Published:Updated:

`நம்மிடம் தொழில்நுட்ப வசதி இல்லை!'- வால்பாறை குட்டி யானை மரணம் குறித்து வனத்துறை

கோவை மாவட்டம் வால்பாறையில் காலில் காயத்துடன் சுற்றித்திரிந்த குட்டி யானை உயிரிழந்தது.

குட்டி யானை
குட்டி யானை

வால்பாறை அருகே காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நடக்க முடியாமல் இருக்கும் குட்டி யானையை பிரிந்து செல்லாமல் தாய் யானை முகாமிட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம், வால்பாறை அருகே நல்லமுடி டீ எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, 16 யானைகள் அடங்கிய யானை கூட்டம் முகாமிட்டிருந்தது. அந்த யானைகள் ஒன்றன்பின் ஒன்றாக வனப்பகுதிக்குள் சென்றுவிட, தாய் யானை ஒன்றும் குட்டி யானை ஒன்றும் அங்கிருந்து செல்லாமல் நின்று கொண்டிருந்தன. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சென்று பார்த்தபோது குட்டி யானைக்கு காலில் பெரிய கட்டி ஏற்பட்டு, நடக்க முடியாமல் அவதிப்பட்டு தெரியவந்தது.

குட்டி யானை
குட்டி யானை

மேலும், குட்டி யானையைப் பிரிந்து செல்ல மனமில்லாமல் தாய் யானையும், அதனுடன் இருந்து சுற்றி சுற்றி வருவதும் தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தொழிலாளர்கள் தெரிவித்தனர். ஆனால், தாய் யானை அருகில் இருந்ததால் வனத்துறையினர் குட்டி யானையின் அருகே நெருங்க முடியவில்லை. இதனால், கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக குட்டி யானை நகர முடியாமல், அந்தப் பகுதியில் அவதிப்பட்டு வந்தது. முக்கியமாக, உணவு உட்கொள்ள முடியாததால், குட்டி யானை உடல் மெலிந்து மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்து வந்தது. இந்நிலையில், இன்று காலை அந்த குட்டி யானை பரிதாபமாக உயிரிழந்தது.

மூன்று கால்களில் நடக்கும் குட்டி யானை! - வால்பாறையில் தாய் யானையின் பாசப் போராட்டம்

`வனத்துறை நினைத்திருந்தால் குட்டி யானையை காப்பாற்றியிருக்க முடியும். ஆனால், அவர்கள் சம்பிரதாயத்துக்காக களத்துக்கு சென்று பார்த்துவிட்டு, திரும்பிவிட்டனர். அதனால்தான் யானை உயிரிழந்துவிட்டது' என்கின்றனர் சூழலியல் ஆர்வலர்கள்.

குட்டி யானை
குட்டி யானை

இதுகுறித்து ஆனமலை புலிகள் காப்பகத் துணை இயக்குநர் மாரிமுத்துவிடம் கேட்டபோது,``தாய் யானையிடம் இருந்து, குட்டி யானையை பிரிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அந்தக் குட்டி யானைக்கு பிறவியிலேயே இந்த குறைபாடு இருந்திருக்கலாம் அல்லது சமீபத்தில் கூட ஏற்பட்டிருக்கலாம். ஆனால், அதைக் கண்டறிவதற்கான தொழில்நுட்ப வசதி நம்மிடமில்லை'' என்றார்.