். ரயில் மோதியதில் உள்காயம் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி யானை நேற்று இரவு உயிரிழந்தது.

இதுகுறித்து பேசிய விலங்குகள் நல ஆர்வலர்கள், “ 2004-ம் ஆண்டு இது பிராட் கேஜ்ஜாக மாற்றப்பட்டது. அதன்பின்னர் இந்த வழித்தடத்தில் அதிகமான ரயில்கள் இயக்கப்படுகிறது. ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்ததில் இருந்து யானைகளின் உயிரிழப்புகளும் அதிகமாக நடக்கின்றன. இந்தப்பகுதி யானைகளின் வழித்தடமாக உள்ளது. ரயில்கள் அதிவேகமாக இப்பகுதியில் இயக்கப்படுவதால் யானைகள் விபத்தில் சிக்கிய உயிரிழக்கின்றன என ரயில்வே கவனத்துக்கு கொண்டு சென்றோம். அதன் பின்னர் இந்தப்பகுதியில் ரயில்களை குறைந்த வேகத்தில் இயக்க உத்தரவிடப்பட்டது. இதன் காரணமாக விபத்துகளும் குறைந்தது. தற்போது மீண்டும் இப்பகுதியில் ரயில்கள் வேகமாக இயக்கப்படுகின்றன. வேறு பகுதியில் தண்டவாளங்களை அமைக்கும் படி கோரிக்கை விடுத்து வருகிறோம் என்றனர்.

`இரவு முழுவதும் முகாம்.. உள்காயம்.. நெஞ்சை உலுக்கிய புகைப்படம்'-பரிதாபமாக உயிரிழந்த மேற்குவங்க யானை!

இதுகுறித்து பேசிய வடகிழக்கு மண்டல ரயில்வே அதிகாரிகள், ``வனப்பகுதியில் 15 கி.மீ ரயில்பாதை செல்கிறது. இந்தப்பகுதியை கடக்கும் போது மெதுவாக ரயில்களை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் ரயில்களை மெதுவாக இயக்க வேண்டும் என்ற உத்தரவு அமலில் உள்ளது. வனப்பகுதியில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரயில்களின் வேகத்தை குறைப்பது பற்றியும் ஆலோசனைகள் நடந்து வருகிறது” என்றனர்.

அப்பகுதியில் ரயில்களை இயக்குவது குறித்து ஆய்வு நடத்த 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த பகுதி 4.5 டிகிரி வளைவாக இருந்துள்ளது. ரயிலை இயக்கிய லோகோ பைலட் காயம் ஏற்பட்டுள்ளது அவருக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.